1983-கறுப்பு யூலை இனவழிப்பு: யூலை 24 முதல் 31 ஆம் திகதி வரை தான் நடந்தது

1983 யூலை 23 இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு நாடு முழுவதும் ஆரம்பித்தாக சமூக வலைத் தளங்களில் பரவலாகப் பதிவிடப்படுகிறது. அது தவறு.யூலை 24 முதல் 31 ஆம் திகதி வரை தான் நடந்தது. 1983 யூலை 23 சனிக்கிழமையன்று இரவு யாழ் திருநெல்வேலி தபால்பெட்டிச் சந்தியில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது.

லெப்ரினன்ட் வாஸ் குணவர்த்தனவுடன் மேலும் 12 படையினர் கண்ணிவெடியில் அகப்பட்டும் ,வி, பு களால் துப்பாக்கியால் சுடப்பட்டும் இறந்து போனார்கள்.  ஒரேயொரு படைவீரன் தப்பிச் சென்று இ.போ.ச. கோண்டாவில் டிப்போ வளாகத்துக்குச் சென்று தொடர்பை ஏற்படுத்தித் சாட்சியாகத் தப்பினார். அடுத்த நாள் 24 ஆம் திகதி திருநெல்வேலிப் பிரதேசத்திலும் ஆங்காங்கே சில இடங்களிலும் 51 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

கொல்லப்பட்ட 13 படைவீரர்களும் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் ஜே.ஆர். அரசாங்கம் கொழும்பு பொரளையில் ஒன்றாக இறுதிக் கிரியைகளை 24 ஆம் திகதி செய்யத் திட்டமிட்டதே இனஅழிப்புக்கான ஆயத்தம் காரணமாகவே படையினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வன்முறைகளைச் செய்யக் கூடிய காடையர்கள் கொண்டுவரப்பட்டார்கள்.
24 ஆம் திகதி எசல பௌர்ணமி நாள். அன்று கௌதம புத்தருக்காக சில அனுஸ்டானங்களைச் செய்தார்கள்.

அதே வேளை பொரளை கனத்தை மயானத்தில் 13 படையினரது தகனக் கிரியை முடிய தமிழர்களுக்கெதிரான இனவழிப்பு அரங்கேறத் தொடங்கியது. அப்போது ருத்திரா ராஜசிங்கம் எனும் தமிழர் தான் பொலிஸ்மா அதிபராக இருந்தவர். அவர் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து ஜனாதிபதி ஜே.ஆரின் வதிவிடத்திற்கு நேரே சென்று ஊரடங்குச் சட்டம் பிரகடனம் செய்து நிலைமையைக் கட்டுப் பாட்டினுள் கொண்டுவர உதவி கேட்டார். ஜே.ஆரும் முதல்வன் படத்தில் வரும் ரகுவரன் போலவே நடந்து கொண்டார்.நாடெங்கும் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட இனவழிப்புகள் நடைபெற்றது.

சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க ஆகியோர் பிரதான சூத்திரதாரிகளாக நின்றார்கள்.யூலை 25, 27 ஆகிய திகதிகளில் கொழும்பு வெலிக்கடைச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.அவர்கள் சிறையை விட்டு கொழும்பின் பெரு வீதிகளில் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டதாகவும் நம்பத்தக்க தகவல்கள் உள்ளது.

குட்டிமணி,ஜெகன், தங்கத்துரைக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கிய போது இறுதி ஆசை என்னவென்று கேட்கப்பட்டது.அப்போது குட்டிமணி தனது கண்களைத் தமிழ் மகன் ஒருவனுக்குத் தானமாக வழங்குங்கள்.மலரப் போகும் தமிழீழத்தை அதனூடாகப் பார்ப்பேன் என்றார்.

அதனால் அவரது கண்கள் தோண்டப்பட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறுகின்றார்கள்.
இந்தப் படுகொலையின் சாட்சியாக டக்ளஸ் தேவானந்தா தற்போதும் உள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனவழிப்பு நடந்த போது 28 ஆம் திகதி இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தனது வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவைக் கொழும்புக்கு அனுப்பி வைத்து எச்சரித்தார்.
ஆனாலும் யூலை 30, 31 ஆம் திகதிகளில் தான் இனவழிப்பு நின்றது.
இக் காலப்பகுதியில் ஏறத்தாழ 4000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2500 வியாபாரத் தலங்கள் ,தொழிற்சாலைகள் ,பெட்டிக்கடைகள் அழிக்கப்பட்டதாகவும் மதிப்பீடு உள்ளது. இனஅழிப்பு திருகோணமலை, பேராதனை போன்ற தமிழர் சிங்களவருடன் கலந்து வாழும் இடங்களிலும் நடந்தது.
யூலை 23 ஆம் திகதி கண்ணிவெடித் தாக்குதலின் பின்னரான மோதலில் இறந்த செல்லக்கிளி அம்மானின் உடல் இரவு நேரமொன்றில் நீர்வேலியிலிருந்து கைதடி வரும் தரவைப் பாதையில் புதைக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டதாக எங்கோ வாசித்த ஞாபகமும் உள்ளது.

1983 யூலை இனக் கலவரமென எழுதாதீர்கள். கதைக்காதீர்கள்.
இனஅழிப்பு என்றே எழுதுங்கள்.கலவரமென்றால் இருபகுதியும் மோதிக் கொள்ள வேண்டும்.ஆனால் இங்கு தமிழினம் கையாலாகாத நிலைமையில் நிற்க அழிக்கப்பட்டார்கள்.ஒன்று மட்டும் புரிகிறது பல்லின சமூக அமைப்பு உள்ளதாக இந்த அழகான நாட்டைக் கட்டியெழுப்பாமல் சிங்களவர்கள் தொடர்ந்து சீரழித்துக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.

– மீள்பதிவு