நாட்டில் ஜனநாயகத்திற்கு பதிலாக பொலிஸ் ராஜ்ஜியமே உள்ளது – சஜித் பிரேமதாச

sajith நாட்டில் ஜனநாயகத்திற்கு பதிலாக பொலிஸ் ராஜ்ஜியமே உள்ளது - சஜித் பிரேமதாசசமூகத்திலும் அரசியலிலும் வன்முறைகள் உச்சத்தில் இருப்பதால், இந்த வன்முறையை விலக்கி, பேச்சுவார்த்தை, ஒருமித்த கருத்து ஒருமித்த நிலைப்பாடு மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறையை மாணவச் செல்வங்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

220 இலட்சம் மக்களின் வாழ்வுரிமைக்காக ஐக்கிய மக்கள் சக்தி வீதியில் இறங்கிய போது, அரசை மையமாகக் கொண்ட பயங்கரவாதம், மிலேச்சத்தனம் மற்றும் தாக்குதல்கள் எம் மீது நடத்தப்பட்டன. நவீன இலங்கைக்கு இது பொருந்தாது. பேச்சுச் சுதந்திரம், அரசியல், பேரணி,வேலைநிறுத்தம் ஆகியவை ஒவ்வொருவரு குடிமகனின் உரிமை என்றாலும், நமது நாட்டில் ஜனநாயக அரசாங்கத்திற்கு பதிலாக சர்வாதிகார ஆட்சிப்போக்கே உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது, இலங்கையில் பொலிஸ் இராஜ்ஜியமே உள்ளது. அடக்குமுறை, துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்கள் பொதுவாக நடந்து வருகிறது. மக்களின் பல்வேறு பிரச்சினைகளை உடல் ரீதியான பாதிப்பு மற்றும் வன்முறை கும்பல் தாக்குதல்கள் மூலம் தீர்வுகளை தேடுவதாக இருக்கக் கூடாது,மாறாக பேச்சுவார்த்தை, சமரசம், புரிந்துணர்வு மற்றும் உடன்படிக்கை வாயிலாக தீர்வை அணுகுவது உகந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 75 ஆவது கட்டமாக, மாத்தறை அத்துரலிய, ஜே.ஆர்.எஸ்.அல்மேதா மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.