25,000 இராணுவத்தினரை கைது செய்யும் நடவடிக்கை தொடக்கம் – குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்

விடுமுறைக்கு சென்று முகாம்களுக்கு திரும்பாமல் உள்ள 25,000 இராணுவத்தினரை கைது செய்வதற்கான விசாரணைகளை இராணுவ மற்றும் மாகாண காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு விடுமுறையில் சென்று திரும்பாத இராணுவத்தினரின் எண்ணிக்கை 54,000. அவர்களில் சேவைக்கு திரும்பியோரின் எண்ணிக்கை 10,000. மீண்டும் சேவையில் இணைந்து இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கையும் உள்ளது. 18,000 பேருக்கு பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது என்று இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக 796 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் 179 இராணுவத்தினரும் அடங்குவர் .

கொலைகள், தாக்குதல்கள், ஆயுதங்களை தவறான இடத்தில் வைத்தல், பாலியல் துஷ்ப்பிரயோகம் மற்றும் சிறுவர் துஷ்ப்பிரயோகம் தொடர்பாக 264 இராணுவத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 146 பேர் திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும், இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கையை விட குறைவான எண்ணிக்கையில் கடந்த ஆண்டு 3,000 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.