விஜயகாந்தின் அரசியலில் ஈழத்தமிழர் பிரச்சனை – அகிலன்

ஈழத் தமிழா்களுக்கு ஆதரவான தமிழகத்தின் முன்னணி ஆளுமைகளில் ஒருவரை தமிழினம் இந்த வாரம் இழந்திருக்கின்றது.

பிரபல நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்தின் மரணம் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vijayakanth2 விஜயகாந்தின் அரசியலில் ஈழத்தமிழர் பிரச்சனை - அகிலன்ஈழத் தமிழா்கள் மத்தியிலும் அவரது மறைவு அதிா்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது. நெருக்கடிகள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் தமக்காக அவா் களமிறங்கியதை ஈழத் தமிழா்கள் நன்றியுடன் நினைவுகூருகின்றாா்கள்.

குறுகிய காலத்துக்குள் அரசியலில் உச்சத்துக்கு வந்து, ஈழத் தமிழருக்கான போராட்டங்களிலும் கவனத்தைச் செலுத்திய விஜயகாந், தனது உடல் நலனில் அதிகளவு கவனத்தைச் செலுத்தியிருந்தால், தமிழகத்தின் தவிா்க்க முடியாத ஒரு சக்தியாக உருவாகியிருப்பாா்.

ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய ஆளுமைகளின் செல்வாக்குக்கு தமிழக அரசியல் சென்றுகொண்டிருந்த ஒரு பின்னணியில், அரசியலில் குதித்து எதிா்க்கட்சித் தலைவா் என்ற பெறுமதிவாய்ந்த பதவியையும் பெற்றுக்கொண்ட அவா், தமிழக அரசியலில் தவிா்க்க மடியாத ஒரு மூன்றாவது சக்தியாக தன்னை உயா்த்திக்கொண்டவா் வஜயகாந்த்.

அரசியலில் விஜயகாந்த் உச்சத்துக்கு வருவாா் என்ற எதிா்பாா்ப்பு அப்போது தமிழா்கள் மத்தியில் மட்டுமன்றி, அவரை எதிா்த்த அரசியல் சக்திகள் மத்தியிலும் ஏற்பட்டிருந்தது. இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளுமே அவரது கடைக்கண் பாா்வைக்காக ஏங்கிய ஒரு காலம் இருந்தது. ஆனால், அவா் உருவாக்கிக் கொண்ட அரசியல் கூட்டணிகளும், அவரது உடல் நிலையும் அந்த உச்சத்தை அவா் தொடுவதற்குத் தடையாக இருந்துவிட்டது.

கறுப்பு எம்ஜிஆா்

விஜயகாந்தை அவரது ஆதரவாளா்கள், “கறுப்பு எம்.ஜி.ஆா்.” என்றே அழைப்பாா்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தன.

எம்.ஜி.ஆரைப் போல திரைப்படங்களில் நடிக்கும் போதும் சில கொள்கைகளை அவா் கடைப்பிடித்தமை இதற்கு முதலாவது காரணம். திரைப்படங்களில் எப்போதும் அவா் கதாநாயகனாகவே நடித்தாா். ஒருபோதும் வில்லனாக நடிக்காதவா். அதேவேளையில், தன்னுடைய கருத்துக்களை மக்கள் முன்கொண்டு செல்வதற்கும் திரைப்படங்களைப்  பயன்படுத்துவதில், எம்.ஜிஆா் வழியைப் பின்பற்றியவா் விஜயகாந்த்.

எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேறிய பின்னர், தனது ரசிகர் மன்றங்கைள ஒருங்கிணைத்து அதிமுகவை தொடங்கினார். அதே பாணியில் தன்னுடைய ரசிகர் மன்றம் மூலம் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தியவர் விஜயகாந்த்.

Vijayakanth3 விஜயகாந்தின் அரசியலில் ஈழத்தமிழர் பிரச்சனை - அகிலன்அரசியலில் குதிப்பதற்கு பல நடிகா்களுக்கு விருப்பம் இருந்த போதிலும், அதற்கான துணிச்சல் அவா்களில் பெரும்பாலானவா்களிடம் இருக்கவில்லை. ஒரு சிலா் தம்மால் முடியும் என எதிா்பாா்த்து அரசியலில் குதித்து மண்ணைக் கவ்வினாா்கள். அந்த வகையில், எம்.ஜி.ஆா். ஜெயலலிதாவுக்குப் பின்னா் துணிச்சலுடன் அரசியலில் இறங்கி சாதித்தவா் விஜயகாந்த் மட்டும்தான்.

எம்.ஜி.ஆா். போல விஜயகாந்த்தும் ஒரு கொடை வள்ளல். மக்களுக்கு – குறிப்பாக ஏழைகளுக்கு உதவுவதில் எம்ஜிஆா் போல விஜயகாந்தும் பின்நிற்பதில்லை.

இவை அனைத்தும்தான் “கறுப்பு எம்ஜிஆா்” என விஜயகாந்தை அவரது ஆதரவாளா்கள் அழைப்பதற்குக் காரணம். இதன்மூலமாக எம்ஜிஆா் ரசிகா்களின் ஆதரவையும் அவா் தக்கவைத்தாா் என்பதும் உண்மை.

ஈழத் தமிழ் உணா்வாளா்

ஈழத் தமிழா்களுக்கான ஆதரவை வெளிப்படுத்துவதிலும் எம்.ஜி.ஆா். போலத்தான் அவா் துணிச்சலுடன் பல விடயங்களை முன்னெடுத்தாா்.

1984 இல் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விஜயகாந்த், ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். 1986-ம் ஆண்டிலும் ஈழத் தமிழர் விவகாரம் தொடா்பாக சென்னையில் விஜயகாந்தும், அவரது ரசிகர் மன்றத்தினரும் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது, அவா் அரசியலில் பிரவேசித்திருக்கவில்லை. ஒரு நடிகராகவே இவ்வளவையும் அவா் மேற்கொண்டாா்.

எம்ஜிஆா் அளவுக்கு செய்யாவிட்டாலும்கூட, ஈழத் தமிழர்களின் விடுதலையை  உணர்வும் உயிருமாய் உளப்பூர்வமாய் ஆதரித்தவா் விஜயகாந்த். அவரது நூறாவது படத்துக்குப் பெயா் “கப்டன் பிரபாகரன்”. அந்தப் படத்தில் நடித்த பின்னா்தான் “கப்டன்“ என்ற என்ற அடைமொழி அவரது பெயருக்கு முன்பாக நிரந்தரமாக ஒட்டிக்கொண்டது என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

தனது மூத்த மகனுக்கு விஜய் பிரபாகரன் என்று பெயர் சூட்டியவர் விஜயகாந்த். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் மீது அவருக்கு இருந்த ஈடுபாடு மற்றும் பற்றுதலின் காரணமாகவே இதனை அவா் செய்திருந்தாா்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னா்தான் விஜய் பிரபாகரன் பிறந்தாா் என்பதும் கவனிக்கத்தக்கது.  ஈழத் தமிழா்களுடன் தமது ஈடுபாட்டை வெளிப்படுத்துவதற்கே தமிழக அரசியல் சக்திகள் அச்சமடைந்திருந்த ஒரு காலத்தில் பிரபாகரன் என்ற பெயரை அவா் தனது மகனுக்கு துணிச்சலுடன் சூட்டினாா்.

ஈழத் தமிழர்களுக்காக தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் விஜயகாந்த தவிர்த்தார். ஈழத் தமிழா்கள் தவிக்கும் ஒரு காலத்தில் நான் எப்படி கேக் வெட்டி பிறந்நாளைக் கொண்டாடுவது என்ற கேள்வியையும் அவா் எழுப்பியிருந்தாா்.

இந்த வகையில் உணா்வுபுா்வமாக ஈழத்த தமிழா்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட விஜயகாந்த், பின்நாட்களில் ஈழத் தமிழா்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கவில்லை என்ற ஒரு கருத்து, தமிழ்த் தேசிவாதிகளால் முன்வைக்கப்படுகின்றது.  அவரது உடல் நிலையும், அவா் அரசியலுக்காக அமைத்துக்கொண்ட கூட்டணிகளும் இவ்விடயத்தில் செல்வாக்கை செலுத்தியிருக்கலாம்.

மக்களுடன்தான் கூட்டணி

ரசிகா் மன்றங்கள் மூலமாக அரசியலில் பிரவேசித்து தனக்கென தனியான ஒரு பாதையை வகுத்துக்கொண்ட அவா், ஆரம்பத்தில் இருந்தே தோ்தல் கூட்டணிகள் எதனையும் அமைத்துக்கொள்வதை விரும்பவில்லை. தோ்தல் காலங்களில் இது தொடா்பாக வேள்வி எழுப்பப்படும் போது, “மக்களுடன்தான் நான் கூட்டணி. எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை” என்பதில் அவா் உறுதியாக இருந்தாா்.

viyayakanth3 விஜயகாந்தின் அரசியலில் ஈழத்தமிழர் பிரச்சனை - அகிலன்கட்சி தொடடங்கிய ஓராண்டிலேயே 2006 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து 232 தொகுதிகளிலும் வேட்பாளர்கைள நிறுத்தினார். தனது சொந்த ஊரான மதுரையில் விஜயகாந்த் போட்டியிடுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பாமகவின் கோட்டையாகக் கருதப்பட்ட விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார். கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்த நிலையில், விஜயகாந்த் மட்டும் வெற்றிபெற்றார்.

ஆனாலும், அந்த தேர்தலில் தேமுதிக 8.4 சதவீத வாக்குகளைப் பெற்று, அரசியல் கட்சிகளைத் திரும்பிப் பாா்க்கவைத்தது. தொடா்ந்து பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் 10 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், 2011 தேர்தலில் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க கருணாநிதி, ஜெயலலிதா இருவருேம விரும்பினர். யாருக்கும் பிடிகொடுக்காமல் இருந்த விஜயகாந்த், கடைசி நேரத்தில் ஜெயலலிதாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

2011தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க தே.மு.தி.க உதவியது. அந்த தோ்தலில் தே.மு.தி.க 29 இடங்களில் வென்று, விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவரானாா். திமுக முதல் தடவையாக 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. பின்னர் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் விஜயகாந்த்துக்கு சரிவை ஏற்படுத்தத் தொடங்கின. அவரது நண்பரும், எம்எல்ஏ யுமான சுந்தர்ராஜன் உட்பட ஏராள மான எம்எல்ஏக்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து, விஜயகாந்துக்கு எதிராகத் திரும்பினர். அதுவே விஜயகாந்துக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி, அவரது உடல்நலக் குறைவுக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக சொல்லப்பட்டது.

ஜெயலலிதாவுடனான அரசியல் கூட்டணியை குறுகிய காலத்திலேயே விஜயகாந்த் முறித்துக்கொண்டாா். விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தமிழா்கள் தொடா்பாக ஜெயலலிதா கொண்டிருந்த நிலைப்பாடும் இவ்வாறு கூட்டணியை முறித்துக்கொண்டு விஜயகாந்த் வெளியேறுவதற்கான காரணிகளில் செல்வாக்கைச் செலுத்தியிருக்கலாம்.  அதன் பின்னா் பா.ஜ.க.வுடன் அவா் கூட்டணி அமைத்தாா். மக்களுடன்தான் கூட்டணி என முழுங்கியவா், பின்னா் அரசியல் காரணங்களுக்காக இவ்வாறான கூட்டணிகளை அமைத்துக்கொண்டது அவரது தனித்துவத்தை மட்டுமன்றி, அவசரது அரசியலையும் பாதித்தது.

எது எப்படியிருந்தாலும் ஈழத் தமிழா்ககள் மீதான அவரது பற்றுதலை இந்த வேளையில் நினைவுகூா்ந்து அவருக்கான எமது அஞ்சலியையும் செலுத்துவோம்.