பௌத்த சாசனத்தை அவமரியாதைக்கு உள்ளாக்கும் பௌத்த தேரர்ககளுக்கு எதிராக நடவடிக்கை-அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

பௌத்த தேரர்கள் எனக் கூறிக் கொண்டு மிகவும் இழிவான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வழிமுறை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பௌத்த சாசனத்தை அவமரியாதைக்கு உள்ளாக்கும் பௌத்த தேரர்களை தொடர்ந்தும் அந்த ஸ்தானத்தில் வைத்திருக்கக் கூடாது என புத்தசாசன, கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

மாககல்கந்தே சுதந்த தேரர் அண்மையில் ஜப்பானிலுள்ள விகாரையொன்றில் இளைஞர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த தேரர் ஏனைய நாடுகளில் விகாரைகளை அமைப்பதாகக் கூறி பணத்தை சேமித்த இவ்வாறான செயல்களிலும் , மோசடிகளிலும் ஈடுபடுவதாக ஆதரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணக்கத்துக்குரியவர்களாக மக்களால் மதிக்கப்படும் இவ்வாறான நபர்கள் தொடர்பில் புத்தசாசன அமைச்சர் என்ற ரீதியில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளீர்கள் என  ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,

புத்த சானக பாதுகாப்பு அதிகாரசபையின் நிறைவேற்றுக்குழுவுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. இதன் போது பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மகா சங்கத்தினரின் ஆலோசனைக்கமைய பௌத்த தேரராவதற்கான வயதெல்லை குறித்த இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.

சில பௌத்த தேரர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடுகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடியவையல்ல. எனவே இவ்வாறான தேரர்களுக்கு எதிராக அந்தந்த நிக்காயாக்களின் ஊடாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பௌத்த சாசனத்துக்கு தகுதியற்ற , அதனை அவமதிக்கின்ற இவ்வாறான நபர்களை தொடர்ந்தும் தேரர்கள் என்ற ஸ்தானத்தில் வைத்திருப்பது பொறுத்தமற்றது என்பதே எனது நிலைப்பாடாகும் என்றார்.