இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஜெனிவாவில் இன்று ஆராயப்படுகிறது

3 ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம்ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இன்று திங்கட்கிழமை இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

ஜெனிவாவில் நடக்கும் 55ஆவது கூட்டத் தொடர் கடந்த மாதம் பெப்ரவரி 26ஆம் திகதி ஆரம்பமானது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் ரூர்க் தனது வாய்மொழி அறிக்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கவில்லை. அத்துடன், ஒடுக்குமுறை சட்டங்கள் மற்றும் எதேச்சாதிகார போக்கிலான நடவடிக்கைகளால் இலங்கையால் சமாதானம், நல்லிணக்கத்தை அடைய முடியாது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கையின் மனித உரிமைகள் வதிவிட பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக, அண்மைய காலங்களில் முகங்கொடுத்திருக்கும் சவால்களிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில், நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பக்களின் நிலையான தன்மையைப் பேணும் அதேவேளை, பொருளாதார மீட்சி மற்றும் நல்லிணக்கம் சார்ந்த இலக்குகளில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்துறை சார்ந்த விடயங்களில் வழமையான நிலையை அடைந்துகொள்வதில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது என்றும் கூறியிருந்தார்.
திக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதை விடுத்து, அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு துணைபோகும் சில தரப்பினரின் ‘இரட்டை நிலைப்பாடுகளை’ எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

காஸாவில் உள்ள மக்கள் தீவிர அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளனர். அவ்வாறிருக்கையில் அது பற்றிய தீர்மானங்களும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் எங்கே? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையிலேயே இலங்கை விவகாரம் குறித்து இன்றைய தினம் ஆராயப்படவுள்ளது.