இலங்கையில் ஏற்றுமதி திறன்கள் உள்ள போதிலும் அது உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை – உலக வங்கி

இலங்கையில் அதிகமான அளவில் ஏற்றுமதி திறன்கள் உள்ள போதிலும் அது உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஏற்றுமதி மூலம் பெறக்கூடிய கணிசமான வருவாயினை இலங்கை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உலக வங்கியின் வதிவிட பிரதிநிதி ஃபாரிஸ் ஹடாட் சேவோஸ் (Faris Hadad-Zervos) தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலக்கூறுகள் இருந்தும் அது உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மீட்சியை நோக்கிய பசுமை மீள்தன்மை மற்றும் அபிவிருத்தி என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

பொருளாதாரத்தில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள இலங்கை, கடந்த ஒரு வருட காலப்பகுதியினில் சிறந்த முன்னேற்றத்தை நோக்கி நகர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில மாத காலப்பகுதியில், குறிப்பிட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையினை பெறும் தன்மையை இலங்கை கொண்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உலக வங்கியின் வதிவிட பிரதிநிதி ஃபாரிஸ் ஹடாட் சேவோஸ் வலியுறுத்தியுள்ளார்.