சதிகளிலிருந்து மீளுமா கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி – துரைராஜா ஜெயராஜா

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் கடந்த 06 ஆம் திகதியிலிருந்து இடம்பெற்றுவருகின்றன. இக்கட்டுரை எழுதப்படும்வரையில் 09 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழப்பட்டுள்ளன. அதாவது நீதிமன்ற கண்காணிப்புடனான – முறைப்படியான அகழ்வுகளுக்கு முன்னர் தோண்டப்பட்டிருந்த 13 மனித எழும்புக்கூடுகளில் 09 இனை தற்போது முறைப்படியாக அகழ்ந்திருக்கின்றனர்.

kokkuthoduvai in சதிகளிலிருந்து மீளுமா கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி - துரைராஜா ஜெயராஜாஇந்த அகழ்வில் மனித எலும்புக்கூடுகளுடன் முன்னாள் பெண் போராளிகளது என சந்தேகிக்கப்படும் ஆடைகள், விடுதலைப்புலிகளின் படைய அடையாளமான மூன்று தகடுகள், சயனைற் குப்பி ஒன்று, ரஸ்ய தயாரிப்பான நீர்ச்சுத்திகரிப்பு குழாய் ஒன்று ஆகிய இதுவரையில் அகழப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பின் கீழ் இடம்பெறுகின்ற இவ்வாய்வுப் பணிகளில் சிறிலங்காத் தொல்லியல் திணைக்களத்தினைச் சேர்ந்த அகழ்வாய்வாளர்கள், சட்ட வைத்திய அதிகாரி, சிறிலங்கா பொலிஸ் பிரிவின் தடய ஆய்வாளர்கள், சி.எச்.ஆர்.டி நிறுவனத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள், காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடியறியும் ஆணைக்குழுவினர் (OMP) ஆகியோர் கலந்துகொண்டிருக்கின்றனர். பிராந்திய அரசியல்வாதிகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஈழத்தமிழர் மீது சிறீலங்கா அரச படைகள் இறுதிப் போரின்போதும், அதற்கு முன்பும் நன்கு திட்டமிடப்பட்ட இனப்படுகொலையை நடத்திவருகின்றனர். அந்த இனப்படுகொலை பொறிமுறையின் கீழ் நிகழ்ச்சிநிரல்படுத்தப்பட்ட போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இவை குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கைகளைத் தமிழர்கள் மிக நீண்டகாலமாகவே முன்வைத்துவருகின்றனர்.

இதனை வலியுறுத்தும், இறுதிப்போர் வேளையில் தம் உறவுகளை இராணுவத்திடம் கையளித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோர் கடந்த நான்கு வருடத்திற்கும் மேலாகப் போராடியும் வருகின்றனர். இதனையெல்லாம் கணக்கிலெடுக்காத சிறீலங்கா அரசு, எவ்வித பொறுப்புக்கூறலையும் கூறாது இறுமாப்புடன் தட்டிக்கழித்தே வந்திருக்கின்றது. இனப்படுகொலை நடந்தமைக்கு எந்தச் சான்றும் இல்லை, எல்லாவற்றையும் அழித்துவிட்டோம் என்கிற நினைப்பில்தான் இந்த தட்டிக்கழிப்புக்கள் நடந்தன.

ஆனால் இப்போது புதைகுழிக்குள் இருந்து உண்மை பேசத் தொடங்கிவிட்டது. தமிழ் இனத்தின் விடுதலைக்காகத் தம் இன்னுயிர்களைத் தியாகித்தவர்கள், எலும்புக்கூடுகளாக்கப்பட்ட பின்னரும் எழுந்து வந்து போராடத் தொடங்கிவிட்டனர். உலகின் மனச்சாட்சியை உலுக்கத் தொடங்கிவிட்டனர். எனவேதான் இந்தப் புதைகுழி அகழ்வு வேலைகளின் மீது அரசியல் பின்னப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தை எப்படியாவது திசைமாற்றி விடுவதற்கான திறைமறைவு வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படுகின்றன.

kokkuthoduvai in v0 சதிகளிலிருந்து மீளுமா கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி - துரைராஜா ஜெயராஜாகடந்த நான்கு வருடங்களாகத் தெருவில் வாழ்ந்தபடி போராடிக்கொண்டிருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அரசுக்கு உள்ளக ரீதியாகவும், வெளியக ரீதியாகவும் பல்வேறு அழுத்தங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். இந்நாட்டில் இவ்வளவு பாரிய மனிதக் கடத்தல்கள், கொலைகள், காணாமலாக்கப்படுதல்கள் இடம்பெற்றுள்ளன என்கின்ற செய்தியின் காரம் குறையாமல் வைத்திருக்கின்றனர்.

எனவே அவர்களைப் போராட்ட களத்திலிருந்து அகற்ற வேண்டும். அல்லது அவர்களாக போராடிக்களைத்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அல்லது போராடிப் போராடியே இறந்துபோகவேண்டும் என அரசு திட்டமிடுகிறது. போராடத்தொடங்கிய காலத்திலிருந்து 187 தாய்மார்கள், தந்தைமார்கள் இறந்தபோதிலும், மக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. பல்வேறு நோய்நிலைகளுக்குள்ளிருந்தும், வறுமை நிலைக்குள்ளிருந்தும் நெஞ்சுரத்தோடு போராடிக்கொண்டிருக்கின்றனர்.

கொக்குத்தொடுவாய் புதைகுழியுடன் வெளியுலகிற்கு சொல்லப்படும் செய்தி, இறுதி நேரத்தில் சரணடைந்தவர்கள் ஏதோ ஒருவிதத்தில் இறந்துவிட்டனர். எனவே காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மரண சான்றிதழையும், அரசு ஒதுக்கும் நிவாரணங்களையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்பதே ஆகும்.

இதற்கான வேலைகளை காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டறியும் ஆணைக்குழு (OMP) ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதுவரை காலமும் பல்வேறு கூட்டங்கள், விசாரணைகள் நடத்திய அந்த ஆணைக்குழு எல்லாவற்றிலும் தோற்றுப்போனது. காணமலாக்கப்பட்டவர்களின் உறவினர் OMP இன் அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரித்து, அதன் அரசியலை அம்பலப்படுத்தியிருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், OMP இலும் மாற்றங்களைச் செய்துள்ளார். முழுக்க முழுக்க தமிழர்களைப் பணியாளர்களாக நியமித்து, காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடும் உறவுகளின் நாடிபிடித்து வேலைசெய்யத் தொடங்கியிருக்கின்றனர். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளைத் தனித்தனியே கிராம அலுவலர்களின் அலுவலகங்களுக்கு அழைத்து, பல விண்ணப்பங்களைப் பதிவுசெய்கின்றனர். அவர்களது வறுமையைக் காரணம் காட்டி பல்வேறு உதவிகளைச் செய்ய வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.

Mullaitivu Mass grave 6 சதிகளிலிருந்து மீளுமா கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி - துரைராஜா ஜெயராஜாமறுபுறத்தில் புலனாய்வுத்துறையினரை வீடுவீடாக அனுப்பி, போராட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாதென்றும், அந்தப் போராட்டங்கள் புலம்பெயர் தமிழர்களின் நிதியைப் பெறுவதற்காக ஒருசிலரால் நடத்தப்படுபவை என்றும், தொடர்ந்து போராடினால் வீட்டில் இருக்கும் ஏனைய பிள்ளைகளுக்கும் பிரச்சினை வரும் என்றும் பரப்புரை செய்கின்றனர். இந்தப் பரப்புரைகள், சதி முயற்சிகள் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் உறவினர்களால், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் வரும் செய்திகளுக்குப் பின்னால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. பல தாய்மார்கள், தந்தைமார்கள் மனவுளைச்சலுக்குள்ளாக்கி, நோயில் படுத்துவிட்டனர்.

இவ்வளவு காலமும் தம் பிள்ளை வருவான் / வருவாள் என்கிற பெரு நம்பிக்கையோடு போராடியவர்களுக்கு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் கட்டமைக்கப்படும் செய்தி பெரும் இடியாய் இறங்கியிருக்கிறது. தம் பிள்ளைகளைக் கொன்று புதைத்துவிட்டார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவேதான் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிய அகழ்வானது, இராணுவத்தால் காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடியலையும் உறவுகளுக்கு எதிராக வைக்கப்பட்ட பொறி எனப்படுகின்றது. இந்த அகழ்வின் பின்னால், நிற்கும் OMP இதற்கு தக்கச் சான்று. தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைக்குப் பின்னால், சிறீலங்கா அரசின் OMP வலிந்து நிற்கவேண்டிய வேறு தேவைகள் எவையும் இருக்கப்போவதில்லை.

இவ்வகழ்வுப் பணிகளில் சர்சதேச கண்காணிப்பாளர்கள், நிபுணர்களின் பங்களிப்பைத் தமிழர்களும், தமிழ் தேசிய அரசியல்வாதிகளும், காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினரும் கோரியிருந்தனர். ஆனால் சிறீலங்கா தொல்லியல் திணைக்களத்தைச் சேர்ந்த அகழ்வாளர்களையே அரசு அனுமதித்தது. சிறீலங்கா தொல்லியல் திணைக்களம் என்பது தமிழ் பகுதிகளில் பதற்றமான சூழலையே ஏற்படுத்துகின்றது என ஐ.நா கூட கூறியபின்னரும், அதே திணைக்களம் தமிழர்கள் நீதியைக்கோரும் ஒரு விடயத்தில் தன் தலையை வலிந்து கொடுத்திருக்கின்றது.

குருந்தூர்மலையில் பௌத்த பிக்குகளுடன் இணைந்து தமிழர் நிலத்தை அபரிப்பதற்கான அனைத்து வேலைகளையும் முன்னெடுக்கும் அத்திணைக்களம், குருந்தூர்மலையிலிருந்து பத்து மைல் தொலைவில் இருக்கின்ற கொக்குத்தொடுவாயில் தமிழர்கள் நீதிகோரும் விடயத்தில் இதயச்சுத்தியுடன் செயற்படும் என எவ்வித்தத்தில் நம்புவது?

இந்த அகழ்வுப் பணிகளில் தடய ஆய்வுக்கான சிறீலங்கா பொலிஸார் பயன்படுத்துகின்றனர். அவர்களோடு கிழக்கு மாகாணத்த்தில் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த சிறப்பு அதிரடிப்படையினரும் பங்கெடுத்திருக்கின்றனர். இங்கு மீட்கப்படும் எலும்புக்கூட்டுத் தடயப்பொருட்களை வெறுங்கையுடன் அவர்கள் தொடுகின்றனர்.

அதனை ஆய்வுசெய்கின்றனர். அகழ்வாய்வு பற்றி எதுவுமே தெரியாத இவர்களை யார் அப்பகுதிக்குள் அனுமதித்தது? இந்தப் பொருட்களைத் தொடுவதற்கான – கையாள்வதற்கான உரிமையை எப்படி பெற்றனர்? இது கொன்றவதே சாட்சி தேடும் கதையாகிவிடாதா? இந்த விடயங்களை கொக்குத்தொடுவாயில் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவர்களிடம் சுட்டிக்காட்டியபோது, நவீன தொல்லியல் – மானிடவியல் ஆய்வுகளில் வெறுங்கையுடன் தொல்பொருட்களைத் தொடலாம் எனக் கருத்துரைத்தனர். அதற்கான ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்ற சில அகழ்வாய்வுகளையும் எடுத்துக்காட்டினர்.

இந்த அகழ்வாய்வானது, தொல்லியல்துறை சார்ந்ததோ, மானுடவியல் சார்ந்ததோ அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு அப்பாலான மனித எச்சங்களுமல்ல. மாறாக சிறீலங்கா அரசபடைகளால் பதினைந்து வருடங்களுக்குள் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்கள் பற்றிய அகழ்வு இது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை, போர்க்குற்றம் போன்றவற்றை நிரூபிக்கும் வலுவான சாட்சியங்கள்.

எனவே அவற்றை நிரூபிக்கும் வகையான புதிய வடிவிலான அகழ்வுதான் இங்கு இடம்பெற வேண்டுமே தவிர, தொல்லியல் – மானுடவியல் அகழ்வு அல்ல. ஐரோப்பா போலவும், அமெரிக்கா போலவும் இங்கு ஆய்வில் ஈடுபடுவர்கள் துறைசார்ந்த இதயச்சுத்தியுடன் செயற்படுபவர்களுமல்ல. பௌத்த பிக்குகளிடம் நிதியைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் வேலைத்திட்டங்களைச் செய்கிறோம் என வாக்குமூலமளித்தவர்களைக் கொண்ட திணைக்களம் அது. எனவே இந்த அகழ்வின் நிதியளிப்பாளரான சிறீலங்கா அரசு சொல்வதைச் செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு.

எனவேதான் இவ்வளவு சதிகளுக்குள்ளிருந்தும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு மீளவேண்டியிருக்கிறது. அது பேசும் உண்மை வெளியுலகிற்கு எடுத்துச்சொல்லப்படவேண்டியிருக்கின்றது.