புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானியா மறுப்பு – நாடு கடந்த அரசின் விண்ணப்பம் நிராகரிப்பு

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் நிராகரித்துள்ளது.

இதன்படி விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்பு மேல்முறையீட்டு ஆணையம் பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு சுயாதீன நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற மூத்த தூதர்கள் தலைமையில் தடை நீக்கத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் தனி நாட்டு கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தது என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய இராச்சியத்தில் தடை செய்யப்படவில்லை, என டுவிட்டரில் தெரிவித்துள்ள அலி சப்ரி அந்த அமைப்பு சாத்வீக வழிமுறைகள் ஊடாக தனது நோக்கங்களை அடைய முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

உலகநாடுகள் தங்கள் மீதான தடையை நீக்கச் செய்வதன் மூலம் தாங்கள் மீண்டும் உயிர்பெறும் நிலையை உருவாக்குவதே விடுதலைப்புலிகளின் சர்வதேச வலைய மைப்பின் மூலோபாயம் அணுகுமுறை என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அகிம்சை வழிகளில் தனது அரசியல் மற்றும் சித்தாந்த இலக்குகளை அடைய முயல்வதால், இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.

2001 மார்ச் 29ஆம் திகதி பிரித்தானிய இராஜாங்க செயலாளர் விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தார். இதனையடுத்து விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கு முன்னரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

2018 டிசம்பர் 18 ஆம் திகதி பயங்கரவாதச் சட்டம் 2000 இன் பிரிவு 4 இன் படி, அட்டவணை இரண்டில் இருந்து விடுதலைப் புலிகள் நீக்கப்பட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உள்துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பித்தது. எனினும், இந்த விண்ணப்பம் 2019 மார்ச் 8 ஆம் திகதி பயங்கரவாத அச்சுறுத்தல்களின் மதிப்பாய்வு செயல்முறையைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை நிராகரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.