வேட்பாளர் தொடர்பில் பொதுக் கட்டமைப்பு முக்கிய தீர்மானம்?

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள பொதுக் கட்டமைப்பு சில முக்கிய தீர்மானங்களை ஞாயிற்றுக்கிழமை (28) எடுத்துள்ளது.

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டம் யாழ் நகரிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற போதே பொதுக் கட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து  முக்கிய சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இச் சந்திப்பு தொடர்பாக சிவில் சமூகப் பிரதிநிதியும் பொதுக் கட்டமைப்பின் உறுப்பினருமான அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவித்ததாவது..

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று நடைபெற்றது.

இதன் போது பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்தான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சில தீர்மானங்களை எடுத்திருக்கிறோம்.

அதாவது இந்த பொதுக் கட்டமைப்பிற்கு கீழ் வரக் கூடிய உப கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வேட்பாளர் யார் என்பதை தெரிவதற்கும், தேர்தல் அறிக்கையை தீர்மானிப்பதற்கும், கட்சி சின்னத்தை தீர்மானிப்பதற்குமான உப கட்டமைப்புக்கள் நிதி மற்றும் பரப்புரை நடவடிக்கைகளுக்கான  உபகட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் உரிய கட்டமைப்புக்களால் உரிய நேரத்தில் அந்தந்த விடயங்கள் தொடர்பில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.