செங்கடலுக்கு கப்பல் தேவை இல்லை! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்புங்கள்; பாராளுமன்றத்தில் ஹக்கீம்

செங்கடலில் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதற்காக கடற்படையை அங்கு அனுப்புவதை விட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிகளை செய்ய கடற்படையினரை ஈடுபடுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

“கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக புல்மோட்டை தொடக்கம் பொத்துவில் பானமை வரையும் அனைத்து கரையோர மற்றும் தாழ்நிலப் பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அந்த பிரதேச மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நீர் வலிந்து ஓடமுடியாமல் பல இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. அதனால் போக்குவர்தது பிரச்சினைகளும் மிகவும் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது.

அத்துடன் மக்களின் வாழ்விட பிரதேசங்களில் இருந்து நீரை அகற்றவேண்டிய நிலையும் கிணறுகளை சுத்தப்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இந்த மோசமான காலநிலையால் பயிர் நிலங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்க, அரசாங்க அதிபர்கள் அதற்கான கணக்கீடுகளை செய்து, அதற்கான தேவையான வசதிகளை, அந்த விடயங்களை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்.

இந்த சந்தர்ப்பத்திலே அரசாங்கம் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதற்காக செங்கடலுக்கு எமது கடற் படையினரை அனுப்புவதற்கு பதிலாக, கடற்படையினரை இவ்வாறான அனர்த்த நிலைமைகளில் ஈடுபடுத்துவதே மிகவும் உசித்தமான விடயம். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்துவார் என எதிர்பார்கிறேன்.

செங்கடலுக்கு இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாக்க எமது கடற் படையினரை அனுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்திருக்கும் தீர்மானத்தை நான் கடுமையாக சபையில் விமர்சித்திருந்தேன். அதனால் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதை விட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிகளை செய்ய கடற்படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் வினயமாக ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன். அது அந்த மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்றார்.