வலி வடக்கில் நிா்மூலமான நிலையில் ஆலயங்கள்! விக்கிரகங்களும் இல்லை – நேரில் பாா்த்தவா்கள் வேதனை

224 10 வலி வடக்கில் நிா்மூலமான நிலையில் ஆலயங்கள்! விக்கிரகங்களும் இல்லை - நேரில் பாா்த்தவா்கள் வேதனைவலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள ஆலயங்கள் பராமரிப்பு இன்மையால் நிர்மூலமாகி காணப்படுகின்றன. அத்துடன், ஆலயங்களில் இருந்த விக்கிரகங்களையும் காணவில்லை என்று நேற்று அங்கு சென்று திரும்பிய மக்கள் தெரிவித்தனர்.

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக – படையினரின் பிடியிலுள்ள 7 ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை நடத்த இராணுவத்தினர் நேற்று அனுமதி வழங்கி இருந்தனர். இதன்படி, நேற்று காலை 8 மணி முதல் வயாவிளான் மத்திய கல்லூரி முன்பாக ஆலயங்களுக்கு செல்ல வந்தவர்களை இராணுவத்தினர் பதிவு செய்தனர்.

33 ஆண்டுகளின் பின்னர் சொந்த இடங்களிலுள்ள ஆலயங்களுக்கு தரிசிக்க பலரும் ஆவலுடன் சென்றிருந்தனர். பதிவின் பின்னர், மக்களின் உடைமைகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தொடர்ந்து அவர்களின், தொலைபேசிகள் மற்றும் கொண்டுசெல்ல முடியாது என்று படையினர் கூறிய பொருட்களை பதிவின்போதே வாங்கி வைத்துக்கொண்டனர்.

பேருந்துகளில் ஏற்றுவதற்கு முன்னரும் அவர்களை மீண்டும் சோதனையிட்டனர். இதன் பின்னர் இராணுவத்தினரின் வாகனங்களில், அவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர். பலாலி இராஜேஸ்வரி அம்மன் கோயில், நாகதம்பிரான் கோயில், முத்துமாரி அம்மன் கோயில் உள்ளிட்ட 5 ஆலயங்களில் மக்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சென்று திரும்பியவர்கள் ஆலயங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்தும் – நிர்மூலமாகியும் காணபபடுகின்றன என்றும் அங்கிருந்த விக்கிரகங்கள் பலவும் பெயர்த்து எடுக்கப்பட்டதுடன், பல விக்கிரகங்களும் ஆலயத்தில் இல்லை என்றும் வேதனை தெரிவித்திருந்தனர். மேலும், இந்த ஆலயங்களில் நித்திய பூசைகள் நடைபெற அனுமதியளிக்கப்படவும் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதேநேரம், ஆலயத்துக்கு செல்வதற்காக பதிவுகளை மேற்கொண்டவர்களை செவ்வி கண்ட 3 ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய இராணுவத்தினர், அவர்கள் பதிவு செய்த படங்கள், மற்றும் காணொலிகளையும் அழித்தனர். தாங்கள் ஊடகவியலாளர்கள் என்பதற்கான அடையாளத்தை நிரூபித்த பின்னரும் இராணுவத்தினரால் அவர்கள் அச்சுறுத்தப்பட்டு – காணொலிகளையும் அழித்தனர் என்று பாதிக்கப்பட்ட
ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.