கையகப்படுத்தப்பட்டுள்ள மேய்ச்சல் தரையை விடுவித்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும்

கிழக்கு மாகாணத்தில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மேய்ச்சல் தரைகளை விடுவிக்கும் பட்சத்தில் பால் உற்பத்தியினை மூன்று மடங்காக அதிகரிக்க முடியும் என கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.முகம்மட் பசி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2000ஆம் ஆண்டில் இருந்து வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் பெருமளவான மேய்ச்சல் தரைகள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக கால்நடைகளுக்கான தீவனத்தை பெற்றுக் கொள்வதில் கால்நடை வளர்ப்பாளர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றார்கள்.

எமது திணைக்களத்தினால் 2009ம் ஆண்டிற்கு பின்னரான காலப்பகுதியில் மேய்ச்சல் தரைகள் அடையாளங்காணப்பட்டு, அளவு செய்யப்பட்டு, அவற்றை விடுவிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஒரு இலட்சம் கெக்ரேயர் அளவிலான கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையினை விடுவிக்குமாறு எமது திணைக்களம் பல கூட்டங்களின் மூலம் கோரி வருகின்றபோதும் அதற்கு சாதகமான பதில் ஏதும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

எமது நாட்டின் பாலானது உலகில் அதிக விலைக்கு விற்கப்படுகின்ற A2 தரம்வாய்ததாகும். உலகில் இதற்கு அதிகளவான கேள்வியும் உள்ளது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கான பால் தேவையின் 60 வீதமானது இறக்குமதி செய்யப்படுகின்றது.

எமது கிழக்கு மாகாணத்தில் 540000க்கு மேற்பட்ட பசுமாடுகளும், 230000க்கு மேற்பட்ட எருமை மாடுகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன இவற்றின்மூலம் 62.5 மில்லியன் லீட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்நிலையில் எமது கால்நடைகளுக்கான சரியான, போசாக்கான தீவனம் கிடைக்கப்பெறுகின்ற பட்சத்தில் அதன் உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிக்க முடியும்.

எனவே அரசாங்கம் மேய்ச்சல் தரையினை விடுவித்து கால்நடை வளர்ப்பிற்குத் தேவையான தீவனத்தை பெற்றுக் கொடுப்பதன் மூலம் எமது பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதன் மூலம் எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.