பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வழக்குகள் அதிகரிப்பு

இலங்கையின் உயர் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சுமார் 30,000 வழக்குகளில் பத்தாயிரம் வழக்குகள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரானவை  என நீதி அமைச்சர் கலாநிதி விஜேயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இந்தளவு உயர்வடைந்தமை குறித்து  வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயலொன்று இடம்பெறும் போது அதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவது முக்கியமானது. இருந்த போதிலும் அதனை விடவும் இவ்வாறான குற்றச்செயல் இடம்பெறுவதை தடுப்பதும் முக்கியமானதாகும்.

இதுவரையில், நாட்டு நீதிமன்றங்களில் பதினொரு இலட்சத்து இருபதாயிரம் வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இது நீதிமன்ற கட்டமைப்புக்கு தாங்கிக் கொள்ளக்கூடிய அளவில் இல்லை. இணக்க சபைகளினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பிணக்குகளும் நீதிமன்ற கட்டமைப்பில் விசாரணை செய்யப்பட்டிருந்தால், இந்த வழக்குகளின் எண்ணிக்கை மேலும் மூன்று இலட்சத்தினால் அதிகரித்திருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.