தமிழர்களின் போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமைக்கானது- மட்டு.நகரான்

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகப்பகுதியாகும்.தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் தங்களை தாங்களே ஆளவேண்டும்,இந்த நாட்டில் தமிழர்களும் ஒரு இனமாக தலைநிமிர்ந்துவாழவேண்டும்,அவர்கள் சுய கௌரவத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே கடந்த 70வருடத்திற்கு மேலாக  தமிழர்கள் போராடிவருகின்றனர்.
தமிழர்களின் ஆயுதப்போராட்டம் என்றாலும் சரி அகிம்சை ரீதியான போராட்டமாகயிருந்தாலும் சரி இராஜதந்திரபோராட்டமாகயிருந்தாலும் சரி தமிழர்களின் போராட்டம் என்பது தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமாகவிருந்ததே தவிர வீதிகளுக்கோ,தொழிற்சாலைகளுக்கோ விமான,ரயில் போக்குவரத்துகளுக்கோ நடைபெறவில்லையென்பதை ஈழத்தமிழர்களும் உலக மக்களும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
ஆயிரக்கணக்கான போராளிகள் கழுத்தில் சயனைட் வில்லைகளை தொங்கவிட்டும் உடலில் குண்டுகளை கட்டிச்சென்று வெடிக்கவைத்தும் தமது உயிர்களை எல்லைகளில் நின்று இழந்ததும்,பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது உயிர்களையும் உடமைகளையும் இழந்தது இந்த அபிவிருத்திக்கும் பகட்டுக்கும் அல்ல.அத்தனை இழப்புகளும் தமிழர்களின் உரிமைக்காகவும் இந்த மண்ணில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக மட்டுமேயாகும்.
ஆயுதப்போராட்டம் வீறுகொண்டபோதெல்லாம் பல கஸ்டங்களை தாங்கியவாறு போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கியவர்கள் இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதற்காக போராடினார்கள் என்ற நோக்கத்தினை மறந்துசெயற்படுவது கவலைக்குரிய விடமாயமாக மாறுகின்றது.
இன்று வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் சூழ்நிலையினை தமக்கு சார்பாக பயன்படுத்தி வடகிழக்கு மாகாணத்தினை தமக்கு சார்பாக பயன்படுத்தி தமிழர்களின் உரிமை ரீதியான போராட்டங்களை நசுக்குவதற்கு அல்லது தமிழர்களின் உரிமை ரீதியான கோரிக்கைகளை வலுவிழக்கச்செய்வதற்கு பாரியளவிலான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் அண்மைக்காலமாக அவதானிக்கப்பட்டுவருகின்றது.
வடகிழக்கு மாகாணத்தினை தமது மாநிலங்கள் போன்று மாற்றி தமது செயற்பாடுகளை இந்தியா முன்னெடுத்துவரும் அதேநேரம் பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் கிழக்கு மாகாணத்தினை தமக்கு சார்பானதாக மாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது.
இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பாரிய கஸ்டங்களை எதிர்நோக்கிய நிலையில் இலங்க அரசுக்கு கைகொடுத்த இந்த நாடுகள் என்ற காரணத்தினால் இலங்கை அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அனுமதியை மறைமுகமாக வழங்கியுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.
வெறுமேன இந்தியா,சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஊடுறுவல் என்பதை நாங்கள் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது.இந்தியா என்பது தமிழர்களின் தொப்புள் கொடி உறவு நாடு.தமிழர்களின் நலனில் அக்கரைகொண்டிருக்கும் நாடு என்றெல்லாம் நாங்கள் நோக்கினாலும் வடகிழக்கு தமிழர்களின் தாயகப்பகுதியாகும்.
இங்குள்ள தமிழர்கள் தனித்துவ அடையாளங்களையும் கலாசாரங்களையும் கொண்ட தமிழர்கள்.அவர்களை தனித்துவமாகவும் அவர்களின் அடையாளங்களுடனும் வாழவைப்பதே இந்தியா போன்ற நாடுகள் தமிழ் மக்களுக்கு செய்யும் நன்மையாக அமையும். மாறாக குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க நினைக்கும் வகையில் செயற்படுவது என்பது நொந்துபோயுள்ள மக்களை மீண்டும் துன்பங்களுக்குள் தள்ளும் செயற்பாடுகளாகவே பார்க்கவேண்டியுள்ளது.
அண்மைக்காலமாக வடகிழக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்தியா போன்ற நாடுகள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் பல்வேறு சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திவருகின்றது.அண்மையில் மட்டக்களப்பு நடைபெற்ற சிவில் சமூக அமைப்புகளுடனான கலந்துரையாடலின்போது சில கருத்துகளும் பிரதியேகமாக முன்வைக்கப்பட்டன.அதாவது இந்தியாவுடன் வடகிழக்கு மாகாணத்தினை இணைத்து சில செயற்றிட்டங்களை இந்தியாவும் தமிழ் நாடும் முன்னெடுக்கவுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.இவ்வாறான கருத்துகளை நாங்கள் வெறும் கருத்துகளாக கடந்துசெல்லமுடியவில்லை.அதற்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் இன்று கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருப்பதை காணமுடிகின்றது.
ஏதோ இந்தியா வடகிழக்கு தமிழ் மக்களை பாதுகாக்கப்போகின்றது என்ற வகையில் முன்னெடுக்கப்படும் கருத்துகள் அல்லது செயற்பாடுகள் எதிர்காலத்தில் வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமை ரீதியான விடயத்தினையும் தமிழ் தேசியத்தினையும் அழிக்கும் வகையிலான நடவடிக்கைகளாகவே பார்க்கவேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்திற்கான ஆளுனராக பௌத்த இனவாத சக்திகளின் எந்த எதிர்ப்பும் இல்லாமல் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமையும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படவேண்டியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கடந்த ஆளுனராகயிருந்த அனுராதா ஜகம்பத் மீது கிழக்கில் உள்ள சிங்கள மக்கள் அதீத நம்பிக்கைகொண்டிருந்தனர். அத்துடன் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளும் அவர் மீது அதீத நம்பிக்கைகொண்டிருந்ததுடன் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அத்துமீறல்களும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டுவந்தது.
இந்த நிலையில் தீடீர் என குறித்த ஆளுனர் தூக்கப்பட்டு புதிய ஆளுனராக ஒரு தமிழரான ஒருவர் கிழக்கில் ஆளுனராக கொண்டுவந்தபோது இந்த பேரினவாத சக்திகள் எதுவும் வாய் திறக்கவே இல்லை.கடந்த காலத்தில் கிழக்கில் சிங்கள முதலமைச்சர் கொண்டுவரவேண்டும் என்ற வகையில் செயற்பட்ட கடும்போக்கு சிங்கள சக்திகள் கூட வாய்திறக்கவில்லையென்னும்போது இது தொடர்பான சந்தேகங்கள் தமிழ் மக்கள் மனதில் அச்சத்தினை ஏற்படுத்தியது.
கடந்த காலத்தில் கிழக்கில் முன்னெடுக்கப்படும் பல்வேறு செயற்பாடுகள் தமிழ் மக்கள் மனதில் ஏற்கனவே பல சந்தேகங்களை ஏற்படுத்திவருகின்றது.
மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் மக்களின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிர்மாணிக்கப்படும் தொழிற்சாலை தொடர்பில் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த எதிர்ப்புகள் இன்று இல்லாமல்செய்யப்பட்டு தொழிற்சாலை வேலைகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த தொழிற்சாலையானது இந்தியாவின் பல மாநிலங்களில் மக்களினால் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்ட தொழிற்சாலை.அதாவது நூல்களுக்கு சாயம் இடும் தொழிற்சாலை.இதிலிருந்து வெளியேறும் கழிவுகளை கடலுக்குள் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக இந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன.இந்த தொழிற்சாலைகள் இயங்கு நிலையேற்படுமானால் கடல் பாரியளவில் மாசுபடும் நிலைமை உருவாகலாம் என்பதுடன் தொழிற்சாலைக்கான தண்ணீர் அதிகளவில் பெறப்புடும்போது எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படலாம் என்ற வகையிலான கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.
மறுபுறத்தில் பாகிஸ்தான் முஸ்லிம்களின் பிரதேசங்களில் தொடர்ச்சியான சந்திப்புகளை முன்னெடுத்துவருவதுடன் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் துறைமுகத்தினையும் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேபோன்று சீனா ஒரு புறம் தமிழர்களின் காணிகளைப்பெற்று வேலைத்திட்டங்களைமுன்னெடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளை தமிழர்களுக்கான ஆதரவான செயற்பாடுகள் என்று கருதமுடியாது.சிங்கள அரசுகள் தமிழர் பகுதிகளில் தமிழர்களின் உரிமைகளை பறிப்பதற்காக கைக்கொள்ளும் மாற்றுவழிகளாகவே கருதவேண்டியுள்ளது.இவை தமது பிராந்தியங்களை பாதுகாப்பதற்காக வடகிழக்கு தமிழ் தேசியத்தினை சிதைக்கும் செயற்பாடுகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.
இந்தியா எமது தொப்புள் கொடி உறவு,என்றும் எம்மை கைவிடாது என்ற எண்ணப்பாட்டுடன் நாங்கள் இந்தியாவின் மாநிலம்போல் செயற்படும் நிலைமை ஏற்பட்டால் இங்கு தமிழ்தேசியத்திற்கு எதிரான பல்வேறு காரணிகள் ஊடுறுவி தமிழ் தேசியத்தினை சிதைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கும் நிலைமைகள் ஏற்படாலம்.
எனவே தமிழ் தேசிய அரசியல் பரப்பில் அரசியல்செய்யும் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் இவ்வாறான நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும்.உண்மையில் இந்தியாவினை மீறி தமிழர்களுக்கான தீர்வு என்பது எட்டாக்கனி என்ற நிலையிருந்தாலும் இந்தியாவின் நலனுக்காக தமிழர்களின் உரிமைப்போராட்டத்தினை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு யாரும் துணைநிற்ககூடாது என்பது எமது வேண்டுகோளாகும்.