5 கட்சி கூட்டணியிலிருந்து விலகினால் மட்டுமே செல்வத்துக்கு குழு தலைமைப் பதவி – தமிழரசுக் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மட்டும்தான் இருக்கின்றோம், ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் இல்லை என்ற நிலைப்பாட்டை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெளிவுபடுத்தி உறுதிப்படுத்தினால் மட்டுமே கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தலைமை பதவியை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நேற்றிரவு நிகழ்நிலையில் கூடித் தீர்மானித்தது.

இது விடயத்தில் நேற்றுப் பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தமிழரசு கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எடுத்த நிலைப்பாட்டை நேற்றிரவு கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு முழு அளவில் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது.

நேற்றைய அரசியல் குழு கூட்டம் பற்றி நேரத்துடனேயே தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நேற்றிரவு நிகழ்நிலை கூட்டம் ஆரம்பமான நேரத்தில் இருந்து பல தடவைகள் தொலைபேசி மூலம் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கப்பட்டும் அது பலனளிக்கவில்லை என்று தெரியவருகிறது. அவர் கூட்டத்தில் பங்கு பற்றவில்லை. மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவரராஜாவும் இக்கூட்டத்தில் பங்குபற்றவில்லை.

கட்சியின் பெ கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம், சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், குலநாயகம், குகதாசன், சுமந்திரன், சிறிதரன், கலையரசன், துரைராஜசிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்ற பலர் இக்கூட்டத்தில் பங்குபற்றினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லாத வேறு ஒரு கூட்டமைப்பில் அங்கம் பெற்றிருக்கின்ற ஒருவருக்கு தமிழரசுக் கட்சியின் பெயரிலான நாடாளுமன்றக் குழுவின் தலைமைப் பதவியை வழங்கக கூடாது என்று உறுப்பினர்கள் அநேகமாக எல்லோரும் கருத்துத் தெரிவித்தனர். ஆயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினின்றும் பிரிந்து, தனித்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு எடுத்திருந்ததால், அதனால் ஏற்பட்ட முரண்பாடுகளினால் இன்றைய நிலைமை தோன்றியிருக்கின்றது என்பதைக் கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் சுட்டிக்காட்டினர். அந்தப் பின்னணியில் இந்த விடயத்தில் மத்திய குழுவின் கருத்தை அறிந்து, அதன் அடிப்படையில் இறுதித் தீர்மானத்தை எடுப்பது என நேற்றிரவு அரசியல் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் அறியவந்தது.