வீரகத்தி பிள்ளையார் காணியில் சட்டவிரோத புத்தர் சிலை – திருமலையில் தொடரும் அத்துமீறல்

99 வீரகத்தி பிள்ளையார் காணியில் சட்டவிரோத புத்தர் சிலை - திருமலையில் தொடரும் அத்துமீறல்திருகோணமலை, மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலயக் காணியில் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி பாரிய புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலை, மடத்தடி பகுதியில், பிரதான வீதிக்கு அருகாமையில் வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் பாரிய புத்தர் சிலை வைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த கட்டுமானப் பணிகளுக்கு நகர சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உட்பட எவ்வித அரச திணைக்களங்களினுடைய அனுமதியும் பெறப்படாமல் சட்டவிரோதமான முறையிலேயே இந்தக் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பாக நகர சபையின் செயலாளர் கடந்த மாதம் 23 ஆம் திகதி சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு கட்டுமானங்களை பார்வையிட்டிருந்தார். எனினும் கட்டுமானம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. 

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு பாரிய புத்தர் சிலை வைக்கப்படவுள்ளது எனவும், ஒருகாலத்தில் அப்பகுதியில் விகாரை அமைக்கப்படலாம் எனவும் தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர். அத்துடன் இந்தப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் தங்கள் காணிக்குரிய ஆவணங்களை வழங்கக்கோரி கடந்த மாதம் 14 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொண்டிருந்தார்கள்.

மடத்தடி பகுதியில் 2019 ஆம் ஆண்டு சட்ட விரோதமான முறையில் தமிழ் மக்களுடைய எதிர்ப்பையும் மீறி ஓர் சிறிய புத்தர் சிலை வைக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸ் நிலையம் உட்பட அரச நிர்வாக மட்டங்களிலும் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதன்போது அது அகற்றப்படும் எனக் கூறப்பட்டது எனவும், எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது அந்த இடத்திலேயே பாரிய புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.