பொதுத் தோ்தலையே முதலில் நடத்துங்கள் – சஜித் கட்சி எம்.பி.க்களும் வலியுறுத்து

elections1 1 பொதுத் தோ்தலையே முதலில் நடத்துங்கள் - சஜித் கட்சி எம்.பி.க்களும் வலியுறுத்துசெப்டம்பர் 17 க்கும் அக்டோபர் 16 க்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஒரு பிரிவினர் முதலில் பாராளுமன்றத் தேர்தலை விரும்புவதாகத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமது கட்சி இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் கருத்துக்கள் தொடர்ந்து வெளியாகியுள்ளன.

அரசாங்க எம்.பி.க்களுக்கு மேலதிகமாக, கணிசமான எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள் பரந்த வாக்காளர் தளத்தை ஈர்க்கும் சாத்தியக் கூறுகளைக் காட்டி, பொதுத் தேர்தலை விரும்புகிறார்கள்.

இவ்வாறான பின்னணியில், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நடைபெற வேண்டும் என அரசாங்கத்தின் பாராளுமன்றக் குழுவை நம்பவைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் ஆணைக் குழுவின் கூற்றுப்படி, 2025ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு நடத்த வேண்டும். எனினும், அதற்கு முன் பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் அரசுத் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கே உள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்றத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைப்பது மிகவும் சாத்தியமற்றது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஊடகங்களிடம் பேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, ஜனாதிபதித் தேர்தல் ஜூலை மாத இறுதியில் இருந்து ஆகஸ்ட் மாத முற்பகுதிக்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் இலக்கம் 5 இன் விதிமுறைகளின்படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் வேட்புமனுக்கள் கோரப்படும்.