சிவயோகநாதனுக்கு அச்சுறுத்தல்; பொலிஸாா் எனக் கூறி தகவல் சேகரிப்பு

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவரும், பொத்துவில் முதல் பொலிகண்டி வரை அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளருமான சிவயோகநாதன் சீலனின் இல்லத்துக்கு அவா் வீட்டில் இல்லாத நேரத்தில் சென்ற பொலிஸாா், அவா் தொடா்பில் கடுமையாக விசாரணைகளை மேற்கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சீலன் தெரிவிக்கையில், “இன்று நண்பகல் 1.50 மணிக்கு நான் வீட்டில் இல்லாதபோது எனது மனைவியாரிடம் தான் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸில் இருந்து வருவதாக கூறிய நபர், எனது பெயர் விபரங்கள் மற்றும் நான் எங்கு சென்றுள்ளேன் என்ற விபரங்களை சேகரித்து சென்றுள்ளார்.
விசாரணையின் போது அவா் கடும் தொணியில் நடந்து கொண்டாா். இச் செயற்பாடானது எனது அடிப்படை உரிமையை மீறும் செயலாக உள்ளது. இதன் மூலம் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். இச் செயற்பாடானது கடந்த சில மாதங்களாக மாதத்திற்கு ஒரு தடவையேனும் நடைபெற்று வருகின்றது. அத்துடன் எனது குடும்பத்தினரையும் அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது” எனவும் சீலன் தெரிவித்தாா்.
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையிலும் தமிழ்ப் பண்ணையாளா்களுடன் இணைந்து போராட்டங்களை ஏற்பாடு செய்பவா்களில் ஒருவராகவும் சீலன் உள்ளாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.