விதையும் விருட்சமும் – துரைசாமி நடராஜா

இந்திய வம்சாவளி மக்களுக்கு இவ்வருடம் மிகவும் முக்கியத்துவம் மிக்க வருடமாக அமைந்தது.இம்மக்கள் இலங்கைக்கு வருகைதந்து இவ்வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதே முக்கியத்துவத்திற்கான காரணமாகும்.இப்பூர்த்தியினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நினைவுகூறல் நிகழ்வுகள் இன்னும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.இதில் மலையக மக்களின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை ஆட்சியாளர்களும், எதிர்கட்சியினரும் வழங்கி வருகின்றனர்.எனினும் இவ்வாக்குறுதிகளின் நம்பகத்தன்மையை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

hill country2 விதையும் விருட்சமும் - துரைசாமி நடராஜாதமிழக வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலட்சோபலட்சம் தமிழ் தொழிலாளர்கள் தமிழகத்திற்கு மிக அண்மையிலுள்ள இலங்கையில் மட்டுமன்றி பல தொலை தூரத்தில் உள்ள நாடுகள் மற்றும் தீவுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அவற்றுள் நேவீஸ், அன்ரீல்ஸ், நியூ கலிடோனியா, கிரனிடா, பிஜி, டெமாரா, மொரீசியஸ், தென் ஆபிரிக்கா, அந்தமான், சுமாத்திரா,

ஜமெய்க்கா போன்ற பல இடங்கள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.இவ்வாறு நாடுகள் பலவற்றிற்கும், தீவுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்ட இந்திய வம்சாவளி தமிழ்த் தொழிலாளர்கள் அரசியல், பொருளாதார சமூக ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு பிரித்தானிய பிரான்சிய ஆட்சியாளர்களாலும் மற்றும் உள்நாட்டினராலும் மோசமான சுரண்டல்களுக்கு உள்ளான வரலாறு மிகவும் கொடுமையானதாகும்.

இந்த வகையில் இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியேறிய அல்லது குடியேற்றப்பட்ட இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்கள் ஆரம்பகாலம் முதலே பல்வேறு இன்னல்களையும் அனுபவிக்க நேர்ந்தமை புதிய விடயமல்ல. இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே பல தொழிலாளர்கள் உணவின்மை, நோய் உள்ளிட்ட பல காரணங்களால் உயிரிழக்க நேர்ந்தது.

இலங்கைக்கு வந்தபின்னரும் கூட அவர்கள் உரிய சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் உயிரிழப்புக்களை சந்தித்தனர்.எது எவ்வாறானபோதும் இம்மக்களை கசக்கிப் பிழிந்து அவர்களின் உழைப்பை உச்சகட்டத்தில் உறிஞ்சுவதையே நிர்வாகத்தினர் குறியாகக் கொண்டிருந்தனர். இம்மக்களின் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்டன.

hill country விதையும் விருட்சமும் - துரைசாமி நடராஜா“தமது சொந்த நாட்டிலேயே மிகவும் இழிவான நிலையில் பிறந்து வளர்ந்த தமிழ்க் கூலிக்கு எதனையும் விளங்கிக் கொள்ளக்கூடிய உள ஆற்றல் இல்லை.எனவே அவனை மிஷனரிமாருக்கு பயனுள்ள வகையில் உருவாக்கிக் கொள்ள ஏதாவது கொஞ்சம் சொல்லித்தந்தால் அதுவே போதுமானது.    கொஞ்சம் கூடக்குறைய கல்வியை இவர்களுக்கு வழங்கிவிட்டால் அது இவர்களை தோட்டத் தொழிலுக்கு மட்டுமல்ல வேறு எதற்குமே லாயக்கற்றவர்களாககிவிடும்.கல்வி என்பது அவர்களுக்கு பரிச்சயமில்லாத ஆடம்பரப்பொருள்” என்று கடந்தகால அறிக்கையொன்று வலியுறுத்துகின்றது.

இதேவேளை தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் தொழிற்சங்கங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும் நிர்வாகத்தினர் இடமளிக்கவில்லை.நகர்ப்புறங்களில் தொழிற்சங்கக் கூட்டங்கள் இடம்பெறுகின்றபோது தொழிலாளர்களை அக்கூட்டங்களுக்கு செல்லவிடாது நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்திய சந்தர்ப்பங்களும் அதிகமாகும்.தோட்டங்களுக்குள் தொழிற்சங்கங்கள் உள்நுழைந்தால் அது தமது பணிகளுக்கு இடையூறாகும்.

தொழிலாளர்களின் உரிமைகளுக்கு தொழிற்சங்கவாதிகள் குரல் கொடுக்கின்றபோது தம்மால் நிர்வாகத்தை கொண்டு நடாத்த முடியாது போகும் என்று தோட்ட நிர்வாகத்தினர் அஞ்சினர்.எனினும் கோ.நடேசையர் போன்றவர்களின் கடுமையான முயற்சியின் விளைவாக தோட்டங்களில் தொழிற்சங்க கலாசாரத்திற்கு வலுசேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரதிநிதித்துவம் குறைவு

இவ்வாறாக பல்வேறு அடக்கு முறைகளுக்கும் உள்ளாகி இருந்த இந்திய வம்சாவளி மக்கள் இன்றும் கூட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றனர்.குடியிருப்பு, தொழில்வாய்ப்பு, சமூக நிலைமைகள் என்றெல்லாம் பல துறைகளையும் நோக்குகின்றபோது நிலைமைகள் திருப்தியானதாக இல்லை.இம்மக்களின் சனத்தொகை இலங்கையில்  சுமார் 16 இலட்சமாக காணப்படுகின்ற நிலையில் இச்சனத்தொகைக்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவமும் இல்லாதுள்ளமை நோக்கத்தக்கதாகும்.

இந்நிலையில் பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும், உள்ளூராட்சி மன்றங்களிலும் இச்சமூகம்சார் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.இனவாத சிந்தனையாளர்கள் இம்மக்களுக்கு கிடைக்கும் சொற்ப உதவிகளைக் கூட தட்டிப்பறிப்பதில் குறியாக உள்ளனர்.அள்ளிக் கொடுக்கப்படாத போதும் இம்மக்களுக்கு கிள்ளியும் யாரும் கொடுத்துவிடக் கூடாது என்பதே இனவாதிகளின் நோக்கமாகும்.

nirmala விதையும் விருட்சமும் - துரைசாமி நடராஜாஇத்தனை சிரமங்களுக்கும் மத்தியில் இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருட பூர்த்தியை இந்த ஆண்டில் நினைவுகூறும் நிகழ்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

வேதனையும், சோதனையும் நிறைந்த இம்மக்களின் துன்பத் தொடர்கதை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்த 200 வருட பூர்த்தி எந்தளவுக்கு ஆறுதல் அளிக்கப்போகின்றது என்று தெரியவில்லை.இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருட பூர்த்தியை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் நினைவுகூறல்கள் இடம்பெற்று வருகின்றன.

இதில் இம்மக்களின் அபிவிருத்தி நிலைமைகள்,சாதனைகள், தேவைப்பாடுகள் என்று பல்வேறு விடயங்கள் குறித்தும் கருத்து முன்மொழிவுகள் இடம்பெற்று வருகின்றன.இவற்றுடன் இம்மக்களின் அபிவிருத்தி தொடர்பில் ஆட்சியாளர்கள், எதிர்கட்சிகள், நலன்விரும்பிகள் எனப்பலரும் பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கி வருகின்றனர்.எனினும் இந்த வாக்குறுதிகள் எந்தளவுக்கு  சாதக விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

இந்திய வம்சாவளி மக்களின் 200 வருட பூர்த்தியை நினைவுகூறும் பிரதான இரு வைபவங்கள் இவ்வருடத்தில் இடம்பெற்றன.இவை குறித்து நாம் எமது அவதானத்தை செலுத்த வேண்டிய தேவையுள்ளது.இதனடிப்படையில் நாம் 200 நிகழ்வு கடந்த நவம்பர் மாதத்தில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பலரும் பங்கு கொண்டிருந்தனர்.சிறப்பு அழைப்பாளராக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து சிறப்பித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெருந்தோட்டத் துறையில் புரட்சிமிக்க மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.’நாம் 200 தேசிய நிகழ்வு மலையக மக்கள் ‘இலங்கையர்’ என்ற அடையாளத்துடன் முன்னோக்கி பயணிப்பதற்கான ஆரம்பமாகும்.

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்படும்.அத்தோடு மலையக மக்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் கூடிய 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.மலையக மக்கள் தமது காணிகளில் தேயிலையை பயிரிட்டு அவற்றை தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கும் வகையில் பெருந்தோட்டத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் புதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும்.அதன்படி அங்கு வாழும் மக்கள் காணிகளை வாங்கி அதில் தேயிலையை பயிரிட்டு அவற்றை தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கும் வகையிலான மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.பெருந்தோட்டக் கம்பனிகள் இந்த முன்னுதாரனமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பங்களிப்பு செய்ய வேண்டும்’ என்று ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தி இருந்தார்.

இதேவேளை பல தசாப்தங்களாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மலையக மக்கள் இந்தியாவுடனான உறவுகளை தொடர்ந்தும் பேணி வந்துள்ளனர்.அவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பாலமாகத் திகழ்கின்றனர்.மலையக சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அவசியமான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்குமென்று இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான் மலையகம் மாற்றமடைய வேண்டுமெனில் முதலில் எமது மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்.எம்மத்தியில் உள்ள பிரிவினைகள் மற்றும் பிரச்சினைகளை புறந்தள்ளிவிட்டு நாம் அனைவரும் ஒன்றுபட்டு முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்று கூறியதுடன் ‘நான் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது தீருவேன்’ என்றும் சூளுரைத்தார்.

அரசியல் அமைப்பு

இதேவேளை இம்மாதம் 24 ம் திகதி நுவரெலியாவில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஸ்ணன் தலைமையில்  ‘200இல் மலையகம் மாற்றத்தை நோக்கி” என்ற மாபெரும் நிகழ்வு இடம்பெற்றது.இங்கு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, வரலாற்றில் தொழிலாளர்களாகவே அடையாளப்படுத்தப்படும் மலையக பெருந்தோட்ட மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சிறுதோட்ட உரிமையாளராக்கப்படுவார்கள்.

அதற்கான புரட்சியை எமது ஆட்சியின் முதல் நாளில் இருந்தே ஆரம்பிப்போம்.இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் சமமானவர்கள் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கேற்ப அவர்கள் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பில் அவ்வாறு கூறப்பட்டாலும் தற்போது வரையிலும் யதார்த்தத்தில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும், பலமும் இன்னும் கிடைக்கவில்லை.

மலையக மக்களுக்கான பிரஜாவுரிமையை மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவே (சஜித்தின் தந்தை) வழங்கினார். எமது ஆட்சியில் மலையக மக்கள் உயிர் வாழ்வதற்கான வாழ்வாதார உரிமையை நாம் பெற்றுக் கொடுப்போம்.இன்னமும் லயன் அறைகளில் வாழ்க்கையை நடத்திக் கொண்டும், குறைந்தளவான கல்வி மற்றும் சுகாதார வசதிகளைக் கொண்டும் மிகவும் துயர வாழ்க்கையை வாழும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கு நாம் முன்வந்துள்ளோம்.

எமது ஆட்சியில் முதலாவது காலப்பகுதியில் காணி உரித்துடைய, பொருளாதார பலம் கொண்ட, கல்வி மற்றும் சுகாதார வசதிகளைப் பெற்ற, அனைத்திலும் இயலுமையைக் கொண்ட கௌரவமான வாழ்க்கையை மலையக மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான பயணத்தை ரணசிங்க பிரேமதாசாவின் பெயரில் நாம் ஆரம்பித்து செயற்படுத்துவோம் என்றார்.

இதேவேளை இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் பல வியத்தகு சாதனைகளை மலையக மக்கள் பெற்றுக் கொண்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.மலையகம் 200 என்பது வெறும் வார்த்தையல்ல.அதற்குப் பின்னால் பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் வலிகளும், உயிர் தியாகங்களும் இரண்டறக் கலந்து இந்த மண்ணுக்கு உரமாக அமைந்திருக்கின்றன.எனவே மலையக சமூகமென்பது வாழமுடியாத அடையாளமற்ற இனமல்ல.மாறாக நீண்ட வரலாறு கொண்ட தனித்துவமான தமிழினம் என்ற வகையில் மலையக மக்களுக்கு வலிமை சேர்க்கும் வார்த்தைகளையும் நிகழ்வில் அவதானிக்க முடிந்தது..

இவ்வாறாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகளில் கருத்துக்கள் எதிரொலித்தன.இம்மக்களின் வாழ்வில் பல்துறைசார் அபிவிருத்திகளையும் ஏற்படுத்தப் போவதாக பலரும் இந்நிகழ்வில் வலியுறுத்தியபோதும் இதன் சாத்தியப்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ளன.வழமைபோலவே இந்த வருடமும் வாக்குறுதிகளுடனேயே கடந்து விட்டது.

எதிர்க்கட்சியில் இருக்கும்போது பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்குபவர்கள் ஆட்சிபீடமேறியதும் எல்லாவற்றையும் மறந்து செயற்பட்ட வரலாறுகள் இலங்கையின் வரலாற்றில் அநேகமாகும்.இதுபோன்றே தேர்தல் விஞ்ஞாபனங்களிலும், வரவு செலவு திட்ட முன்மொழிவுகளிலும் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் எழுச்சி கருதி பல்வேறு முன்வைப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.எனினும் தேர்தல் முடிந்த கையோடும், வரவுசெலவு திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரும் அனைத்து வாக்குறுதிகளால் காற்றில் பறக்கவிடப்பட்டு விடுகின்றன.

இதைப்போன்றே 200 வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளிலும் மலையக மக்களின் அபிவிருத்தி கருதி பல்வேறு வாக்குறுதிகள், முன்வைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.இந்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்துவிடாத நிலையில் செயல்வடிவம் பெறவேண்டியது அவசியமாகும்.இதைவிடுத்து ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்று நிலைமைகள் தொடருமானால் இதனால் ஏற்படும் பாதக விளைவுகள் அதிகமானதாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை.எனவே இந்த வருடத்தில் மலையக மக்கள் தொடர்பாக விதைக்கப்பட்ட கனவுகள் விருட்சமாக வேண்டும் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாகும்.