குருந்தூர் மலை, திருகோணமலை திரியாய காணி விவகாரம் : நிபுணத்துவ குழு அமைத்து விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு

தொல்லியல் நடவடிக்கைகளுக்கு என கூறி  முல்லைத்தீவு குருந்தூர் மலை மற்றும் திருகோணமலை திரியாய விகாரை பகுதியில் 5,000 ஏக்கர் நிலப்பரப்பை கோரியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்பிக்க விசேட நிபுணர் குழுவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். 

இதனடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை (16) இந்த விசேட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி jகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நேற்று வியாழக்கிழமை (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் 2000 ஏக்கர் நிலப்பரப்பும், திருகோணமலை திரியாய விகாரைக்கு என 3000 ஏக்கர் நிரப்பரப்பையும் தொல்பொருள் தினைக்களம் கோரியுள்ளது.

இந்நிலையில், வன வள பாதுகாப்பு தினைக்களம் உட்பட பல துறைகளுக்கு சொந்தமான பெரும் நிலப்பரப்புகளை தொல்லியல் நடவடிக்கைகளுக்கு என்று கோரப்படுகின்றமையின் அடிப்படைதன்மை குறித்து கண்டறிந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் குறித்த காணிகள் தொல்லியல் நடவடிக்கைகளுக்கு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவை தொல்லியல் பகுதிகள் எனவும் ஜனாதிபதி செயலணி உறுதிப்படுத்தியுள்ளன.

எனினும், பௌத்த தலைமைப்பீடமாக கருதப்படும் அநுராதப்புரம் மஹா விகாரைக்கோ அல்லது நீர் பூங்காக்கள் நிறைந்த  விசேட மரபுரிமைகனை கொண்ட சீகிரியாவுக்கு கூட இல்லாத காணிகளை, குருந்தூர் விகாரைக்கும், திரியாய விகாரைக்கும் கோருவதற்கான நோக்கத்தின் உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.