வட, கிழக்கிலுள்ள பௌத்த இடங்களை வா்த்தக நிறுவனங்களுக்கு கொடுக்க திட்டம் – அதுரலியே ரதன தேரர்

வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த இடங்கள் எதிர்கால அரசியல் நோக்கத்தில் இனவாத அடிப்படையில் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் இது தொடர்பில் அமைச்சரவையில் ஏதாவது தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளவா என்று சுயாதீன எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் சபையில் கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் பௌத்த சாசன அமைச்சு மற்றும் வன பாதுகாப்பு, வனஜீவராசிகள் அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தாா். அதன்போது ரதன தேரர் மேலும் கூறுகையில்,

“தற்போது வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த இடங்கள் தேசிய மற்றும் வர்த்தகர்களுக்கு இனவாத அடிப்படையில் எதிர்கால அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்படவுள்ளதாக அங்குள்ள தேரர்கள் மற்றும் மக்கள் எங்களுக்கு அறிவித்துள்ளனர்.

இவ்வாறு வடக்கு, கிழக்கிலுள்ள இடங்களை நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் அமைச்சரவையில் தீர்மானம் எடுத்துள்ளதா? இல்லையென்றால் அங்கு தீர்மானங்களை எடுக்காது தான்தோன்றித்தனமாக எவராவது செயற்படுகின்றனரா? தொல்பொருள் இடங்கள் தொடர்பில் அமைச்சரவையில் மாத்திரம் தீர்மானிக்க முடியுமா?

அத்துடன் வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் இடங்களும் பல்வேறு வழிகளில் சிலருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொல்பொருள் இடங்கள் என்பது பொது சொத்துக்களாகும். ஒரு இனம் மற்றும் மதத்திற்குரியது அல்ல. தற்போதைய அரசாங்கம் எதிர்காலத்தில் ஏதாவது தரப்பினரின் வாக்குகளை எதிர்பார்த்து தொல்பொருள் இடங்களை பலவந்தமாக கைப்பற்றுவதாக அறியக்கிடைக்கின்றது.

இந்நிலையில் இலங்கை காணிகள் தொடர்பில் ஆணைக்குழுக்களோ, தேசிய கொள்கையோ கிடையாது. இந்த விடயங்கள் தொடர்பில் இந்த பாராளுமன்றம் அவதானம் செலுத்த வேண்டும். வடக்கு, கிழக்கில் தொல்பொருள் இடங்கள் எத்தனை உள்ளன. அவற்றை ஏதாவது நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? வனப்பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் இடங்களை வடக்கு, கிழக்கில் ஏதாவது நிறுவனத்திற்கு வழங்க திட்டமிடப்படுகின்றனவா? என்று கேட்கின்றேன்” என்றார்.