விவசாயிகள் போராட்டம் வலுவிழக்கிறதா ?

இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், இன்று மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேட்டவலம் மணிகண்டன், தெலங்கானா, மகாராஷ்டிரா, பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்களைச் சேர்ந்தவர்கள் இன்று சந்தித்துப் பேசினார்கள் என்று தெரிவித்துள்ள இந்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இதன்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை அவர்கள் அளித்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். “உண்ணாவிரதம் இருப்பது புனிதமானது. நீங்கள் எங்கிருந்தாலும் நமது விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருங்கள். அவர்களுடைய போராட்டம் வெற்றி பெற உழையுங்கள். கடைசியில் விவசாயிகளே வெல்வார்கள்,” என்று கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

இதேவேளை, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவுக்கரம் வழங்கி வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் நடவடிக்கையை “நயவஞ்ச போக்கு” என்று இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் சாடியுள்ளார். மூன்று வேளாண் சட்டங்களில் ஒன்றை கடந்த நவம்பர் மாதம் டெல்லி அரசிதழில் வெளியிட்ட அரசு, வேளாண் விளை பொருட்கள் விற்பனை தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்வதாக பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குறுதி அளிக்கிறது. இப்போது டெல்லி முதல்வர் உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறுவது நயவஞ்ச செயலின்றி வேறில்லை என்று ஜாவடேகர் கூறியுள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 19ஆம் நாளை எட்டியிருக்கும் நிலையில், இந்த போராட்டத்தில் சுமார் 40 விவசாயிகள் சங்கங்கள் பங்கெடுத்திருந்தன.

விவசாயிகளின் போரிக்கைகள் தொடர்பாக அரசு நடத்திய மூன்று சுற்று பேச்சுவார்த்தையின்போது அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அரசு பேச வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்ததால் நான்காவது சுற்று பேச்சுவார்த்தையில் கூடுதலாக சில சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை நடந்த மறுதினமே, குறிப்பிட்ட சில சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து மத்திய அரசு நேரடியாக சில யோசனைகளை தெரிவித்தது. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குறிப்பிட்ட சில சங்கங்களின் நிர்வாகிகளை மட்டும் அழைத்து பேசி மத்திய அரசு முன்மொழிந்த யோசனைகள் அடங்கிய கடிதத்தை அனுப்ப நடவடிக்கை எடுத்தார்.

ஆனால், அந்த யோசனைகளை பெரும்பாலான சங்கங்கள் ஏற்காத நிலையில் திங்கட்கிழமை இந்திய அமைச்சர் நரேநத்திர சிங் தோமரை 10 விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்துப்பேசியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்காமல், தனித்தனியாக ஒரு சிலரிடம் மட்டுமே மத்திய அரசு பேசி வருவது, கூட்டங்களுக்கு அழைக்கப்படாத சங்கங்களின் பிரதிநிதிகள் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி வருகிறது.

இந்தப்பின்னணியில், டெல்லியில் 12ஆம் தேதி பாரத் பந்துக்கு அழைப்பு விடுத்தபோது விவசாயிகள் சங்கங்கள் காட்டிய ஆர்வம், இன்று அழைப்பு விடுத்திருந்த மாவட்ட தலைநகரங்கள் முற்றுகை போராட்டத்தில் காணவில்லை. அதற்கு காரணம், பெரும்பாலான சங்கங்களின் பிரதிநிதிகள் அதற்கு ஆதரவாக இல்லை என்பதுதான் என்று சில விவசாயிகள் சங்கங்கள் கூறியுள்ளன.

இதேவேளை டெல்லி சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளில் ஒரு பிரிவினர் சொந்த ஊர்களில் நடக்கும் போராட்டங்களுக்குச்செல்வதாகக் கூறி இரு தினங்களுக்கு முன்பு புறப்பட்டனர். ஆனால், அவ்வாறு சென்றவர்கள் மீண்டும் தலைநகர எல்லைக்குள் நுழைவதில் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. இதன் மூலம் டெல்லிக்குள் உள்ள விவசாயிகளை பிளவுபடுத்தி அவர்களின் போராட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்த முயலலாம் என்ற கருத்து விவசாயிகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

நன்றி பிபிசி