பசிலின் மல்வானை சொகுசு மனையை கையகப்படுத்தியது நீதி அமைச்சு

malvana house பசிலின் மல்வானை சொகுசு மனையை கையகப்படுத்தியது நீதி அமைச்சுகம்பஹா, மல்வானையில் உரிமையாளர் ஒருவர் அல்லாத சொகுசு ரக வீட்டை அரசாங்க செயற்பாடுகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால் மல்வானையில் 16 ஏக்கர் நிலப்பரப்பில், நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் நீச்சல் தடாகத்துடனான சொகுசு வீடு தொடர்பாக, கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

குறித்த வீட்டை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அதங்கிணங்க, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் உறவினரான நடேசனால் குறித்த நிலம் கொள்வனவு செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின்போது, கம்பஹா மேல் நீதிமன்றில் வாக்குமூலம் அளித்த குறித்த வீட்டை நிர்மாணிப்பதற்கு உதவிய கட்டிடகலை நிபுணர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் வழங்கப்பட்ட பணத்தினால், ஒப்பந்ததாரர் ஊடாக வீடு கட்டப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், குறித்த வீட்டின் ஆரம்ப பணிகளுக்காக பசில் ராஜபக்ஷவின் மனைவி வருகை தந்திருந்த தாகவும் அவர் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், பசில் ராஜபக்ச நீதிமன்றில் சாட்சியமளிக்கையில், மல்வானை பகுதியில் தாம் சொகுசு வீட்டை நிர்மாணிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த வீட்டின் உரிமையாளரைக் கண்டறிய முடியாத நிலையில், இதனை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சொகுசு வீட்டை நீதியமைச்சுக்கு கீழ் கொண்டு வருவதாகவும், அதனை எதிர்காலத்தில் நீதியமைச்சின்  நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துமாறு கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த வீடு அமைந்துள்ள பகுதிக்கு நேற்று களவிஜயம் மேற்கொண்டுள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, குறித்த பகுதிக்கு பொறுத்தமான வகையில், குறித்த கட்டடத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என விரைவில் தீர்மானித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார். இந்த வீடானது, 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றமே வன்முறையின்போது தீக்கிரையாக்கப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.