சிங்கள- பௌத்த தொல்பொருள் மட்டும் தொல்பொருட்களாக கருதிவிட முடியாது-அகிலவிராஜ் காரியவசம்

சிங்கள- பௌத்த தொல்பொருள் மட்டும் இங்கு தொல்பொருட்களாக கருதிவிட முடியாது. அது இன, மதங்களுக்கு அப்பாற்பட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம்  தெரிவித்துள்ளார்.

மேலும் தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டும் சொந்தமான விடயமல்ல என்றும்  அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுவார்த்தையை இன்று சில அரசியல்வாதிகள் விமர்சித்து வருகிறார்கள்.

2500 வருட வரலாறு கொண்ட எமது நாட்டில், எங்கு தோண்டினாலும் புராதனச் சின்னங்கள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கும். மலசலகூடத்திற்காக குழியொன்றை தோண்டினால்கூட, இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.

தொல்பொருள் சின்னங்கள் காணப்படும் இடங்களை நாம் நிச்சயமாக பாதுகாக்க வேண்டும். அதேநேரம், தற்போது வாழும் மக்களையும் அது பாதிக்காத வகையில் எமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றார்.