ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை இன்று (19) ஜெனிவாவில் ஆரம்பமாவதுடன், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை புதன்கிழமை (21) வாசிக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானதுடன், அன்றைய தினமே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை வாசிக்கப்பட்டது.

அதுமாத்திரமன்றி அக்கூட்டத்தொடரில் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்ட 51/1 என்ற புதிய தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விசேட தீர்மானங்களோ அல்லது விவாதங்களோ உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்று   ஆரம்பமாகி, எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடரில் நாளை மறுதினம் புதன்கிழமை ஜெனிவா நேரப்படி பி.ப 3 மணிக்கு (இலங்கை நேரப்படி மாலை 6.30 மணி) இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை வாசிக்கப்படவுள்ளது.

இவ்வறிக்கையில் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற 51/1 தீர்மானத்தின் பிரகாரம் நாட்டின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் மோசடிகள் என்பன மனித உரிமைகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து உறுப்பு நாடுகள் தமது கரிசனைகளை வெளிப்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டாலும், இம்முறை இலங்கை தொடர்பில் புதிய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படமாட்டாது.

அதேபோன்று கடந்த கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த நிலையில், இம்முறை அமர்வில் ஜெனிவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தலைமையிலான குழு பங்கேற்கும்.

அதன்படி, இம்முறை ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ‘ஏற்கனவே கூறியதுபோல இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் மற்றும் அதனுடன் தொடர்புடைய மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றிவருகின்றோம். நாட்டில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கைக்கு பேரவை அமர்வில் பங்கேற்கும் எமது பிரதிநிதிகள் பதிலளிப்பார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.