விடுதலைப் புலிகளிடமிருந்து உதவி பெற்றாா்களாம் – நாம் தமிழா் கட்சியின் 50 இடங்களில் அதிரடி சோதனை

1L விடுதலைப் புலிகளிடமிருந்து உதவி பெற்றாா்களாம் - நாம் தமிழா் கட்சியின் 50 இடங்களில் அதிரடி சோதனைஇந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளிடம் இருந்து, சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் நிதி உதவி பெற்றதாக குற்றச்சாட்டு அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகி சாட்டை துரைமுருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வீடுகள் உள்பட 50 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் யூடியூபர் சாட்டை துரைமுருகன் மூலம் தான் அதிகளவில் பணம் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டதாக சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. அவர் சீமானுக்கு தெரியாமலும் பெரிய அளவில் பணம் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் ஆயுதப் புரட்சிக்கு திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது என்றும் என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்களை தேசிய புலனாய்வு முகமை மற்றும் தமிழக காவல் துறையில் உள்ள கியூ பிரிவும் ரகசியமாக கண்காணித்து வருகிறது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். அப்படி தஞ்சமடைந்த தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புகளுடன் ரகசியமாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்பு வைத்திருப்பதாக என்ஐஏ தெரிவிக்கின்றது.

அதேநேரம், வெளிநாடுகளில் சிதறியுள்ள விடுதலை புலிகள் அமைப்பு ஒன்று சேர பல்வேறு முயற்சிகள் நடப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் வெளியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்தே இந்த சோதனை நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்ததாக அவா்கள் தெரிவித்தாா்கள்.