தமிழ்ப் பொது வேட்பாளர் பற்றி தமிழ்க் கட்சிகளுடன் கலந்துரையாடல் – சுரேஷ்

7 தமிழ்ப் பொது வேட்பாளர் பற்றி தமிழ்க் கட்சிகளுடன் கலந்துரையாடல் - சுரேஷ்ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிப்பதற்காகத் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள தமிழ்க் கட்சிகளுடன் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கலந்துரையாடவுள்ளது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் நேற்று வவுனியாா் தனியார் விடுதியில் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைப் பலப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பிரகாரம் மாவட்ட மட்டத்தில் குழுக்களை அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். 8 மாவட்டங்களுக்குமான குழுக்கள் இந்த மாத இறுதியில் அமைக்கப்படும். இதன் பின்னர் அனைத்து மாவட்டக் குழுக்களையும் ஒன்றுகூட்டி கூட்டமொன்றை வவுனியாவில் மே மாதம் 25 ஆம் திகதி நடத்தவுள்ளோம்.

இதனூடாக கிராம மட்டத்தில் எமது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைக் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். அடுத்து நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் தொடர்பாக நாம் கொள்கை ரீதியில் முடிவெடுத்துள்ளமை தொடர்பிலும் ஏனையவர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். தற்போது இவ்விடயம் இங்கும் புலம்பெயர் தேசத்திலும் பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது. சில சிவில் அமைப்புக்களும் இதனை முன்னெடுத்து செல்லும் பணியை செய்கின்றனர்.

அந்தவகையில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள கட்சிகளுடன் பேசவுள்ளோம். அத்துடன் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் முக்கிய அமைப்புக்களுடனும் கலந்துரையாடவுள்ளோம். அதற்காக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ள அணியொன்று செயற்படும். இவர்கள் தமிழரசுக் கட்சி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் பேச விரும்பும் கட்சிகளுடனும் கலந்துரையாடுவார்கள்.

தற்போது இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினை மாத்திரம் மட்டுமே உள்ளது. இனப்பிரச்சினை இல்லாதது போன்றதும் அது முடிந்து விட்டது போன்றதுமாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாயின் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சசினை தீர்ககப்பட்டால்தான் அது சாத்தியம் என்ற விடயம் இருக்கின்றது. அதனைச் சரியாகச் செயற்படுத்துவதற்கு நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். எனவே, இந்த மாத இறுதிக்கிடையில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் கலந்துரையாடுவோம்” என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தாா்.