13 ஆவது திருத்தம் குறித்து பேசும் தலைவர்களால் மாகாண சபைத் தேர்தலையே நடத்த முடியவில்லை – யாழில் சஜித்

9 1 13 ஆவது திருத்தம் குறித்து பேசும் தலைவர்களால் மாகாண சபைத் தேர்தலையே நடத்த முடியவில்லை - யாழில் சஜித்மாகாண சபைத் தேர்தலைக் கூட நடத்த முடியாத தலைவர்கள் 13 ஆவது திருத்தம் குறித்து எவ்வாறு பேசுவார்கள் என்று நினைத்து கூட பார்க்க முடியாதுள்ளது. வடமாகாணத்திற்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் நல்லிணக்கம், சகோதரத்துவம், பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புணர்ச்சி அவசியம் என்றபடியால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அடுத்த வருடம் முதல் காலாண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 228 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, கொட்டாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 10 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டார்.

பல்வேறு தலைவர்கள் யாழ்ப்பாண மக்களை அரசியல் இசை நாற்காலி விளையாட்டிற்கு உட்படுத்தியுள்ளனர். அவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வந்து வெவ்வேறு இடங்களில் பல்வேறு விடயங்களை செய்கிறார்கள். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் என்பது விசித்திரமான ஒன்றல்ல, அது எமது நாட்டின் சட்டப் புத்தகத்தில் உள்ள விடயமொன்றாகும். யார் அது குறித்து என்ன கதை சொன்னாலும், 13 ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அனைத்து மாகாண சபைகளும் தற்போது செயலிழந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முன்னைய தேர்தல் முறையிலேயே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது மாகாண சபைகள் இயங்காவிட்டாலும் மாகாண சபைத் தவிசாளருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பெயருக்கு மாகாண சபைகள் இருந்தாலும், மக்கள் பிரதிநிதிகள் மூலம் மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய சேவைகள் முன்னெடுக்கப்படவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து சட்ட ரீதியிலான ஏற்பாடுகளையும் செய்து, மாகாண சபைக் கட்டமைப்பின் ஊடாக சேவையை நாடும் அனைவருக்கும் நீதி நியாயத்தை பெற்றுத் தருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டுக்கு அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். அதன் மூலம் ஸ்மார்ட் நாடு உருவாக்கப்பட வேண்டும். இதற்கு ஸ்மார்ட் கல்வி நடவடிக்கை அவசியமாகும். இங்கு சிங்களம் மட்டும், தமிழ் மட்டும் என கூறிக்கொண்டு இருக்காமல், ஆங்கில மொழி மற்றும் கணினி தகவல் தொழில்நுட்ப கல்வியை ஊக்குவிக்க வேண்டும். உலகின் சர்வதேச தொழிலாளர் சந்தையின் தேவைக்கு ஏற்றவாறு பாடத்திட்டம் வகுக்கப்பட வேண்டும். அத்துடன், யாழ்.மாவட்டத்தையும் வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளையும் அறிவின் மையங்களாக மாற்றுவது யதார்த்தமாக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.