அநுர குழுவினா் நாடு திரும்பிய பின்னா் சஜித் குழுவினா் புதுடில்லி பயணம்

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களையும் புதுடில்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசாங்கம் உத்தியோகப்பூர்வ அழைப்பை விடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

தற்போது இந்தியாவில் பயணத்தை மேற்கொண்டுள்ள அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இலங்கை திரும்பிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள் டில்லிக்கு செல்ல உள்ளனர்.

தேசிய மக்கள் சக்திக்கு விடுக்கப்பட்ட அழைப்பை போன்று ஐக்கிய மக்கள் சக்திக்கும் அதிகாரப்பூர்வ பயணத்துக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டுமென அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். இந்த பின்புலத்திலேயே இந்தியாவிடமிருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

எதிர்கட்சித் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உட்பட சில முக்கிய தலைவர்கள் இந்த பயணத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்துக்கு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்து தமக்கு உத்தரவாதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதம் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் இந்தியாவின் அரசியல் நகர்வு ஆளும் கட்சிக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இந்திய அரசாங்கத்தால் விடுக்கப்படும் உத்தியோகப்பூர்வ அழைப்புகள் அக்கட்சிகளின் செல்வாக்கை உள்நாட்டில் அதிகரிக்கும் என்பதுடன், ஆளுங்கட்சிக்கு ஏற்கனவே செல்வாக்கு குறைந்துள்ள தால் இந்த விவகாரம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகின்றது.