தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் முடிவெடுக்க 19 ஆம் திகதி தமிழரசு மத்திய குழு கூடுகிறது

தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை எடுப்பதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயல்குழு எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளது.

வவுனியாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து மத்திய செயல் குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக கடந்த 4ஆம் திகதி சிவில் அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் பங்கேற்றதமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு இரண்டு வாரகாலஅவகாசத்தை கோரியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே அவர், மத்திய செயல்குழுவை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை ஜனநாயகயக தமிழ்த் தேசியக்கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலை பகிஷ்கரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ் மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்றதும் – பழம்பெரும் கட்சியுமான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்காக பல தரப்பினரும் காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே, அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் இரு வேறுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையிலேயே தமிழ் அரசுக் கட்சி தனது நிலைப்பாட்டை தீர்மானமாக அறிவிப்பதற்காக எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளர் தவிர, கட்சிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றில் நடை பெற்றுவரும் வழக்கு தொடர்பிலும் பேசப்படலாம் என்று தெரியவருகின்றது.