இலங்கைக்கான புதிய ஒத்துழைப்பு செயற்திட்டம் : உலக வங்கி நடவடிக்கை

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிதியியல்துறை உறுதிப்பாடு ஆகியவற்றுக்கு உதவும் நோக்கில் உலக வங்கியினால்  புதிய ஒத்துழைப்பு செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

இந் நிலையில், உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடாட்-ஸேர்வோஸ், ‘இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியின் தீவிரத்தன்மை முன்கூட்டியே எதிர்பார்க்கப்படாததாகும். ஆனால் இது நாட்டின் பொருளாதாரத்தை மீளச்சீரமைப்பதற்கு அவசியமான ஆழமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பை வழங்கியிருக்கின்றது.

இந்த நிலைமாற்றத்துக்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு மீட்சி செயற்திட்டம் உதவும். இச்செயற்திட்டமானது விரைவான பொருளாதார உறுதிப்பாடு, கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள், வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரின் பாதுகாப்பு ஆகியவற்றில் விசேட அவதானம் செலுத்துகின்றது.

இம்மறுசீரமைப்புக்களின் ஊடாக நாட்டை மீண்டும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்திப்பாதையில் கொண்டுசெல்லமுடியும்’ என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிதியியல்துறை உறுதிப்பாடு ஆகியவற்றுக்கு உதவும் நோக்கில் உலக வங்கியினால் எதிர்வரும் 2024 – 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான புதிய ஒத்துழைப்பு செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இலங்கையின் பொருளாதார மற்றும் நிதியியல்துறை ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தும் அதேவேளை, அனைவரையும் உள்ளடக்கியதும் மீண்டெழக்கூடிய தன்மை வாய்ந்ததுமான மீட்சிக்கான வலுவான அடித்தளத்தை இடுவதை முன்னிறுத்திய இலங்கைக்கான புதிய ஒத்துழைப்பு செயற்திட்டம் தொடர்பில் கடந்த வாரம் உலக வங்கிக் குழுமத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சபையினால் ஆராயப்பட்டது.

மக்கள்மீது மிகமோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை முயற்சித்துக்கொண்டிருக்கும் பின்னணியில், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்கும் ஆழமான மறுசீரமைப்புக்கள் அவசியமாகவுள்ள சூழ்நிலையிலேயே இப்புதிய ஒத்துழைப்பு செயற்திட்டம் கொண்டுவரப்படுவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த 2021 – 2022 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கையின் வறுமை வீதம் 13.1 இலிருந்து 25 சதவீதமாக இருமடங்கால் அதிகரித்திருப்பதாகவும், 2023 ஆம் ஆண்டில் அது மேலும் 2.4 சதவீதத்தினால் அதிகரிக்குமென எதிர்வுகூறப்பட்டிருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான புதிய ஒத்துழைப்பு செயற்திட்டத்தை எதிர்வரும் 2024 – 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இருகட்டங்களாக நடைமுறைப்படுத்துவதற்கு உலகவங்கி திட்டமிட்டுள்ளது.

முதல் 18 – 24 மாதங்களில் மேற்குறிப்பிட்ட மறுசீரமைப்புக்கள் மற்றும் சர்வதேச கடன்சலுகைத்திட்டம் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர், உலகவங்கியின் ஒத்துழைப்பு செயற்திட்டமானது புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய நீண்டகால அபிவிருத்தியை முன்னிறுத்திய முதலீடுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும்.

இலங்கைக்கான இப்புதிய ஒத்துழைப்பு செயற்திட்டமானது உலக வங்கி, சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனம் மற்றும் பல்தரப்பு முதலீட்டு உத்தரவாத முகவரகம் ஆகிய கட்டமைப்புக்களினதும், ஏனைய அபிவிருத்திப்பங்காளிகளினதும் மிகநெருக்கமான ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படும்.