வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தின் முன்பாக இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்களுக்கான நீதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும் சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் “உங்கள் இராணுவத்தை நம்பி கையில் ஒப்படைத்த எங்கள் பிள்ளைகள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள்?” “காணாமல் போனவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும்,  அச்சுறுத்துத்துவதையும் நிறுத்துங்கள்”,  நாங்கள் கேட்பது இழப்பீடுகளையோ மரணச்சாண்றிதழை அல்ல முறையான நீதி விசாரணையையே! என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் இம்மாதம் 24ஆம் திகதி முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதிவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி அவர்களின் உறவுகளினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.