மாவீரர்களுக்கு தமிழ்மக்கள் செய்யும் கைமாறு என்ன?

உலகில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் பிறந்தபின்னர் தன்வாழ்நாளில் பலகனவுகளுடன்தான் வாழுகின்றார்கள். அவர்களது கனவுகளும் ஆசைகளும் அவர்களது வாழ்வை மகிழ்ச்சியை நோக்கிச் செல்வதற்கு வழிகோலுகின்றன.

தமிழர் தாயகம் என்று சொல்லப்படுகின்ற பிரதேசங்களில் வாழுகின்ற, வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும்.

darford mavverar2 மாவீரர்களுக்கு தமிழ்மக்கள் செய்யும் கைமாறு என்ன?சிறிலங்காவில் அரசாள்பவர்கள் தங்களது நாற்காலிகளைத் தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக தமிழ் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை மறுத்ததோடு மட்டுமல்லாது காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டதன் விளைவினை சிறிலங்கா இன்றுவரை அநுபவித்துக்கொண்டிருக்கிறது.

தமிழ்மக்கள் குறிப்பாக தமிழ்வாலிபர்கள் இயல்பாக வாழமுடியாத நிலையினை படைகளைக்கொண்டு அரசு அடக்க முற்பட்டமையினால் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் தமது கனவு வாழ்வினை தமதுமக்களின் விடிவிற்காக ஈடுபாட்டுடன் அர்ப்பணிக்கத் தீர்மானித்தார்கள். சுடுகலன்களை ஏந்தி மேலாதிக்கத்திற்கெதிரான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். அவ்வாறான போராட்டத்தில் தமது மக்களது விடிவிற்காக தங்களது விலைமதிக்க முடியாத பொன்னான உயிர்களைத் தியாகம் செய்தவர்களே “மாவீரர்கள்”. அவ்வாறான போற்றுதலுக்குரியவர்களையே, ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர்களையே ஆண்டுதோறும் ‘நவம்பர் 27’ ஆம் நாளன்று தமிழ் மக்கள் ‘மாவீரர் நாளாக’ நினைவு கூருகின்றார்கள்.

மாவீரர்கள் வெளிஉலகத்திலிருந்து வந்து குதித்து தங்களது உயிர்களை மாய்த்துக்கொண்டவர்கள் அல்ல. மாறாக தமிழர் பிரதேசங்களிலே தமது தாய் தந்தையருடனும் அக்கா, தம்பிகளுடன் அன்பு சொரிந்து நண்பர்களுடனும் உறவுகளுடனும் விளையாடி உறவாடி மகிழந்தவர்கள்.

தமக்கான வாழ்வினை எப்படியெல்லாம் தாம் வாழவேண்டும் என ஒருமனிதன் வடிவமைக்கிறானோ அப்படித்தான் மாவீரர்களும் எண்ணியிருப்பார்கள் என்பதில் எள்ளளவும் யாருக்கும் ஐயமிருக்க முடியாது.

‘தான் வளர்ந்து படித்து பெரியவனாகி நல்ல தொழில் செய்து குடும்பத்தை உயர்நிலைக்குக் கொண்டு வரவேண்டும்’

‘தனக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் முடித்து பிள்ளைகள் பெற்று அந்தப் பிள்ளைகளுக்குப் பிள்ளைகள் பிறந்து பேரப்பிள்ளைகளுடன் தன் முதுமைக்காலத்தை மகிழ்ச்சியாக் கழிக்க வேண்டும்’

‘வளர்ந்து சீரற்றிருக்கும் தம் ஊரின் கல்விநிலையினை மேம்படுத்தி நம் ஊரில் உள்ள பிள்ளைகள் அனைவருக்கும் சிறந்த கல்வியினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்’

‘என்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை காலம் முழுக்க கவலையின்றி வைத்துச் சோறு போட வேண்டும்’

இவ்வாறு இன்னோரன்ன ஆசைகளுடனும் கனவுகளுடனும்தான் மாவீரர்களும் தங்களது வாழ்லைத் திட்டமிட்டிருப்பார்கள்.

தமது உயிரைத் துச்சமாக மதித்ததன் விளைவுதான் அவர்கள் தங்களை விடுதலைப் போராட்டத்துடன் இணைத்துக்கொண்டது. போராட்ட காலத்தில் அவர்கள் அநுபவித்த இன்னல்களும் வேதனைகளும் அவர்களுக்கு மாத்திரமே தெரிந்த உண்மைகள்.

அவர்கள் இரவு பகலாக கண்விழித்து, காடுகளிலும் மேடுகளிலும் அலைந்து திரிந்து, போகிமிடங்களில் உணவின்றி பசியிருந்து, விழுப்புண் அடைகின்ற நேரங்களில் சொல்லொணா வேதனைகளை எதிர்கொண்டனுபவித்து வாழந்து மடிந்திருக்கிறார்கள்.

இவ்வாறான தியாகங்கள் எழுந்தமானமாக யாராலும் செய்துவிட முடியாதவை. தங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கில் ஓடிஒளிந்தவர்கள் மத்தியில்தான் அவர்கள் தங்களைப் போராட்டத்துடன் இணைத்துக்கொண்டவர்கள் என்பதனை தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மறந்துவிடலாகாது.

மாவீரர்களை நினைத்து மாவீரர்நாள் நினைவு கூரப்படுகின்றது. மாவீரர் வாரத்தில் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தமிழர் வாழும் எல்லாவிடங்களில் இவை நடைபெறுகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் மாவீரர்களைத் தமிழ்மக்கள் மனதில் தொடர்ந்தும் நிலைநிறுத்திச் செல்வதற்கு தேவையான வரலாற்று நிகழ்வுகள் ஆகும்.

மாவீரர்கள் தங்களது வாழ்வை தமிழ்மக்களது விடிவிற்காகத்தான் வழங்கினார்கள். அந்தத் தமிழ் மக்களில்தான் அவர்களது குடும்பமும் உள்ளடங்கியிருக்கின்றது. அந்தக் குடும்பங்களின் நிலை தற்காலத்தில் எப்படியிருக்கின்றது?

தனதுபிள்ளை தன்னை வாழவைப்பான் என்று எண்ணியிருந்த பலகுடும்பங்கள்; இன்று எப்படி வாழப்போகின்றோம் என்பதனையோ அடுத்தவேளை உணவிற்கு என்ன செய்யப்போகின்றோம் என்பதனையோ தெரியாது வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற கசப்பான உண்மையை ஒவ்வொரு தமிழர்களும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

மாவீரர்களின் குடும்பத்தாரின் இன்றைய செயலறுநிலைக்கு தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ்மகனும் பொறுப்பாளி, ஒவ்வொரு தமிழ்மகனும் பதில் சொல்ல வேண்டியது கட்டாயம்;, ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் அவர்களது வாழ்வினை வளமாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதனை கடந்து செல்லாமல் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

எனில் என்ன செய்ய வேண்டும்?

மாவீரர் நாள், மாவீரர் வாரம் மாத்திரம்தான் மாவீரர்களை நினைவில் வைத்திருக்கச் செய்யக் கூடியவையா?

தமது பிள்ளைகளை இழந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் மாவீரர்நாள்தான். மாவீரர்நாள் என்ற பெயரில் செலவிடப்படுகின்ற அளவுக்கதிகமான நிதி எதற்காகச் செலவிடப்படுகின்றது என்பதனை எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் தம்முள்ளே கேட்க வேண்டிய கேள்வி. தமது அடுத்த வேளை உணவிற்கு வழிதெரியாத நிலையில் மாவீரர்களைப் பெற்றவர்கள் இருக்கும் போது இவ்வாறான செலவுகள் தேவைதானா என்ற நியாயமான கேள்வி எழுவதில் தப்பொன்றும் இல்லை. மாவீரர்களை நினைவு கூருபவர்கள் உண்மையாகவே நினைவு கூருவதாயின் செலவுகள் இன்றி உணர்வுபூர்மான நிழ்வுகள் ஊடாக நினைவு கூரவேண்டும்.

மாவீரர் நிகழ்வுகளிலே உள்நுழையும் அரசியல் செயற்பாடுகளும் தம்மை முன்னிலைப்படுத்தும் நிலைகளும் ஒவ்வொரு தமிழ்மகனையும் வெட்கித் தலைகுனிய வைத்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடர்ந்தும் நடைபெற இடமளிப்பது தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமானதல்ல. காலந்தாழ்த்தாது இதற்கான உறுதியானதொரு எதிர்காலத் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

அனைத்து இடங்களிலும் ஒற்றுமையின்றித் தவிக்கும் தமிழர்களிடையே இவ்விடத்தில் ஒற்றுமையுடன் செயற்படுமாறு கோருவதும், அவ்வாறு ஒற்றுமையாகச் செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதும் மடைமைத்தனம் தான்.

ஆனாலும் ஓவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு குழு அமைக்கப்பட்டு மாவீரர் குடும்பங்களின் நலனை மேம்படுத்தும் தொடர் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இக்குழுவில் அரசியல்வாதிகள் எவரும் எந்தக்கரணியம் கொண்டும் உள்வாங்கக்கூடாது. அப்போதுதான் அந்தக்குழுவால் தமது பணியை திட்டமிட்டவாறு திறம்படச் செயற்படுத்த முடியும். வேறு யாருமே மாவீரர்கள் தொடர்பான எந்த வேலைத்திட்டத்தினையும் செய்வதற்கு இடங்கொடாத வகையில் அந்த ஊரகக் குழுக்கள் செயற்பட வேண்டும்.

இதுவே தற்காலத்தின் தேவையும் மாவீரர்களுக்கு தமிழ்மக்கள் செய்யும் கைமாறும் ஆகும்.

கதிர்.திருச்செல்வம்,

தம்பலகமம்.