பெருந்தோட்டத்துறையை மழுங்கடிக்க தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளதா? – துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் தொடர்பில் நிலையற்ற வெளிப்பாடுகள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றன.2050 ம் ஆண்டளவில் பெருந்தோட்டத்துறை இல்லாமல் போகும் அபாயம் மேலோங்கி காணப்படுவதாகவும் விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையானது தோட்டங்களை நம்பிவாழும் தொழிலாளர்களுக்கு பாரிய தாக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமையும்.எனவே தொழிலாளர்கள் தோட்டத் தொழிற்றுறையை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் மாற்றுத் தொழிற்றுறை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு தேவையும் மேலெழுந்துள்ளது.

இலங்கையின் தேசிய வருமானத்தில் கணிசமான வகிபங்கினைக் கொண்டவர்களாக மலையக மக்கள் விளங்குகின்றனர்.பெருந்தோட்ட தேயிலைத் தொழிற்றுறை, ஆடைத் தொழிற்றுறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்று பல துறைகளிலும் மலையகத்தவர்கள் ஈடுபட்டு இலங்கைக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்றார்கள்.அதிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் பங்களிப்பு சற்று அதிகமாகவே உள்ளதையும் இங்கு குறிப்பிட்டாதல் வேண்டும்.மேற்கண்ட துறைகளில் பெண்கள் நெருக்கீடுகள் பலவற்றையும் சந்தித்து வருகின்றபோதும் அவர்களின் உழைப்பு அதிகமாகவே காணப்படுகின்றது.

malaya பெருந்தோட்டத்துறையை மழுங்கடிக்க தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளதா? - துரைசாமி நடராஜாஇலங்கையின் தேசிய வருவாயில் கூடிய ஆதிக்கத்தை தேயிலை ஒருகாலத்தில் செலுத்தி இருந்தது.இதனடிப்படையில் 1959 இல் இலங்கையின் அந்நியச் செலாவணி உழைப்பில் தேயிலையின் பங்கு 59.6 வீதமாக அமைந்திருந்தது.இது 1969 இல் 57.8, 1976 இல் 43.6, 1980 இல் 35.1, 1985 இல் 33.1, 1987 இல் 25.9, 1989 இல் 24.3, 1990 இல் 24.9 என்ற வீதத்தில் அமைந்திருந்தது.இதில் பெருந்தோட்டத்துறையும் அதிகளவில் செல்வாக்கு செலுத்தியது.1995 இல் 168.8 மில்லியன் கிலோகிராம் தேயிலை பெருந்தோட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டது.இது 2000 இல் 100.1, 2005 இல் 111.5, 2010 இல் 100.8, 2017 இல் 104 மில்லியன் கிலோகிராமாக அமைந்திருந்தது.

தேயிலை உற்பத்தி பரப்பினைப் பொறுத்தவரையில் 1980 இல் கண்டி, நுவரெலியா,பதுளை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, குருநாகல், கொழும்பு, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் 211,256 எக்டேயர் பரப்பில் தேயிலை உற்பத்தி இடம்பெற்றது.இதேவேளை 2002 இல் இம்மாவட்டங்களில் 193,925 எக்டேயர் பரப்பில் தேயிலை உற்பத்தி இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்

.மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில்1980 இல் 39,930 எக்டேயர் பரப்பிலும், 2002 இல் 50,266 எக்டேயர் பரப்பிலும் தேயிலை உற்பத்தி இடம்பெற்றிருந்தது.இதேவேளை 1924 இல் இலங்கையில் 169,285 எக்டேயர் பரப்பில் தேயிலை உற்பத்தி இடம்பெற்றதோடு 92,354,128 கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.

சிறுதோட்டம் ஆதிக்கம்  

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியினை நோக்குகையில் 2013 இல் ரஷ்யா உட்பட மத்திய கிழக்கு நாடுகளுக்கு 68.39 வீதமான தேயிலை ஏற்றுமதி இடம்பெற்றது.இதேவேளை ஆசிய நாடுகளுக்கு 8.12 , ஐரோப்பிய நாடுகளுக்கு 4.00, ஆபிரிக்க நாடுகளுக்கு 6.30, அமெரிக்கா,கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு 2.16, ஏனைய நாடுகளுக்கு 11.03 வீதமான தேயிலையை இலங்கை ஏற்றுமதி செய்திருந்தது.1990, 2000, 2010 ஆகிய ஆண்டுகளிலும் ரஷ்யா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கே இலங்கை அதிகளவான தேயிலையை ஏற்றுமதி செய்திருந்தது.

தேயிலை உற்பத்தி, தேசிய வருமான ஈட்டல் என்பவற்றில் பெருந்தோட்டங்கள் ஆதிக்கம் செலுத்திய நிலைமாறி பின்னாளில் சிறுதோட்டங்களின் ஆதிக்கம் வலுப்பெற்றது.இந்நிலைக்கு காணிப்பகிர்வில் எம்மவர்கள் புறக்கணிக்கப்பட்டமை, சிறுதோட்ட அபிவிருத்தியில் அரசாங்கம் காட்டிய அதீத கரிசனை, சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு பசளை மானியங்கள் மற்றும் கடன் வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டமை போன்ற பல நிலைமைகள் சிறுதோட்டங்களின் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தன.இதனால் சிறுதோட்ட உரிமையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு உற்பத்தியிலும் சிறுதோட்டங்கள் முன்னிற்கத் தொடங்கின.1983 இல் இலங்கையின் மொத்த தேயிலை நிலப்பரப்பில் 75,769 எக்டேயரில் சிற்றுடைமைகளின் தேயிலை உற்பத்தி இடம்பெற்றது.எனினும் சிற்றுடைமைகளின் தேயிலை பரப்பு பின்வந்த காலங்களில் படிப்படியாக அதிகரித்தது.இதற்கேற்ப 1994 இல் 76,569 எக்டேயர், 2005 இல் 118,274 எக்டேயர், 2014 இல் 132,335 எக்டேயர் நிலப்பரப்பில் சிறுதோட்ட உரிமையாளர்களின் தேயிலை உற்பத்தி இடம்பெற்றது.

1970 களில் சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் மட்டுமே சிறுதோட்ட உரிமையாளர்களாகக் காணப்பட்டனர் எனினும் தற்போது நான்கு இலட்சத்துக்கும் அதிகமான சிற்றுடைமையாளர்கள்  காணப்படுகின்றனர்.இவர்களில் 88.16 வீதமானவர்களுக்கு ஒரு எக்டேயருக்கும் குறைவான தேயிலைக் காணிகள் இருப்பதாகவும் தகவல்கள் வலியுறுத்துகின்றன.இந்நிலையில் பெருந்தோட்டங்களில் அதிகளவான தமிழர்கள் தொழிலாளர்களாக இருப்பதால், இனவாத நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பெருந்தோட்டங்கள் மழுங்கடிக்கப்பட்டு, சிறுதோட்டங்களின் ஆதிக்கத்திற்கு வலுசேர்க்கப்படுகின்றதா? என்றும் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

malaiyakam பெருந்தோட்டத்துறையை மழுங்கடிக்க தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளதா? - துரைசாமி நடராஜாதோட்டங்கள் கம்பனியினருக்கு கைமாறியதன் பின்னர் தோட்டத்துறையில் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் தொழிலாளர்கள் முகம் கொடுத்து வருவதாகவும், தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பிலோ அல்லது தோட்டத்துறையின் அபிவிருத்தி தொடர்பிலோ எவ்விதமான கவனமும் கம்பனியினரால் செலுத்தப்படுவதில்லை என்றும் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதும் நீங்கள் அறிந்ததேயாகும்.இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியுடன் பணியாற்றி வருவதாகவும், இன்னும் சில தொழிலாளர்கள் தோட்டத் தொழிற்றுறையில் இருந்தும் விலகிச் சென்றுள்ளதாகவும் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.இதனால் தேயிலை பெருந்தோட்டங்களில் பதிவு செய்திருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சிகண்டது.1980 இல் 541,971தொழிலாளர்கள் தேயிலை பெருந்தோட்டங்களில் பதிவு செய்து கொண்டிருந்தனர்.எனினும் 2015 இல் இவ்வெண்ணிக்கை 158,322 ஆக வீழ்ச்சி கண்டது.இந்நிலையில் சமகாலத்தில் இவ்வெண்ணிக்கையில் மேலும் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளமையும் தெரிந்ததாகும்.

எனினும் தொழிலாளர்கள் கம்பனியினரின் நெருக்கீடுகளுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படும் கண்டனத்தை கம்பனி தரப்பினர் மறுதலித்துப் பேசியுள்ளனர்.’நெருக்கடியான காலகட்டத்திலும் தொழிலாளர்களின் நலன்களில் நாம் அக்கறையுடன் செயற்படுகின்றோம்.ஆனால் கம்பனிகள் தொழிலாளர்களுக்கு மேலும் இன்னல்களையும் நெருக்கடிகளையும் தருவதாக விஷமத்தனமான பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் உள்ள தோட்டங்களில் சுமார் ஒரு இலட்சத்து ஆயிரம் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களே பணியாற்றி வந்தபோதும் இத்தொழிலோடு மறைமுகமாக இணைந்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் இருபது இலட்சமாகும்.இத்தனை பேரின் வாழ்வாதாரம் தங்கியிருக்கும் இத்துறையை நாம் மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே கொண்டு நடத்துகிறோம்.150 வருட வேதன முறையை மாற்றியமைக்க வேண்டுமெனவும் வருமான பங்கீட்டு முறையை கொண்டு வருமாறும் தொழிற்சங்கங்களிடம் கோரினோம்.ஆயினும் அவர்கள் அதுகுறித்து அக்கறை செலுத்தவில்லை.

பஞ்சப்பாட்டு

கொவிட் தாக்கம் மற்றும் இரசாயன உர இறக்குமதி தடை காரணமாக தேயிலை உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.2020 இல் 300 மில்லியன் கிலோகிராம் தேயிலையை உற்பத்தி செய்த நாம் 2022 இல் 251 மில்லியன் கிலோகிராம் தேயிலையையே உற்பத்தி செய்துள்ளோம்.எனினும் தொழிலாளர்களின் நலன்களில் மாற்றங்கள் இல்லை’ என்று கம்பனி தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் உலக சந்தையில் தேயிலையின் விலை உயர்ந்தபோதும் கம்பனியினரின் பஞ்சப்பாட்டுக்கு குறைவிருக்கவில்லை.தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியத்தை வழங்க வாய்ப்பிருந்தும் கம்பனியினர் அதனை மூடிமறைக்கவே முற்படுகின்றனர் என்று தொழிலாளர்கள் விசனம் தெரிவிப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இதனிடையே இலங்கையில் 2050 ம் ஆண்டளவில் பெருந்தோட்டத்துறையை இல்லாமல் ஆக்குவதற்கு தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.எனவே பெருந்தோட்டங்களை சிறுதோட்டங்களாக்கி மலையகத் தமிழ் மக்களிடையே பகிர்ந்தளிக்கும் தீர்க்கமான அரசியல் நிலைப்பாடு அவசியமாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எம்.திலகராஜா தெரிவித்துள்ளார்.

upcountry11 பெருந்தோட்டத்துறையை மழுங்கடிக்க தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளதா? - துரைசாமி நடராஜாமேலும் இலங்கையில் தேயிலைத்துறையை பொறுத்தமட்டில் 75 சதவீத பங்களிப்பு சிறுதோட்ட உரிமையாளர்களால் வழங்கப்படுகின்ற அதேவேளை 25 சதவீத பங்களிப்பை பெருந்தோட்டத்துறை வழங்குகின்றது.இந்நிலையானது எதிர்வரும் 2050 ம் ஆண்டு காலப்பகுதியில் 100 சதவீதம் சிறுதோட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பெருந்தோட்டத்துறையை இல்லாமலாக்க தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.2050 வரை தற்போதைய அரசியல் செல்நெறியே கடைபிடிக்கப்படுமானால் அது முற்றுமுழுதான தோல்வியிலேயே போய் முடியும்.மலையக மக்களின் பறிக்கப்பட்ட குடியுரிமையை மீளப் பெற்றுக் கொண்டாலும் அது அர்த்தமுடையதாக இல்லை என்றும் திலகராஜா சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு நோக்கத்தக்கதாகும்.

பெருந்தோட்டத்துறை இல்லாமல் போவதென்பது பாரிய பின்விளைவுகளுக்கும் உந்துசக்தியாக அமையும் என்பதை மறுப்பதற்கில்லை.இது அவர்களின் தொழிற்றுறையில் தாக்கத்தை ஏற்படுத்துவது ஒரு புறமிருக்க அவர்களின் இருப்பு மற்றும் அடையாளம் என்பனவும் கேள்விக்குறியாகும் அபாயமுள்ளது.பிழையான பதிவுகள், இடம்பெயர்வுகள் என்பவற்றால் மலையக மக்கள் ஏற்கனவே பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் பெருந்தோட்டத்துறையை இல்லாமலாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் அம்மக்களை அதளபாதாளத்திற்கே இட்டுச் செல்வதாக அமையும்.அத்தோடு மக்களின் செறிவு சிதைக்கப்படுகையில் இம்மக்கள் சமூகத்தினரின் அரசியல், கலை, கலாசார, பண்பாட்டு, விழுமியங்களும் கேள்விக்குறியாகும்.எனவே சிறுதோட்ட உரிமையாளர்களாக இம்மக்களை உருவாக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதேயாகும்.இது அம்மக்கள் காணியுரிமையைப் பெற்றுக்கொள்ளவும் அடிப்படையாக அமையும் என்று நம்பப்படுகின்றது.

இதுவொரு புறமிருக்க இந்திய வம்சாவளியினர் இங்கு காலடி வைத்து 200 வருடமாகியுள்ள நிலையில் அம்மக்கள் இன்னும் கூடிய கரிசனையுடன் கல்வித்துறையில் நாட்டம் செலுத்துவதன் ஊடாக சவால்கள் பலவற்றையும் வெற்றி கொள்ள முடியும் என்று புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.இதன் நம்பகத்தன்மையை மலையக மக்கள் புரிந்து செயற்படுதல் வேண்டும்.அதேவேளை மாற்றுத் தொழிற்றுறை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய ஒரு தேவையும் மேலெழுந்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.