தமிழ் இனத்தின் இருப்பை உறுதிப்படுத்த நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – மட்டு.நகரான்

பிராந்திய வல்லரசான இந்தியாவின் பிராந்திய நலன்கருதி கொண்டுவரப்பட்ட இலங்கை இந்திய உடன்பாட்டில் மிக முக்கிய புறக்கணிக்க முடியாத சக்தியாக தமிழ் இனம் விளங்கியதை எடுத்துக்காட்டிய தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலை பிரகடனம் மேற்கொள்ளப்பட்ட நாளின் நினைவுநாள் கடந்த வெள்ளிக்கிழமையாகும் (4).

தமிழர் தேசத்தின் அரசியல் வேணவாவையும், இறைமையையும், தனித்துவத்தையும் பேணும் வகையில் வரலாற்றில் அதன் செல் நெறியாக மறையாக, யாப்பாக விளங்கும் வட்டுக்கோட்டை தீர்மானம் 1976 ஆம் ஆண்டும், திம்புக் கோட்பாடுகள் 1985 ஆண்டும், சுதுமலை பிரகடனம் 1987 ஆண்டும் என தமிழ் இனத்தின் இறைமையை உலகுக்கு எடுத்துரைத்த ஆண்டுகளாகும்.

சுதுமலை பிரகடனத்தின் தீவிரத் தன்மையை உணர்ந்துகொள்ளாத இந்திய அரசும், இலங்கை அரசும் அதற்கான பலன்களை அனுபவித்து மீண்டும் 1987 ஆம் ஆண்டு அவர்கள் இருந்த நிலைக்கு தற்போது வந்துள்ளது என்பது அந்த உரையின் தீர்க்க தரிசனத்தை வெளிப்படுத்துகின்றது.

இலங்கையின் அதிபர் ஒருவர் தனது சொந்த மக்களால் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட நிலையை உருவாக்கியதும், அதே நாடு தன்தை திவாலான நாடாக அறிவித்ததும், தற்போது வடக்கு – கிழக்கு என்ற தமிழர் தாயகப்பகுதியாவது தனக்கு கிடைக்காதா என இந்தியா ஏங்கி நிற்பதும் அன்று மேற்கொள்ளப்பட்ட பிரகடனத்தின் கனாதியை அவர்கள் கவனிக்கத் தவறியதே காரணம்.

இன்று மீண்டும் இந்திய தூதுவர் தமிழ் கட்சிகளை அழைத்து பேசுகின்றார், இலங்கை அரச தலைவர் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன் என்கிறார் ஆனால் அவர்களால் கொண்டுவரப்படும் திருத்தம் என்பது தமிழர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்தை வழங்குமே தவிர முழுமையான தீர்வாகாது.

ஆனால் அதிலும் சில அதிகாரங்களை கொடுப்பதற்கு இலங்கை அரசு பின்னிற்பதை தமிழர் தரப்பினரால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தமிழ் இனம் ஆணித்தரமாக கூறவேண்டிய நேரமிது. தொடர் ஆக்கிரமிப்பிற்குள்ளாகி இன அழிப்புக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் எமக்கு எமது அரசியல் வேணவாவை உலகறிவிக்கும் ஒரு அரிய வாய்பாக 2022 ஆம் ஆண்டு அமைந்திருந்தது. அது தான் இலங்கைளின் வீழ்ச்சி.

ஆனால் நாம் தாயகம், புலம், தமிழகம் என பல தளங்களில் கடுமையாக முயற்சித்தும் எமக்கிடையில் ஒரு ஒருங்கிணைவு இல்லாததால் எமது முயற்சிகள் எவையும் பலனழிக்கவில்லை. வரும் வாய்ப்புக்களை தவறவிட்டுவிட்ட பின்னர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை.

batti 1 தமிழ் இனத்தின் இருப்பை உறுதிப்படுத்த நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் - மட்டு.நகரான்இனியாவது விழிப்புடன் இருப்போம், தொடரும் இலங்கை அரசின் பொருண்மிய சிக்கல்களும், பிராந்திய முறுகல்களும், உலக வல்லரசுகளின் அடுத்த புவிசார் அரசியல் போட்டிகளும், 2024 ஆம் ஆண்டை எமக்கானதாக மாற்றலாம் என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்கின்றது. அதனை எட்டுவதற்கு இப்போதே தயாராவோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி அபகரிப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நிலையில் அதனை தடுக்கமுடியாமல் தமிழ் தேசிய அரசியலும் அதிகாரிகளும் திணறிவரும் நிலைமையினை காணமுடிகின்றது.

கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் அதிகளவான காணிகளையும் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் உள்ளதன் காரணமாக தமிழர்களை சிறுபான்மையினமாக மாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் எதனை பாதுகாப்பதற்காக அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராடினார்களோ அவற்றினை இன்று பாதுகாக்கமுடியாத நிலையில் நின்றுகொண்டிருப்பது வேதனையான விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளது.

வடகிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் அங்கு தமிழர்கள் பூரண சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்பதற்காக இந்த மண்ணில் மடிந்த ஆயிரக்கணக்கான போராளிகளின் கனவுகளை பேரினவாதமும் அவர்களுக்கு சாமரம் வீசுவோரும் காலில் மிதித்துக்கொண்டிருக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்படுகின்றன.

எதிர்காலத்தில் கிழக்கு மண்ணை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.இந்த பொறுப்பிலிருந்து தமிழ் தேசிய பரப்பிலிருக்கும் யாரும் விலகிச்செல்லமுடியாது.

batti 4 தமிழ் இனத்தின் இருப்பை உறுதிப்படுத்த நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் - மட்டு.நகரான்காணி அபகரிப்புகளை நாங்கள் தொடர்ச்சியாக பேசும் நிலைமையானது காணி அபகரிப்பினை நிறுத்துவதற்கான விழிப்புணர்வாக அமையும் என்பதனால் அது தொடர்பில் தொடர்ந்துபேசவேண்டிய நிலையில் உள்ளோம்.மட்டக்களப்பு மாவட்டத்தினை பாதுகாக்கவேண்டியதன் காரணமாக அது தொடர்பில் பேசவேண்டிய நிலையில் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்த வரையில் 2633 சதுரக்கிலோமீற்றர் நிலப்பரப்பினைக்கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள வளங்கள் என்பது தமிழர்கள் நீண்டகாலமாக பாதுகாத்துவரும் விடயமாக கருதப்படுகின்றது.யுத்த காலத்தில் கூட தமது வளங்களையும் காணிகளை தமிழர்கள் பாதுகாத்து தமது அடுத்த சந்ததிக்காக கொண்டுவந்ததை இன்று இல்லாமல்செய்யும் செயற்பாடுகள் மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக கடந்த காலத்தில் பேசுபொருளாகயிருந்த மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் இன்று பேசுவதற்கு யாரும் அற்ற நிலைமையே காணப்படுகின்றது.

இப்பகுதி இயற்கை வளம்கொண்ட பகுதியாக காணப்பட்டதன் காரணமாக அப்பகுதியினை தமிழர்கள் காலம்காலமாக தமது கால்நடைகளை மேய்க்கும் பகுதியாக பயன்படுத்திவருகின்றனர்.

இப்பகுதியினை அபகரிப்பதற்கு சிங்கள பேரினவாத சக்திகள் யுத்ததிற்கு பின்னர் பல்வேறு முன்னெடுப்புகளை முன்னெடுத்துவருகின்றனர். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பிடிக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியேறுவதற்கான செயற்பாடுகளை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனராக இருந்து அநுராத ஜகம்பத் முன்னெடுத்திருந்த நிலையில் அதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் இலங்கையின் உச்ச நீதிமன்றில் தொடர்ந்த வழக்கு காரணமாக குடியேற்றம் செய்யப்பட்டவர்கள் வெளியேறவேண்டிய சூழ்நிலையேற்பட்டது.

அப்பகுதியில் அத்துமீறி குடியேறியவர்களை அகற்றுவதற்கு மகாவலி அதிகாரசபை அதிகாரிகள் உறுதியளித்திருந்ததுடன் அப்பகுதியில் அத்துமீறி குடியேற்றப்பட்டவர்களை அகற்றும் பணிகளை முன்னெடுத்திருந்தாலும் அது பெயரளவிலேயே முன்னெடுக்கப்பட்டது.இதன் காரணமாக அப்பகுதியில் குடியேறிய குடியேற்றவாசிகளினால் அப்பகுதியில் உள்ள கால்நடை பண்ணையாளர்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

நீதிமன்றத்திற்கு வெளியேற்றப்பட்டதாக காட்டிக்கொண்டு சிங்களவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையும் பாதுகாப்பு பிரிவினரும் செயற்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தாங்கள் தமது பகுதிகளில் சிறு கம்புத்தடியை வெட்டினால் கூட தமக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மகாவலி அதிகாரசபையும் வனஇலாகாவினரும் தமது பகுதிக்குள் காடுகளை அழித்து முன்னெடுக்கும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டுகொள்வதில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அண்மையில் மட்;டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் விவாதத்திற்குரியதாக மாற்றப்பட்டிருந்தது.கால்நடை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவினையும் மீறி முன்னெடுக்கப்படும் காணிகள் அபகரிப்புகள் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது குறித்த கூட்டத்தினை முன்கொண்டுசென்ற கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் மகாவலி அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் மீது சரமாரியான கேள்விகளை தொடுத்ததுடன் நீதிமன்ற கட்டளைகளை அமுல்படுத்தாமை குறித்து கேள்வியெழுப்பியிருந்தார்.இந்த நிலையில் குறித்த பகுதியில் நீதிமன்ற கட்டளையினை அமுல்படுத்துமாறும் இரண்டு வாரங்களுக்குள் அதனை அமுல்படுத்தவேண்டும் என்ற பணிப்புரையினையும் அன்று ஆளுனர் வழங்கியிருந்தார்.

இந்த கூட்டம் நடைபெற்று ஒரு மாதத்திற்கும் மேலாகிய நிலையிலும் மகாவலி தனது கடமையினை செய்யவில்லை.
மாறாக மீண்டும் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய செயற்பாடுகள் கடந்த சில வாரங்களாக நடைபெற தொடங்கிவிட்டது. 2017ஆம் ஆண்டு சட்ட விரோதமாக மேய்ச்சல் தரை காணியில் கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட்டிருந்தது.

அத்துடன் அப்பகுதியில் சட்ட விரோதமாக குடியேறியவர்களும் அகற்றப்பட்டனர்.ஆனால் இன்று கிழக்கு மாகாண ஆளுனர் நீதிமன்ற கட்டளையின் படி அனைரையும் வெளியேற்றுமாறு மகாவலி அதிகாரசபைக்கு பணிப்புரையினை விடுத்த பின்னர் மீண்டும் அகற்றப்பட்ட விகாரையினை மீளமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அத்துடன் அப்பகுதியில் மீண்டும் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாதவனை,மயிலத்தமடு பகுதியில் உள்ள கால்நடை பண்ணையாளர்களுக்கு குறித்த மேய்ச்சல் தரை காணிகளை பகிர்ந்தளித்து அவர்களை மேலும் தமது தொழிலை மேம்படுத்தப்போவதாக கிழக்கு மாகாண ஆளுனர் அறிவித்திருந்த நிலையில் மீண்டும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் காணிகளை அபகரிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ள நிலையில் அவற்றினை தடுத்து நிறுத்தி கிழக்கு மாகாண ஆளுனர் உறுதியளித்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இதேபோன்று வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள இயற்கை வளம்கொண்ட பாதுகாக்கப்படவேண்டிய வனம் பகுதிகளை பல்வேறு தரப்பினருக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குறித்த பகுதியில் காணிகளை வழங்குவதற்கு மட்டக்களப்பினை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் முன்னெடுத்துவரும் செயற்பாட்டிற்கு உடந்தையாக மறுத்த வாகரை பிரதேச செயலாளர் உடனடியாக இடமாற்றப்பட்டு புதிய பிரதேச செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காணியை தமிழ் மக்களுக்கு வழங்கி அவர்களை வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வழிகளை ஏற்படுத்தாத இந்த அரசியல்வாதிகள் வெறுமனே தமது புழைப்புக்காகவும் சிங்கள பெரும்பான்மையினத்தின் தேவைகாகவும் முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகள் குறித்து அண்மைக்காலமாக மட்டக்களப்பில் பல்வேறு வகையில் அதிர்ப்திகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

கிழக்கு மாகாணத்தினை பாதுகாக்கவேண்டுமானால் தமிழர்களிடம் எஞ்சியுள்ள நிலங்களை பாதுகாக்கவேண்டும்.அவ்வாறு பாதுகாக்கவேண்டிய கட்டாயம் இன்று எழுத்திருக்கின்றது. இன்று மட்டக்களப்பு எல்லைப்பகுதியினை சிங்கள மயப்படுத்த முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளும் வாகரை போன்ற பகுதிகளில் உள்ள காணிகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாகவே இருந்துவருகின்றது.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படவேண்டும். அந்த இருப்பு பாதுகாக்கப்படவேண்டுமானால் நிலங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.அதற்கான முன்னெடுப்புகளை தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ளவர்கள் முன்னெடுக்கவேண்டும்.

எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் நிலங்களை பாதுகாப்பதற்காக பாரியளவிலான போராட்டங்களை நடாத்துவதற்கு தமிழ் மக்கள் தயாராகிவருகின்றனர். இதற்கு ஆதரவு வழங்க வடகிழக்கு மாகாணம் உட்பட புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களும் கைகொடுக்கமுன்வரவேண்டும்.