போஷாக்கின்மையில் வறுமையின் ஆதிக்கம் – துரைசாமி நடராஜா

இலங்கை சிறுவர்களின் போஷாக்கு நிலைமைகள் தொடர்பில் திருப்தியற்ற வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன.இந்நிலையானது கல்வி உள்ளிட்ட பல துறைகளின் பின்னடைவுக்கும் உந்துசக்தியாக இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனிடையே சிறுவர் போஷாக்கின்மை தொடர்பில் அரச நிறுவனங்கள் முன்வைத்துள்ள புள்ளிவிபர அறிக்கைகளில் இருந்து நாட்டின் உண்மை நிலைமை புலப்படவில்லை ஆதலால் போஷாக்கு தேவையுடைய பிள்ளைகளை சரியாக இனங்கண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற விசேட குழு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

kida malayakam போஷாக்கின்மையில் வறுமையின் ஆதிக்கம் - துரைசாமி நடராஜாஇந்நிலையில் நாட்டிலுள்ள சிறுவர்களின் போஷாக்கு நிலைமைகள் குறித்து நாம் நோக்குகின்றபோது பெருந்தோட்ட சிறுவர்களின் போஷாக்கு நிலை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது.இங்குள்ள சிறுவர்கள் தொடர்ச்சியாகவே போஷாக்கின்மைக்கு முகம் கொடுத்து வருவதாகவும் எனினும் இதனைத் தீர்த்துவைக்க காத்திரமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஒரு சமூகத்தின் அபிவிருத்தியில் போஷாக்கு என்பது கணிசமான செல்வாக்கு செலுத்துகின்றது.அதிலும் சிறுவர்களின் போஷாக்கு உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் திடகாத்திரமானவர்களாக வளர்த்தெடுக்கப்படும் பட்சத்தில் அது பல்வேறு சாதக விளைவுகளுக்கும் அடிப்படையாக அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.இந்த வகையில் இலங்கையின் சிறுவர் போஷாக்கு நிலைமைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.அதிலும் கொரோனாவை பிந்திய காலகட்டம் சிறுவர்களின் போஷாக்கு உள்ளிட்ட நிலைமைகளை கேள்விக்குறியாக்கியுள்ளமையும் தெரிந்ததேயாகும்.

உலக உணவில் 14 சதவீதமானவை அறுவடைக்கும் விற்பனைக்கும் இடையிலும், 17 சதவீதமானவை விற்பனை மற்றும் பாவனை மட்டத்திலும் இழக்கப்படுவதாக தகவல்கள் வலியுறுத்துகின்றன.உலகில் 81 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் வாடும் நிலையில் சிறுவர்களின் எண்ணிக்கை இதில் அதிகமாகவே உள்ளீர்க்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படும் உணவில் சுமார் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கழிவாக அகற்றப்படுகின்றன.இதனடிப்படையில் வருடாந்தம் 1.3 பில்லியன் தொன் உணவுக் கழிவுகள் குப்பைகளை சென்றடைவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறாக பல பில்லியன் தொன் கணக்கான உணவுகள் குப்பைகளை சென்றடையும் நிலையில் போதிய உணவில்லாமல் அதிலும் போஷாக்கான உணவில்லாமல் பலர் பட்டினிச்சாவை எதிர்நோக்கி வருகின்றமை கொடுமையிலும் கொடுமையாகும்.

Malayakam 1 போஷாக்கின்மையில் வறுமையின் ஆதிக்கம் - துரைசாமி நடராஜாஉலகளாவிய ரீதியில் 828 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுகின்ற நிலையில் உலக சனத்தொகையில் 40 சதவீதமாகவுள்ள 3.1 பில்லியன் மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதாக அண்மைக்கால தகவலொன்று வலியுறுத்துகின்றது.இதேவேளை இலங்கையில் உணவு தொடர்பான பாதுகாப்பின்மை காரணமாக கிராமப் பகுதிகளில் 83 சதவீதமானவர்களும், நகரப் பகுதிகளில் 17 சதவீதமானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வகையில் இலங்கையின் சனத்தொகையில் 30 சதவீதமானவர்கள் உணவுப் பாதுகாப்பின்மைக்கு கடந்த காலங்களில் முகம் கொடுத்திருந்ததை அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

அமைப்புக்களின் எச்சரிக்கை

சிறுவர்களைப் பொறுத்தவரையில் இலங்கையில் கடந்த 2021 ம் ஆண்டில் 12.2 சதவீதமாகக் காணப்பட்ட எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 15.3 சதவீதமாக அதிகரித்திருந்தது.அதேபோன்று தமது பிள்ளைகளுக்கு அவசியமான உணவை வழங்குவதில் பெருமளவான குடும்பங்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்ததுடன் பொதுப் போக்குவரத்து சேவை குறைபாட்டின் விளைவாக சிறுவர்களால் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இவ்வாறான நடவடிக்கைகள் சிறுவர் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு அடித்தளமிட்டதுடன் அவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்கு உட்படுத்தியதாக யுனிசெப் அமைப்பின் அறிக்கை வலியுறுத்தியது.இத்தகைய நிலையில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு உதவும் வகையில் சுகாதாரம், போஷாக்கு, சிறுவர் பாதுகாப்பு,கல்வி, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் சார்ந்த உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்கென யுனிசெப் பல்வேறு திட்டங்களையும் அமுல்படுத்தி இருந்தது.

2022 ம் ஆண்டில் ஏழு இலட்சத்து 50,000 சிறுவர்கள் உள்ளடங்கலாக 1.3 மில்லியன் மக்களுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகளை யுனிசெப் வழங்கி இருந்தது.நகர்ப்புறங்களில் வசிக்கும் எட்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் குடிநீர் வசதிகளை பெற்றுக்கொண்டதோடு, பின்தங்கிய மற்றும் பெருந்தோட்டங்களில் வசிக்கும் 285,403 சிறுவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.எவ்வாறெனினும் 2022 ம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 28 சதவீதமானோர் அதாவது 6.2 மில்லியன் பேர் ஓரளவு உணவுப் பாதுகாப்பின்மைக்கும், 66,000 பேர் தீவிர உணவுப் பாதுகாப்பின்மைக்கும் முகங்கொடுத்திருந்ததாக அறிக்கைகள் வலியுறுத்தின.

இந்நிலைக்கு சிறுவர்கள் பலரும் முகங்கொடுத்திருந்த நிலையில் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தது.இதேவேளை இலங்கையில் குறைந்தபட்சம் 6.3 மில்லியன் மக்கள் தீவிர உணவுப் பாதுகாப்பின்மை நிலையை எதிர்நோக்கி இருப்பதாகவும்,அவசியமான உயிர்காக்கும் உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் என்பன வழங்கப்படாவிட்டால் இந்த ஆண்டில் அவர்களின் நிலைமை மேலும் மோசமடையுமென்று செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச்சங்கங்களின் கூட்டிணைவும் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தமையும் நோக்கத்தக்கதாகும்.

சிறுவர்களின் போஷாக்கு தொடர்பாக நாம் பேசுகின்றபோது மலையக பெருந்தோட்ட சிறுவர்கள் தொடர்பில் சற்று ஆழமாகவே சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது.இச்சிறுவர்களின் போஷாக்கிற்கும் பெற்றோரின் வருமானத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்பது நீண்டகால குற்றச்சாட்டாக இருந்து வரும் நிலையில் இவர்களின் ஊதியம் மூன்று வேளைக்கு ஏதேனும் ஒரு உணவை உண்பதற்கே போதாதாகியுள்ள நிலையில் நிறையுணவு மற்றும் போஷாக்குணவு என்பதெல்லாம் வெறும் கனவாகவே இருந்து வருகின்றது.

students44 1598422726 போஷாக்கின்மையில் வறுமையின் ஆதிக்கம் - துரைசாமி நடராஜாஇலங்கையின் வறுமை நிலைகுறித்து நாம் நோக்குகையில், 1990/91 இல் வறிய குடும்பங்களின் சதவீதம் தேசியளவில் 21.8 ஆகும்.இது நகர்ப்புறத்தில் 12.9 ஆகவும், கிராமப்புறத்தில் 24.7 ஆகவும், பெருந்தோட்டத்தில் 16.7 ஆகவும் காணப்பட்டது.எனினும் பின்வந்த காலங்களில் வறிய குடும்பங்களின் சதவீதம்  பெருந்தோட்டப் பகுதிகளில் தொடர்ச்சியாகவே அதிகரித்து வந்துள்ளது.இதற்கேற்ப 1995/96 இல் தேசியளவில் 24.3, நகர்ப்புறம் 11.0, கிராமப்புறம் 25.9, பெருந்தோட்டம் 32.2 என்ற சதவீதத்தில் நாட்டில் வறிய குடும்பங்களின் எண்ணிக்கை அமைந்திருந்தது.2002 இல் பெருந்தோட்டத்தில் வறிய குடும்பங்களின் எண்ணிக்கை 24.3 ஆகவும், 2006/07 இல் 25.8 ஆகவும் காணப்பட்டது.இந்நிலையில் வறுமையின் தாக்கம் பெருந்தோட்ட சிறுவர்களின் போஷாக்கின்மையில் மிகுந்த செல்வாக்கு செலுத்தியுள்ளதை அவதானிக்கலாம்.கடந்தகாலத்திலும் சமகாலத்திலும் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளும் இதனை புலப்படுத்தியுள்ளன.

இறப்புக்கள் அதிகம்

1976 ம் ஆண்டு இடம்பெற்ற ‘இலங்கை போஷாக்கு அளவீடு ‘ கிராமிய சிறுவர்களைவிட தோட்டப்புற சிறுவர்களே பெருமளவு நீடித்த போஷாக்கின்மையாலும், குறை போஷாக்கினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.தோட்டப் பகுதிகளில் கலோரியளவில் உணவு நுகர்ச்சி சராசரிக்கு மேலாக இருப்பினும், புரத, உயிர்ச்சத்துக்கள் நிறைந்த உணவு நுகர்ச்சி மிக மிகக் குறைவாக இருப்பதனால் அவர்கள் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகின்றனர்.1992, 2004, 2019 ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் பெருந்தோட்ட சிறுவர்களின் குறைபோஷாக்கு நிலையை எடுத்துரைப்பதாகவே உள்ளன.இலவச மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டபோதும் போதியளவு போஷாக்கான உணவு உட்கொள்ளப்படாமையின் காரணமாக போஷாக்கின்மை நோய்க்கு ஆளாகும் தன்மை  தோட்டப்புறங்களில் அதிகரித்து காணப்பட்டது.

இதேவேளை தோட்ட மருந்தகங்களிலே அடிப்படை மருத்துவ வசதிகளே வழங்கப்பட்டதனால் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக காணப்பட்டதாக வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.ஆசிய நாடுகளிடையே ஆகக்கூடிய குறைபோஷாக்கினைக் கொண்ட நாடுகளில் திமூர் லெஸ்தோ (26.9%), ஆப்கானிஸ்தான் (26.8%), இலங்கை (22.1%), பாகிஸ்தான் (22%) மொங்கோலியா (20.5%), வங்காளதேசம் (16.4%), இந்தியா ((15.2%) என்றவாறு நிலைமைகள் காணப்படுகின்றன.

இலங்கையின் ஒப்பளவான சில ஆரோக்கியம் தொடர்பான விபரங்களை அடிப்படையாக வைத்து நோக்குகையில் 2016 ம் ஆண்டில் அது பின்வருமாறு அமைந்திருந்தது.ஐந்து வயதுக்கும் குறைந்தவர்களிடையே வளர்ச்சி குறைந்தவர்கள் வீதம் தேசியளவில் 17 ஆகவும்,தோட்டப்புறங்களில் 31.7 வீதமாகவும் இருந்தது.ஐந்து வயதுக்கும் குறைந்தவர்களிடையே குறை நிறை கொண்டவர்கள் வீதமானது தேசியளவில் 20.5 ஆகக் காணப்பட்டதோடு தோட்டப்புறங்களில் இது 29.7 ஆகும்.இதேவேளை உயரம் மற்றும் நிறை என்பவற்றுக்கிடையே ஏற்ற தொடர்பின்மை (BMI) வீதமானது தேசியளவில் 9.1 ஆகவும், தோட்டப்புறங்களில் 22 ஆகவும் காணப்பட்டது.நிறையிழந்து செல்கின்றமை தேசியளவில் 13.4 வீதமாகவும், தோட்டப்புறங்களில் 15.1 வீதமாகவுமிருந்தது.இதைப்போன்றே மேலும் பல விடயங்களும் தேசியளவைக் காட்டிலும் பெருந்தோட்டங்களில் அதிகரித்த வீதத்தையே வெளிப்படுத்தின.

பெருந்தோட்ட சிறுவர்களின் போக்குகள் இவ்வாறிருக்க பெருந்தோட்ட கர்ப்பிணித் தாய்மார் மத்தியில் பாரிய மன உளைச்சல் காணப்படுவதாகவும்,இந்நிலையானது பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்துவதாகவும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு தெரிவித்துள்ளது.மேலும் சிறுவர் போஷாக்கின்மை தொடர்பில் அரச நிறுவனங்கள் முன்வைத்துள்ள புள்ளிவிபர அறிக்கைகளில் இருந்து நாட்டின் உண்மை நிலைமை புலப்படுவதில்லை.

ஆகவே போஷாக்குத் தேவையுடைய பிள்ளைகளை சரியாக இனங்கண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற விசேட குழு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.இந்நிலையில் பின்தங்கிய வெளிப்பாடுகளைக் கொண்டுள்ள பெருந்தோட்ட சிறுவர்களின் போஷாக்குநிலை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி அச்சிறுவர்களின் போஷாக்கு மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதோடு அரசாங்கம் இதிலிருந்தும் விலகிச் செல்ல முற்படுதல் கூடாது.அவ்வாறு விலகிச் செல்வதால் பாதக விளைவுகள் மேலும் அதிகமாகும்.