சுதுமலை பிரகடனத்தின் தீவிரத்தை உணராத இலங்கை, இந்திய அரசுகள்

பிராந்திய வல்லரசான இந்தியாவின் பிராந்திய நலன்கருதி கொண்டுவரப்பட்ட இலங்கை இந்திய உடன்பாட்டில் மிக முக்கிய புறக்கணிக்க முடியாத சக்தியாக தமிழ் இனம் விளங்கியதை எடுத்துக்காட்டிய தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலை பிரகடனம் மேற்கொள்ளப்பட்ட நாளின் நினைவுநாள் கடந்த வெள்ளிக்கிழமையாகும் (4).

தமிழர் தேசத்தின் அரசியல் வேணவாவையும், இறைமையையும், தனித்துவத்தையும் பேணும் வகையில் வரலாற்றில் அதன் செல் நெறியாக மறையாக, யாப்பாக விளங்கும் வட்டுக்கோட்டை தீர்மானம் 1976 ஆம் ஆண்டும், திம்புக் கோட்பாடுகள் 1985 ஆண்டும், சுதுமலை பிரகடனம் 1987 ஆண்டும் என தமிழ் இனத்தின் இறைமையை உலகுக்கு எடுத்துரைத்த ஆண்டுகளாகும்.

சுதுமலை பிரகடனத்தின் தீவிரத் தன்மையை உணர்ந்துகொள்ளாத இந்திய அரசும், இலங்கை அரசும் அதற்கான பலன்களை அனுபவித்து மீண்டும் 1987 ஆம் ஆண்டு அவர்கள் இருந்த நிலைக்கு தற்போது வந்துள்ளது என்பது அந்த உரையின் தீர்க்க தரிசனத்தை வெளிப்படுத்துகின்றது.

இலங்கையின் அதிபர் ஒருவர் தனது சொந்த மக்களால் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட நிலையை உருவாக்கியதும், அதே நாடு தன்தை திவாலான நாடாக அறிவித்ததும், தற்போது வடக்கு – கிழக்கு என்ற தமிழர் தாயகப்பகுதியாவது தனக்கு கிடைக்காதா என இந்தியா ஏங்கி நிற்பதும் அன்று மேற்கொள்ளப்பட்ட பிரகடனத்தின் கனாதியை அவர்கள் கவனிக்கத் தவறியதே காரணம்.

இன்று மீண்டும் இந்திய தூதுவர் தமிழ் கட்சிகளை அழைத்து பேசுகின்றார், இலங்கை அரச தலைவர் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன் என்கிறார் ஆனால் அவர்களால் கொண்டுவரப்படும் திருத்தம் என்பது தமிழர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்தை வழங்குமே தவிர முழுமையான தீர்வாகாது.

ஆனால் அதிலும் சில அதிகாரங்களை கொடுப்பதற்கு இலங்கை அரசு பின்னிற்பதை தமிழர் தரப்பினரால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தமிழ் இனம் ஆணித்தரமாக கூறவேண்டிய நேரமிது. தொடர் ஆக்கிரமிப்பிற்குள்ளாகி இன அழிப்புக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் எமக்கு எமது அரசியல் வேணவாவை உலகறிவிக்கும் ஒரு அரிய வாய்பாக 2022 ஆம் ஆண்டு அமைந்திருந்தது. அது தான் இலங்கைளின் வீழ்ச்சி.

ஆனால் நாம் தாயகம், புலம், தமிழகம் என பல தளங்களில் கடுமையாக முயற்சித்தும் எமக்கிடையில் ஒரு ஒருங்கிணைவு இல்லாததால் எமது முயற்சிகள் எவையும் பலனழிக்கவில்லை. வரும் வாய்ப்புக்களை தவறவிட்டுவிட்ட பின்னர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை.

இனியாவது விழிப்புடன் இருப்போம், தொடரும் இலங்கை அரசின் பொருண்மிய சிக்கல்களும், பிராந்திய முறுகல்களும், உலக வல்லரசுகளின் அடுத்த புவிசார் அரசியல் போட்டிகளும், 2024 ஆம் ஆண்டை எமக்கானதாக மாற்றலாம் என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்கின்றது. அதனை எட்டுவதற்கு இப்போதே தயாராவோம்.