ரஷ்ய – உக்ரைன் யுத்த களத்தில் 600 இலங்கையா்களை தற்கொலை குண்டுதாரிகளாக்க திட்டம் – தயாசிறி தெரிவிப்பு

ரஷ்ய யுத்த களத்தில் உள்ள இலங்கையர்கள் இன்னும் 10 நாட்களுக்குள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படவுள்ளதால் ரஷ்ய யுத்த களத்தில் உள்ள 600 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர உடனடியாக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என எதிரணி எம்.பி.யான தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசேட கூற்றை முன்வைத்த போதே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில் கூறியவை வருமாறு –

“இலங்கையில் ஓய்வு பெற்ற இலங்கை இராணுவத்தினர் ரஷ்யா உக்ரைன் யுத்தக்களத்துக்கு சென்று பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். தாங்கள் யுத்தகளத்துக்கு செல்கிறோம் என்பதை அறியாமலேயே இவர்கள்
அங்கு சென்றுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் தேசிய மட்டத்தில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, ஓய்வு பெற்ற இரு இராணுவ மேஜர் ஜெனரல்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ரஷ்ய உக்ரைன் யுத்தத்தை இன்னும் 10 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்ய இராணுவம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. ரஷ்ய யுத்தக்களத்தில் இணைந்துள்ள இலங்கை இராணுவத்தினரை யுத்தகளத்தில் முன் வரிசை வீரர்களாக அனுப்புவதற்கும், அவர்களை தற்கொலைக்குண்டு தாக்குதல்தாரிகளாக மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. ஆகவே இது பாரதூரமானது.

இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு விசேட குழுவினரை அனுப்பி அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும். சுமார் 600 இலங்கையர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இதனை அலட்சியப்படுத்த வேண்டாம்” என்றார்.