22 ஆவது திருத்தம் இப்போதைக்கு நாடாளுமன்றம் வராது – அமைச்சர் மகிந்த அமரவீர

அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் தொடர்பான யோசனை இப்போதைக்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படப் போவதில்லை என்றும், ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான காலத்திலேயே அதனை நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மகிந்த அமரவீர இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடக்கும். அது கூடிய விரைவில் நடக்கும். அதனை நிறுத்த எவரும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. அரசியலமைப்பு திருத்தம் இதனுடன் தொடர்புபடையது அல்ல. ஏற்பட்ட தவறை திருத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது இந்தத் தேர்தலின் பின்னரும் நடக்கலாம்” என்று தெரிவித்தாா்.

அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், “அடுத்துவரும் நாடாராளுமன்ற அமர்வுகளின் போது இது தொடர்பில் கலந்துரையாட தினமும் தீர்மானிக்கப்படவில்லை. வர்த்தமானியில் அறிவிக்கப்படவும் போவதில்லை. அது பிற்பட்ட காலத்தில் நடக்கும். இதில் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க காரணமாகும் எந்தவொரு விடயமும் அதற்குள் கிடையாது. தேர்தல் ஒத்திவைக்கப்படாது. அதற்கு நாங்கள் இடமளிக்கவும் மாட்டோம்” என்று தெரிவித்தாா்.