ஜோதிடர்களின் அறிவுரைக்காக காத்திருக்கும் ரணில்

ranil wickremesinghe 1 e1660396005582 ஜோதிடர்களின் அறிவுரைக்காக காத்திருக்கும் ரணில்ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது முடிவினை அறிவிப்பதற்கு ஜோதிடர்களின் அறிவுரையினை ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்து காத்திருப்பதாக சிங்கள வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த வார ஏட்டின் அரசியல் பத்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி தரப்பில் இருந்து பல்வேறு வகையான செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், இது தொடர்பில் ஜனாதிபதி இதுவரையில் பகிரங்கமாக எதனையும் வெளிப்படுத்தவில்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி பகிரங்கமாக இம்முறை வெளிப்படுத்த தயங்குவதற்கு ஜோதிட விடயமே தவிர வேறொன்றுமில்லை.

கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க உண்மையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறவே விரும்பினார். ஆனால், அப்போது ரணிலின் கருத்தை மாற்றியது வேறு யாரும் அல்ல, அவருக்கு மிகவும் நெருக்கமான ஒரு சில ஜோதிடர்கள்தான்.

ரணிலை சந்தித்தபோது அவர்கள் கூறியிருந்த ஜோதிட அறிவுரைகள்தான் அவர் அப்போது அரசியலை விட்டு விலகக் கூடாது என்றும் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் மிகவும் சக்தி வாய்ந்த கிரகம் உதயமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் ரணில் நாட்டின் உயரிய பதவியை அடையும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று அவர்கள் அங்கு தெரிவித்திருந்தனர். பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த ரணில், இந்த ஜோதிட அறிவுரை காரணமாக சுமார் ஒரு வருடம் பாராளுமன்றத்துக்கு வருவதை தாமதப்படுத்தினார்.

ரணிலின் ஜாதகப்படி மீண்டும் ஒரு கிரக மாற்ற இணக்கம் உருவாகும் என்றும் அதன் மூலம் இந்த பதவிகள் லாபகரமாக அமையும் என்றும் ஜோதிடர்கள் ரணிலிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். 1993 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச காலமான போது, ​​கிரக மாற்றங்களினால் ரணிலுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

அதன்படி பிரேமதாச மாத்திரமல்ல, லலித் – காமினி உள்ளிட்ட அனைத்து மூத்த தலைவர்களும் காலமானதால் ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. அதே போன்று 2022 ஆம் ஆண்டுக்குள் கிரக மாற்றம் மீண்டும் இணக்கமாகி நாட்டின் உயரிய பதவிக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும். ஆனால், அந்த பதவி காலம் விரைவில் பறிபோகும் என்று ஜோதிடர்கள் ரணிலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

குருவின் பலம் இன்னும் இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. மே 1 ஆம் திகதி நடக்க உள்ள குரு மாற்றத்துடன் இந்த கிரக மாற்றப் பலம் முற்றாக முடிவடையும் என்பது ரணிலுக்கு தெரியாது.

கடந்த காலங்களில் ரணில் இந்த நிலைமையை மனதில் கொண்டு அனைத்து அரசியல் முடிவுகளையும் எடுத்தார். அதன்படி, மே மாதத்திற்குப் பிறகு உருவாகும் அரசியல் சூழ்நிலையை ஆராய்ந்து, தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ரணில் முடிவெடுப்பார் என்று நம்புகின்றோம்.

ஜோதிட அறிவுரையினை ஏற்று ரணில் போட்டியிட்டால் கடந்த காலங்களில் கணித்த ஜோதிடர்களுக்கு ஏற்பட்ட கதியே இறுதியில் ரணிலின் ஜோதிடர்களுக்கும் ஏற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.