ஐ.நா. மீது தமிழர்கள் நம்பிக்கை இழப்பு – செல்வம் அடைக்கலநாதன்

selvama 1 ஐ.நா. மீது தமிழர்கள் நம்பிக்கை இழப்பு - செல்வம் அடைக்கலநாதன்“ஐ.நா. மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றார்கள். இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்கள் காட்டமாக இருந்தாலும் அவை தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக சரியான நிலைப்பாட்டை ஐ.நா. எடுக்கவில்லை” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்குற்றம் சாட்டினார்.

வவுனியாவில் உள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை அரசால் கொண்டு வரப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் மோசமானதாகவே உள்ளது. அதன்மூலம் ஜனநாயகப் போராட்டங்கள் தடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது. பத்திரிகை சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பமும் உள்ளது. இதற்கு நாம் பாராளுமன்றத்தில் எதிர்ப்பைக் காட்டுவோம்” என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தாா்.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் எப்படிப் பாய்ந்தது என்று நாம் பார்த்தோம். போராட்டங்களை முன்னெடுக்கும்போதும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நிலைப்பாடாக உள்ளது. எனினும், இலங்கை அரசு அதை ஏமாற்றி வருகின்றது.

ஐ.நா. மீதும் எமது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றார்கள். இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்கள் காட்டமாக இருந்தாலும் அவை தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக சரியான நிலைப்பாட்டை ஐ.நா. எடுக்கவில்லை. பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைச் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்பது எமது மக்களின் கோரிக்கையாகவுள்ளது. எனவே, புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எம்மால் ஏற்க முடியாது” என்றும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தாா்.