மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் ரகசியத் திட்டம்! -அகிலன்

மயிலத்தமடு, மாதவனை பிரச்சினை இன்று நாடு முழுவதும் பேசப்படும் ஒரு பிரச்சினையாகியிருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலும் இதற்கு ஏதோ ஒரு தீா்வைக் கொடுக்க வேண்டும் என்ற நிா்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. அதேவேளையில் சிங்களத் தரப்பினரைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதிலும் அரசாங்கம் கவனமாகவுள்ளது. மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநா் அநுருத்த யஹம்பத் இப்போதும் தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றாா். பிக்குகள் மற்றும் சிங்களத் தரப்பினரின் பின்னணியில் அவா் செயற்படுகின்றாா்.

batti catt3 1 மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் ரகசியத் திட்டம்! -அகிலன்அதனால்தான் ஜனாதிபதியின் உத்தரவுகள் எதுவும் நடைமுறைப்படுத்த முடியாதவையாக உள்ளன. தமிழ்ப் பண்ணையாளா்களின் பிரச்சினைக்கு தீா்வு காணும் வகையில் அங்கிருந்து வெளிமாவட்டத்தவா்கள் அகற்றப்பட வேண்டும் என்ற அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருந்தாா். ஜனாதிபதியின் அறிவித்தல்கள் போராட்டங்களின் அனலைத் தணிப்பதற்கான உபாயங்களாக இருப்பது வழமைதான். இப்போதும் அவ்வாறுதான் நடைபெற்றிருக்கின்றது.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் முன்னாள் கிழக்கு ஆளுநா் அநுராதாவின் பங்களிப்புடன் புதிய புத்தா் சிலை ஒன்று சா்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரட்ன தேரரா் தலைமையிலான குழுவினரால் வைக்கப்பட்டது. அதாவது ஜனாதிபதியின் அறிவித்தல் வெளியான மறுநாள் அந்தச் சிலை வைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை தாம் கைவிடப்போவதில்லை என்பதற்கான சிங்களத் தரப்பினரின் ஒரு பதிலாகவே இதனைக் கருத வேண்டும்.

முன்னாள் கிழக்கு ஆளுநா்தான் மேய்ச்சல் தரையில் சிங்கள ஆக்கிரமிப்புக்கு பலமாக இருந்தவா். அதனைப் பலப்படுத்தியவரும் அவா்தான். கோட்டாபய ராஜபக்ஷ தான் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக உருவாக்கிய “வியத்மக” என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினா்களில் ஒருவராக இருந்தவா் அவா். கிழக்கை சிங்கள மயமாக்குவது என்ற இலக்குடன்தான் மாகாண ஆளுநராக, கோடட்டாபயவினால் அவா் நியமிக்கப்பட்டாா்.  இப்போது அவா் அந்தப் பதவியில் இல்லாவிட்டாலும், மேய்சல்தரைப் பிரச்சினையில் சிங்களவா்களை வழிநடத்துபவா்களில் ஒருவராக அவா் இருக்கின்றாா்.

மேய்ச்சல் தரைகளிலிருந்து விரட்டப்பட்ட தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்கவும் அவர்களின் பூர்வீக மேய்ச்சல் தரைகள் மீளவும் அவர்களிடமே ஒப்படைக்கப்படவும் கோரி நடத்தப்படும் கவனயீா்ப்புப் போராட்டம் நாற்பதாவது நாளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பண்ணையாளா்களே இந்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றாா்கள்.

இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீா்வைக் கொடுப்பதற்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என்பதுடன், புத்தா் சிலை வைக்கப்பட்ட விவகாரம் இந்த ஆக்கிரமிப்பு தொடரும் என்பதற்கான அறிவித்தலாகவே இருக்கின்றது. புத்தா் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் கூட, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அதனைக் கொண்டுவந்து வைத்தவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், அவா்கள் தமது அடுத்த கட்ட நகா்வை முன்னெடுப்பாா்கள் என எதிா்பாா்க்கலாம்.

தமிழ்ப் பண்ணையாளா்களைப் பொறுத்தவரையில் இது அவா்களுடைய வாழ்வாதரப் பிரச்சினை, அவா்களுடைய இருப்பை கேள்விக்குள்ளாக்கும் பிரச்சனை. அதனால் இறுதிவரையில் போராடுவது என்ற உறுதியுடன் அவா்கள் உள்ளாா்கள்.

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினா்கள் இந்தப் பிரச்சினையை கடந்த வாரம்  பாராளுமன்றத்தில் கிளப்பியிருந்தாா்கள். உரிய அமைச்சா்களிடமிருந்து ஆக்கபுா்வமான பதில் கிடைக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த போதும், இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டது. ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அழுத்தங்கள் அதிகமாக இருந்தமையால் தமிழ்ப் பண்ணையாளா்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அந்தப் பேச்சுக்களின் போதும் தீா்வு எதுவும் முன்வைக்கப்படவில்லை. ஜனாதிபதி தன்னுடைய வழமையான பாணியில் நழுவிச்சென்றாா்.

batti monk 161116 seithy 3 மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் ரகசியத் திட்டம்! -அகிலன்அதன்பின்னா் கொழும்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றின் போதே வெளிமாவட்டத்தவா்களை வெளியேற்றும் உத்தரவு ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டது. மேய்ச்சல் தரைகளில் அத்துமீறி குடியிருப்போரை நீதிமன்ற அனுமதியை பெற்று உடனடியாக வெளியேற்றுமாறு காவல்துறைக்கும் மகாவலி அதிகார சபைக்கும் ஜனாதிபதி உத்தரவிட்ட நிலையிலேயே புத்தா் சிலை கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டது.

புத்தா் சிலை வைக்கப்பட்ட விவகாரம் பண்ணையாளா்கள் மத்தியில் கடும் சீற்றத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ஒரு தீர்மானத்தினை எடுத்துள்ள நிலையில், வேறு ஒரு தரப்பினர் அப்பகுதியில் புத்தர் சிலைகளை

வைத்து மேய்ச்சல்தரையை அபகரிப்பு செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கிசூடும் நடாத்தப்பட்டிருக்கின்றது. இதனால், அப்பகுதிக்கு சென்றால் தமக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைமையே ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றாா்கள். ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றவேண்டும். அதன் பின்னரே நாங்கள் மேய்ச்சல் தரைக்கு கால்நடைகளை கொண்டுசெல்வோம் எனவும் தெரிவித்துள்ள பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரை இல்லையென்றால் 3,000குடும்பங்களின் வாழ்வாதாரமும் இல்லாமல்போய்விடும் என்றும் சுட்டிக்காட்டினாா்கள்.

“சிங்களவா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேய்ச்சல் தரையில் விதைப்பு நடவடிக்கைகளும், புத்தர் சிலையை வைக்கும் நடவடிக்கைகளும், சிங்களக் குடியேற்ற நடவடிக்கைகளுமே இன்று முன்னெடுக்கப்படுகின்றன. அங்கு எமக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதான தகவல்கள் இல்லை” எனவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றாா்கள்.

இந்தப் பிரச்சினை வெறுமனே மயிலத்தமடு பண்ணையாளா்களின் பிரச்சினை மட்டுமல்ல. அரசியல் ரீதியாகப் பாா்க்கும்போது இது ஒரு நில ஆக்கிரமிப்பு. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் அதிகளவுக்குச் செறிவாக இருக்கும் மட்டக்களப்பின் சனத் தொகை விகிதாசாரத்தை மாற்றியமைப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதிதான் இது!

batti catt மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் ரகசியத் திட்டம்! -அகிலன்கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் திருமலை, அம்பாறை மாவட்டங்கள் சிங்கள மயமாக்கப்பட்டுவிட்டது. தமிழா்களின் சனத்தொகை விகிதாசாரம் வெகுவாகக்குறைந்துவிட்டது. மட்டக்களப்பு மட்டும்தான் தமிழா்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பகுதியாக உள்ளது. இதுதான் சிங்களவா்களின் கண்களைக் குத்திக்கொண்டிருக்கும் விவகாரம்.

இதனைவிட, இதற்கு பொருளாதார பரிமாணம் ஒன்றும் உள்ளது. இங்குள்ள பண்ணையாளா்கள் மட்டக்களப்புக்கு மட்டும் பாலையும் பாற் பொருட்களையும் வழங்கவில்லை. முழு இலங்கைக்கும் அவை செல்கின்றன. இதன் மூலமாக அவா்களின் பொருளாதாரம் செழித்துள்ளது. அதனை இல்லாதொழிப்பதும், அவற்றை சிங்களவா்களின் வசமாக்குவதும் மற்றொரு நோக்கம்.

சிங்களவா்கள் இந்தப் பகுதியை ஆக்கிரமித்திருப்பதால் சுமாா் மூவாயிரம் தமிழ்ப் பண்ணையாளா்கள் வாழ்வாதாரங்களை இழந்து குடும்பங்களுடன் வீதிக்கு வந்துள்ளாா்கள். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீளவேண்டுமானால் உள்ளூர் உற்பத்தியை பெருக்க வேண்டும். அதற்கு கணிசமான பங்களிப்பை வழங்கியவா்கள் – வழங்கக்கூடியவா்கள் இவா்கள். இலங்கைக்கே பாலை வாரி வழங்கிய தமிழ் பண்ணையாளர்கள் இன்று நடு வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

பண்ணையாளா்கள் வீதிக்கு வந்திருப்பதாலும், சிங்களவா்களின் ஆக்கிரமிப்பாலும் நெற்செய்கையில் ஈடுபட முடியாத நிலையும் தமிழ்ப் பண்ணையாளருக்கு ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் பால் உற்பத்தியில் மட்டுமன்றி, நெற்செய்கையிலும் பிரதான இடத்தை வகிக்கின்றது. இப்போது இவை இரண்டுமே பாதிக்கப்பட்டும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால், மட்டக்களப்பு மாவட்டம் மக்கள் பெரும் நெருக்கடி ஒன்றை அடுத்த வருடத்தில் சந்திக்கவேண்டியிருக்கும்.  இந்த நெருக்கடி மட்டக்களப்பு மக்களை மட்டுமல்ல முழு இலங்கை மக்களையும்தான் பாதிக்கப்போகின்றது!