அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் ரணிலே வேட்பாளராக களமிறக்கப்படுவார் – ஐக்கிய தேசிய கட்சி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளராக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பெரிய கூட்டணியில் போட்டியிடுவார். இந்த கூட்டணி சிறிலங்கா சுதந்திர கட்சி, பொது ஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி போன்ற உட்பட கட்சிகளில் இருந்தவர்களால் உருவாக்கப்படும்.

ஜனாதிபதி இந்த கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறார் என்றும் ருவான் விஜேவர்தன கூறியுள்ளார். இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உதவியுடன் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அவரின் வேறு எந்த முயற்சிகளுக்கும் ஆதரவளிக்க உடன்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பலர் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தம்பதெனிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தின் போதே காரியவசம், இந்த கருத்தை தெரிவித்தார்.