மொட்டு அணிக்குள் உருவாகும் மற்றொரு பிளவு? முக்கிய எம்.பி.க்கள் குழு வெளியேறுவதற்குத் திட்டம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த பிரபல எம்.பிக்கள் குழுவொன்று அரசாங்கத்திலிருந்து விலகி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் எதிர்வரும் வாரங்கள் அரசியலில் தீர்மானமிக்கவையாக இருக்கும் என்பதுடன், அரசியலில் எதிர்பாராத அதிரடித் திருப்பங்கள் சில நடக்கலாம் என்றும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென்று வெளியிட்ட அறிக்கை இதிலொரு அங்கமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இதன்படி ராஜபக்ஷக்களுக்கு மிகவும் நெருக்கமாக செயற்பட்ட பிரபல எம்.பிக்கள் உள்ளிட்ட குழுவினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்பட ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் தொடர்பில் குறித்த குழுவினர் அதிருப்தியில் இருப்பதாகவும், அதன்படியே அவர்கள் சுயாதீன அணியாக செயற்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதித் தோ்தல் தொடா்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் நிலையில் குறித்த குழுவினரின் திட்டங்கள் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்பதனால் இவ்வாறாக அரசாங்கத்தில் இருந்து இவர்கள் விலகினால் ஜனாதிபதியினால் அரசாங்கத்தில் சில முக்கியத் தீர்மானங்களை எடுக்க நேரிடலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.