இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல – அமைச்சரவைப் பேச்சாளா் காட்டமாக பதில்

இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல. இறையாயுள்ள சுயாதீனமான எமது நாட்டின் நாடாளுமன்றத்துக்கு மாத்திரமே சட்ட திட்டங்கள் தொடர்பான உரிமையும் காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளார் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன.

நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை வந்த அமெரிக்காவின் பொது உறவுகளுக்கான துணை இராஜாங்க செயலாளர் எலிசபெத் அலன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஆகியோர் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் நேற்று முன்தினம் கரிசனை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை என்பது அமெரிக்காவின் பிராந்தியமல்ல. எமது நாடு இறையாண்மையுடைய சுயாதீன நாடாகும். எனவே, எமது நாட்டுக்குள் அரசமைப்பு
சபையில் நிறைவேற்றப்படும் சட்ட திட்டங்கள் தொடர்பான உரிமை – சட்டத்தை தயாரிக்கும் நிறுவனமான நாடாளுமன்றத்துக்கே உரியது.

அதற்கமைய இது தொடர்பான திருத்தங்கள் கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. அவை நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் 14 நாட்களுக்குள் நீதிமன்றத்தை நாட முடியும். நீதிமன்றம் அவை தொடர்பில் பரிசீலனை செய்து திருத்தங்களை பரிந்துரைக்கும். சமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு தேவையும் அரசாங்கத்துக்கு கிடையாது. எவ்வாறிருப்பினும் இனங்கள், மதங்களிடையே ஏற்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான தேவை அரசாங்கத்துக்கு உள்ளது.

தனிநபர் பாதிப்பு உள்ளிட்டவற்றை தவிர்ப்பதே இந்த சட்ட மூலத்தின் நோக்கமாகும். எனவே, எந்தவொரு பிரஜைக்கும் சமூக வலைத்தளத்தின் ஊடாக தத்தமது தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை” என்றும் அமைச்சா் பந்துல தெரிவித்தாாா்.