முன்னாள் படை அதிகாரிகளை இணைக்கும் சஜித்தின் முடிவால் கட்சிக்குள் அதிருப்தி

முன்னாள் இராணுவ அதிகாரிகளை கட்சிக்குள் இணைப்பது தொடர்பான சஜித் பிரேமதாசவின் தீர்மானத்தினால் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிருப்தியடைந்திருப்பதாக அறியமுடிகின்றது.

இதனால் ஜனாதிபதியின் பாராளுமன்ற அக்கிராசன உரையை பகிஷ்கரிப்பது தொடர்பில் பேச்சு நடத்த நேற்றுக் காலை சஜித் பிரேமதாச விடுத்த அழைப்பை பங்காளிக் கட்சித் தலைவர்கள் ஏற்கவில்லையென்றும் தெரியவந்தது.

பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இப்போது சஜித்தை தவறாக வழிநடத்துகிறார். படைகளில் ஓய்வுபெற்ற அதிகாரிகளை கட்சிக்குள் இழுக்கும் வேலைகள் அதனடிப்படையில்தான் இடம்பெறுகின்றன. ஆனாலும் கூட்டணி தர்மம் என்ற அடிப்படை யில் இவ்வாறான விடயங்களை எங்களுடன் சற்று ஆலோசித்திருக்கவேண்டும். அவர் அப்படிச் செய்யவில்லை” என்று அவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

“இதனால் நாங்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள் ளோம். இந்த நிலைமை நீடித்தால் அரசியல் ரீதியான தீர்மானங்களை நாங்கள் எடுக்க வேண்டிவரலாம்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியிலுள்ள முஸ்லிம் அரசியல் கட்சியொன்றின் தலைவர் தெரிவித்தார்.

சஜித்தின் தீர்மானங்கள் தொடர்பில் சரத் பொன்சேகா பொதுவெளியில் கூறும் கருத்துகளில் உள்ள நியாயப்பாட்டையும் ஏற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.