பயிரை மேயும் வேலிகள் – துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட மக்கள் காணியுரிமை மற்றும் வீட்டுரிமை பெற்ற சமூகமாக மாற்றம்பெற வேண்டும் என்ற கருத்து வெளிப்பாடுகள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றன.எனினும் இது குறித்த சாதக விளைவுகள் இன்னும் ஏற்படாத நிலையில் தொடர்ந்தும் இம்மக்கள் புறக்கணிக்கப்பட்ட ஒரு நிலையிலேயே இருந்து வருகின்றமை வருந்தத்தக்க விடயமாகும்.இந்நிலையில் பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள இச்சந்தர்ப்பத்தில் இனியேனும் இவர்களின் காணியுரிமை மற்றும் வீட்டுரிமை கனவு நனவாக வேண்டும் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாகும்.

Malayakam 1 பயிரை மேயும் வேலிகள் - துரைசாமி நடராஜாபெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வருகைதந்த காலம் முதல் பல்வேறு துன்ப துயரங்களையும் அனுபவித்துள்ளமை தெரிந்த விடயமாகும்.இந்நிலை தற்போதும் பாரியளவில் மாற்றம் பெற்றதாக இல்லை.அராஜக ஆட்சியாளர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இன்னும் இம்மக்கள் மீதான நெருக்கீடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இதன் தாக்கம் சகல துறைகளிலும் எதிரொலிக்கும் நிலையில் இதிலிருந்தும் மீள்வதற்கு வழிவகைகள் குறைவாகவே காணப்படுகின்றன.’ வேலியே பயிரை மேய்ந்தாற்போல ‘ இச்சமூகத்தை சேர்ந்த சிலரே இம்மக்களின் பின்னடைவிற்கு காரணகர்த்தாவாக இருந்து வருவதாகவும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

இதேவேளை ஒரு சமூகம் மேலெழும்புவதற்கு அச்சமூகத்தைச் சார்ந்த புத்திஜீவிகளின் வகிபாகம் அவசியமாக தேவைப்படுகின்றது. இந்நிலையில் மலையக சமூகத்தில் இருந்து மேலெழும்பிய புத்திஜீவிகள் இச்சமூகத்தின் மேம்பாட்டிற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்காமல் தானுண்டு தனது வேலையுண்டு என்று ஒதுங்கி வாழ்வதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.இதில் உண்மை இல்லாமலும் இல்லை.சுயநலத்திற்கு அப்பால் சமூகத்தை மேம்படுத்தும் பொதுநல சிந்தனைகளையும் புத்திஜீவிகள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

காணியுரிமை மற்றும் வீட்டுரிமை என்பன ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக அமைகின்றன.எனினும் மலையக பெருந்தோட்ட சமூகத்தைப் பொறுத்தவரையில் இவை இரண்டுமே தொடர்ச்சியாக மறுக்கப்பட்ட ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது.தேர்தல் விஞ்ஞாபனத்திலும் வரவு செலவு திட்ட முன்மொழிவுகளிலும் மலையக மக்களின் காணியுரிமை மற்றும் வீட்டுரிமை தொடர்பில் அதிகமான விடயங்கள் வலியுறுத்தப்படுகின்றன.

எனினும் இவற்றின் நடைமுறைச் சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு அல்லது வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வலியுறுத்தல்கள் அனைத்தும் மறக்கப்பட்டு விடுகின்றன என்பது கடந்தகால வரலாறாகும். இதன் தொடர்ச்சி இன்னும் நீங்கியதாக இல்லை.பெருந்தோட்ட மக்களுக்கு காணியுரிமையை வழங்கி தேசிய நீரோட்டத்தில் அவர்களை இணைத்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளபோதும் இதற்கான முன்னெடுப்புக்கள் காத்திரமானதாக இல்லை.காணிகளை கொடுப்பதற்கு பதிலாக பறித்தெடுக்கும் நடவடிக்கைகளையே இனவாத சிந்தனையாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

காணி சீர்திருத்த சட்டம்

1972 ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட காணி உச்சவரம்பு சட்டம் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினருக்கு ஒரு பேரிடியாக அமைந்தது.இவ்வாண்டில் கொண்டு வரப்பட்ட காணி உச்சவரம்பு சட்டமும், தொடர்ச்சியான நடவடிக்கைகளும் தேயிலைக் காணிகளின் உடைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு உந்துசக்தியாக அமைந்தன.1972 முதல் அமுல்படுத்தப்பட்ட காணி உச்சவரம்பு சட்டத்திற்கேற்ப, நெற்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களாயின் 10 ஹெக்டேயருக்கு மேற்பட்ட தனியுடைமைகளும், பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களாயின் 20 ஹெக்டேயருக்கு மேற்பட்ட தனியார் உடைமைகளும் சுவீகரிக்கப்பட்டன.இதற்கேற்ப 1972 இல் பெருந்தோட்டக் காணிகளில் சிறிய பகுதியினை மட்டுமே சுவீகரித்த நிலையில்,1975 ம் ஆண்டு காணிச் சீர்திருத்த நடவடிக்கையின் இரண்டாவது கட்டத்திலேயே அதிகளவான பெருந்தோட்டக் காணிகள் சுவீகரிக்கப் பட்டதனை அறிந்த கொள்ளக் கூடியதாக உள்ளது.

malaiyakam பயிரை மேயும் வேலிகள் - துரைசாமி நடராஜா1980 இல் பயனற்ற தேயிலைக் காணிகள் என்றுஅடையாளப் படுத்தப்பட்டு பத்தாயிரம் ஹெக்டேயர்  காணிகள்  கம்பளை, கண்டி,உலப்பனை கடுகண்ணாவ பகுதிகளில் சுவீகரிக்கப்பட்டன.இக்காணிகளில் மாற்றுப்பயிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் உலக வங்கியும் இதற்கென அனுசரணையாக இருந்தது.எனினும் இக்காணிகள் பின்னர் காணியற்ற பெரும்பான்மை கிராமிய மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டன.இதுபோல இன்னும் பல உதாரணங்களையும் எம்மால் குறிப்பிட்டுக் கூற முடியும்.

சமகாலத்தில் கூட பெருந்தோட்டக் காணிகள் அபிவிருத்தி என்னும் போர்வையில் சுவீகரிக்கப்பட்டு இங்குள்ள மக்களின் இருப்பு சிதைக்கப்படுவதைக் காண்கிறோம்.இதேவேளை பெருந்தோட்டத் துறையில் உள்ள அரச தோட்டக் காணிகளை எந்தவித திட்டமிடலும் இல்லாமல் கூறுபோட்டு விற்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்  தெரிவித்திருக்கின்றார்.இதேவேளை அங்கிருக்கின்ற ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களின் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவுகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் எடுப்பதாகத் தெரியவில்லை என்றும் வேலுகுமார் குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பெருந்தோட்டத்துறையின் தேயிலை விளைநிலங்கள் திட்டமிட்டு சுவீகரிக்கப்படும் நிலையில் தொழிலாளர்களின் காணி பிரச்சினையானது மென்மேலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கம்பனியினர் முன்வைக்கின்ற வெளியார் உற்பத்தி முறையானது தொழிலாளர்கள் காணியுரிமையைப் பெற்றுக்கொள்ள முதற்படியாகவும் வாய்ப்பாகவும் அமையும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளமையும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

சமூக நிறுவனம்

இதேவேளை பெருந்தோட்ட மக்களின் வீட்டுரிமை தொடர்பில் நோக்குகையில் இந்தக் கனவு இன்னும் நிறைவேறாத ஒன்றாகவே இருந்து வருகின்றமை தெரிந்ததேயாகும்.லயத்து வாழ்க்கை இம்மக்களைப் பொறுத்தவரையில் ஒரு சிறைவாசமேயாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை.’ வீடு என்பது தனியே வெயிலுக்கும் மழைக்குமான ஓர் ஒதுங்கிடம் அல்ல.

அது சமூக நிறுவனமும் கூட.அங்கேதான் சமூக நாகரிகத்தின் அத்திவாரம் இடப்படுகின்றது.எனவே வீடு என்பது குறைந்தபட்ச தகுதிகளையாவது கொண்டிருக்க வேண்டும் ‘ என்று தெரிவிக்கப்படுகின்றது.என்றபோதும் பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரையில் இது எட்டாக்கனியேயாகும்.இதேவேளை தனிவீட்டுக் கலாசாரம் மலையக மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் அவசரமும் அவசியமாகும்.என்றபோதும் இதில் காணப்படும் இழுத்தடிப்புகள் ஒருபோதும் ஓய்ந்ததாக இல்லை.மலையக மக்கள் பிரஜாவுரிமையினைப் பெற்றுக் கொண்டபோதும் காணியுரிமை மற்றும் வீட்டுரிமை இல்லாமை இதன் உண்மையான பயன்களை அனுபவிக்க தடையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீடு என்பது தனிப்பட்ட வாழ்க்கை நடைமுறை மற்றும் சமூக ஊடாட்டம் என்பவற்றில் செல்வாக்கு செலுத்தும் காரணியாக மாறியுள்ளது.பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரையில் தனியான வீடு மற்றும் காணியுரிமை இன்மையானது அவர்கள் குறித்த மதிப்பீடு மற்றும் கௌரவத்தில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.தனியான வீட்டினை உரித்தாக்கிக் கொள்ளல் என்பது ஏனையவர்களின் கட்டுப்பாடு மற்றும் அறிவுறுத்தல்களில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ்வதற்கு வழிசெய்கின்றது’ என்று கல்விமான் எம்.வாமதேவன் சுட்டிக்காட்டியுள்ளமையும் இங்கு நோக்கத்தக்கதாகும்.எனவே மலையக மக்களின் காணியுரிமையும்  வீட்டுரிமையும் பேச்சளவில் முற்றுப்பெற்று விடாது நடைமுறைசாத்தியம் மிக்கதாக இருக்க வேண்டும்.