இந்தியாவுடன் கூட ஒரு நெருக்கமான உறவினை ஏற்படுத்த தவறியிருக்கின்றோம்: சி.வி.விக்னேஸ்வரன்

“எமது பாதுகாப்பின் காவலனாக நாம் கருதிக்கொள்ளும் இந்தியாவுடன் கூட ஒரு நெருக்கமான உறவினை ஏற்படுத்தி பலம் மிக்க அரசியல் ராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் தவறியிருக்கின்றோம்” என்று யாழ் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

“எமது படித்த வாலிபர்கள் எம் நாட்டை விட்டு வெளிநாடு செல்கின்றார்கள் என்பதை வைத்து எமது சனப்பெருக்கம் மிகவும் குறைந்து சனத்தொகை வீழ்ச்சியடைந்து வருகின்றது என்பதை உணர்ந்து இனியாவது எமது தமிழ்த் தலைவர்கள் தமது போட்டி பொறாமைகளைக் களைந்து தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் வைத்து ஒற்றுமை நடவடிக்கைகளில் ஈடுபட முன்வர வேண்டும்.

இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின் போது மட்டும் அன்றி, இப்போதும்கூட எந்த ஒரு நாட்டினதும் ஆதரவு இன்றியே நாம் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றோம். இது எமது பலவீனம் மட்டுமன்றி இயலாமையும் கூட. எமது பாதுகாப்பின் காவலனாக நாம் கருதிக்கொள்ளும் இந்தியாவுடன் கூட ஒரு நெருக்கமான உறவினை ஏற்படுத்தி பலம் மிக்க அரசியல் ராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் தவறியிருக்கின்றோம்.

இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. அவர்களின் பங்கை நாம் உதாசீனம் செய்துவிட முடியாது. அதேபோல, இந்தியாவின் பாதுகாப்புக்கு, குறிப்பாக இந்தியாவின் தென்கோடியின் பாதுகாப்புக்கு, இலங்கையின் வடக்கு- கிழக்கில் வாழும் மக்கள் தம்மைத் தாமே ஆளும் உச்ச பட்ச அதிகாரக் கட்டமைப்புடன் இருப்பதும் அவசியம் ஆகும். இந்தியாவின் நிரந்தரமான நம்பகமான நண்பர்கள் இலங்கை வாழ் தமிழ் மக்கள் மட்டுமே. இலங்கையின் இன்றைய பொருளாதார, அரசியல் சூழல் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கின்றது. ஆனால், அது நிரந்தரமானது அல்ல. இது வரலாற்று ரீதியான உண்மை.

இதன் அடிப்படையில் இந்தியாவுடன் நாம் நெருக்கமான அரசியல் சமூக, பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை பலப்படுத்துவது இலங்கையின் தமிழ் மக்களின் பாதுகாப்பானதும் சுபீட்சமானதுமான எதிர்காலத்துக்கு இன்றியமையாதது ஆகும்.

இன்றைய இலங்கை அரசாங்கம் “ஒரு சீனா” கொள்கையை ஆதரித்து வருகின்றது. தாம் அணி சேரவில்லை என்று கூறிக்கொண்டு அமெரிக்க நலன்களுக்கு எதிராக தைய்வானை சீனா ஆக்கிரமிக்க இலங்கை ஆதரவு வழங்கி வருகின்றது. தைய்வான் மீது சீனா கை வைத்த அடுத்த நிமிடமே இந்தியா மாலைதீவுகள், இலங்கை, மேலும் இமாலையப் பிரதேசத்தில் இருக்கும் சீனா சார்பான நாடுகளின் மீது படைகளை அனுப்பும். வடகிழக்கு இந்திய ஆதிக்கத்தின் கீழ் போகக்கூடும் என்று நம்பியே இலங்கை வடகிழக்கில் சுமார் இரண்டு லட்சம் சிங்களப் படை வீரர்களை நிற்க வைத்திருக்கின்றது.

சீனாவின் “ஒரு சீனா” கொள்கையை இலங்கை ஆதரிப்பதும் வருங்கால இந்திய நடவடிக்கைகளை உத்தேசித்தே என்று கூறலாம். ஆகையால் தமிழராகிய நாங்கள் இந்தியாவுடன் சுமூகமான உறவுகளைப் பேணுதல் அவசியமாகின்றது.

மூன்றாவது, இலங்கையிலே தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் எந்தளவுக்கு நாம் எமது நிலத்தை பாதுகாக்கின்றோம் என்பதும் சனத்தொகையை அதிகரிக்கின்றோம் என்பதும் அல்லது தக்கவைத்துக்கொள்கின்றோம் என்பதும் முக்கியமானவை. இந்த இரண்டையும் தக்கவைப்பதில் நாம் பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கின்றோம்.

நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, வடக்கு -கிழக்கில் நாம் எமது அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கும் எமது உரிமைகளை பாதுகாப்பதற்கும் புலம்பெயர் மக்கள் ஒரு பெரும் சக்தியாக இருக்கின்றார்கள் என்பதிலும், இருக்கப் போகின்றார்கள் என்பதிலும் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், அதேசமயம், நாளாந்தம் எமது தாயகத்தில் இருந்து ஏராளமான இளையோர்கள் வெளியேறி செல்வதற்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் காரணமாக இருக்கின்றார்கள் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.

பணம் கொடுத்து முகவர்கள் ஊடாகவும், திருமண பந்தங்களின் ஊடாகவும் தொழிலாளர்களாகவும் பெருமளவு இளையோர்கள் வெளிநாடுகளுக்கு வெளியேறிச் செல்வதாக நான் அறிகின்றேன். இதனைத் தனி நபர்களின் உரிமை, சமூக, பொருளாதார தேவைகளின் நிமித்தமானது என்று நாம் புரிந்துகொள்கின்ற போதிலும், ஏற்கனவே மிகவும் சொற்ப அளவில் உள்ள எமது மக்கட் தொகையில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை நாம் உணர வேண்டும். அபிவிருத்தி அடைந்துவரும் பல்வேறு நாடுகளுக்கும் இவ்வாறான புலம்பெயர்வு ஒரு பொதுவான பிரச்சினை தான். ஆனால் மிகவும் குறைந்த எண்ணிக்கையுடைய ஒரு இனக்குழுமம் என்றவகையில், குறிப்பாக அரசியல் ரீதியாகவும் எமது நிலப்பரப்புக்களை தக்கவைத்துக்கொள்வதிலும் இது பெரும் பின்னடைவை எமக்கு ஏற்படுத்தி வருகின்றது. உள்;க்ஷளூர் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கும் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் தொழில்முனைவு மற்றும் புதுமை மாற்றங்கள் போன்றவற்றை விருத்திசெய்வதற்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதற்கு நிபுணத்துவ ரீதியாகவும், நிதி ரீதியாகவும் புலம்பெயர் தமிழ் மக்கள் முக்கியமான பங்களிப்பினை வழங்க முடியும்.
வெளியேறிச்செல்லும் இளையோர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கும் சனத்தொகைப் பெருக்கத்தை அதிகரிப்பதற்கும் திட்டமிட்ட நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டி இருக்கிறது.

ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் வெளிநாடு சென்றவர்கள் தத்தமது கிராமங்களில் தற்போது வாழும் குடும்பத்தவரின் நான்காவது பிள்ளையை தாங்கள் பராமரிக்க முன்வரலாம். நான்காவது குழந்தை பிறந்தால் தமது பொருளாதார நிலை மேம்படும் என்ற எண்ணத்தை எமது மக்களுக்கு இது கொடுக்கும்.

சமூக, பொருளாதார ரீதியாக எமக்குப் பல சவால்கள் இருக்கின்றன. இவற்றை பட்டியலிட்டு விளக்கும் அளவுக்கு எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் போதாது. ஆகவே, நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், சவால்கள், தடைகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்து, அடக்குமுறைகளுக்கு எதிராகவும், உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் எமது நிலங்களின் வளங்கள், வாய்ப்புக்களை நாம் அடையாளம் கண்டு ஒன்றிணைந்து சரியான முறையில் அவற்றைப் பயன்படுத்தி நாம் தொடர்ந்து போராடுவதிலேயே இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்காலம் மட்டுமன்றி சிங்கள, முஸ்லிம் மக்களின் எதிர்காலமும் தங்கி இருக்கின்றது.

இஸ்ரேலிய அறிஞர் கூறுவதுபோல, எந்த ஒரு நாட்டிலும் இனங்களுக்கு எதிரான பதற்றம் இருக்கும் வரையிலும் அந்த நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு சுபீட்சம் ஏற்படப்போவதில்லை.

இலங்கையில், சுதந்திரம் கிடைத்த நாள் முதல் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இனம் சார்ந்த அடக்குமுறைகள் காரணமான இன முரண்பாடும் தமிழ்மக்களின் தொடர்ச்சியான போராட்டமுமே இன்றைய இலங்கையின் அவல நிலைக்குக் காரணம். தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இருக்கும்வரை தமிழ் மக்கள் சளைக்காது போராடத்தான் போகின்றார்கள். இது ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கும் சுபீட்சத்துக்கும் நல்லது அல்ல. இந்த உண்மையை சிங்கள ஆட்சியாளர்கள் தற்போது சற்று உணர்ந்துள்ளார்கள் என்றே நான் நினைக்கின்றேன்.

அண்மைய அரகலயவின் போது தமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இவை இளைஞர்களால் வெளியிடப்பட்டன என்பது மேலும் ஆறுதலைத் தருகின்றது. ஆகவே எதிர்வரும் காலம் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் சிறப்பானதாகவே அமையும் என்பது எனது நம்பிக்கை .”