சா்ச்சைக்குள் யாழ். பல்கலைக்கழக பட்டிமன்ற நிகழ்வு – விசாரணை நடத்துமாறு உத்தரவு

இன நல்லிணக்கத்துக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான பட்டிமன்றம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கல்வி அமைச்சு கோரியுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற “தமிழ் வேள்வி – 2023” என்ற நிகழ்வில், “ஈழத் தமிழ் சமுதாயத்தில் தற்போது இளைஞர் அமைப்புக்களின் எழுச்சி அவசியமானதா? அவசியமற்றதா ?” எனும் தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற்றிருந்தது. இதில் நடுவராகக் கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபரும் சொற்பொழிவாளருமான ச.லலீசன் கலந்துகொண்டிருந்தார்.

அதன்போது இளைஞர்களிடையே இன நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் தமிழ் இளைஞர்களை எழுச்சிகொள்ளத் தூண்டும் வகையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன என்று கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கல்வி அமைச்சு, பட்டிமன்ற நடுவரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், குறித்த பட்டிமன்றம் யாழ். பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பணித்துள்ளது.